Monday, March 6, 2017

Sunday Surya Stotra - ஞாயிறு - சூரிய ஸ்துதி

Related image
Image Courtesy : Google Images
ஞாயிறு - சூரிய ஸ்துதி  மகாகவி பாரதியார்

கடலின் மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி இன்பத்தைக் கண்டு
பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலும் தனுள்ளே
ஒவ்வொர் நுண் துளியும் விழியாகச்
சுடரும் நின்றன் வடிவை  உட்கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே.


ஐயனே! சூரிய பகவானே ! உனது கிரணங்களைக் கடலில் வீசியவாறு வேகமாக வானில் ஏறுகிறாய்.
வானில் படரும் உன் ஒளியெனும் இன்பத்தைக் கண்டு பறவைகள் பாடி மகிழ்கின்றன.
பரந்து நிற்கும் கடல், உன் சுடரொளியை உட்கொண்டு தனது ஒவ்வொரு துளியும் விழியாகச் சுடர, வேதத்தைப் பாடிப் புகழ்கின்றது.

என்றன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா !
ஞாயிற்றின் கணொளி தரும் தேவா !
மன்று வானிடைக் கொண்டு உலகெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா !


சூரியனாக ஒளிரும் தேவனே!  வானில் இருந்து உலகத்து உயிர்களெல்லாம் வாழ உன் ஒளிக்கண்ணால் வந்து உற்று நோக்கிக் காக்கும் தேவா !
எனது உள்ளமும், இந்தக் கடலைப் போல் எப்போதும் உன்னடியில் நிற்க வேண்டும். தன் ஒவ்வொரு அணுவும் உனது ஜோதியினால் நிறைந்ததாகி, நன்கு வாழ்ந்திட உதவுவாயாக.

காதல் கொண்டனை போலும் மண் மீதே,
கண் பிறழ் வின்றி நோக்குகின்றாயே !
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டி னாள் இதில் ஐயம் ஒன்றில்லை:
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்றுகின்ற புது நகை யென்னே !
ஆதித் தாய் தந்தை நீவிர், உமக்கே
ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன்.


நிலமகளிடம் காதல் கொண்டவனைப் போல் கண் சிமிட்டாமல் அவளைப் பார்க்கின்றாய். இந்த பூமி தேவியும் உன்னிடம் காதல் மிக கொண்டவள் என்பதில் ஐயமில்லை.
உன் ஒளியைக் கண்டு இவள் முகத்தில் பூக்கும் புன்னகை எவ்வளவு அற்புதமாக உள்ளது.
உலக உயிர்களுக்கெல்லாம் ஆதித்தாயும், தந்தையுமாகிய சூரிய பகவானே, உனக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.
Source Courtesy: Mahakavi Bharathi, Ramakrishna Vijayam

No comments:

Post a Comment