சாதுர்மாஸ்ய
விரத விதானம்
குந்தியின் மைந்தனான அர்ஜூனன்,
ஸ்ரீ கிருஷ்ணரிடம் - "ஹே ! மதுசூதனா ! பகவான் மஹாவிஷ்ணுவின் சயன
(நித்திரை) விரதத்தை எவ்வாறு நியமத்துடன் கடைப்பிடிப்பது என்பதை விவரமாக
தயவுகூர்ந்து கூறுங்கள் " என்று பணிவுடன் கேட்டான்.
அதைக் கேட்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் -
" ஹே அர்ஜூனா, மஹாவிஷ்ணுவின் சயன (நித்திரை) விரதத்தை பற்றி விஸ்தாரமாக
கூறுகிறேன். நீ அதை கவனமாக தியானப்பூர்வத்துடன் கேட்டு கிரகித்துக்கொள்" -
என்றார். பின், கீழ்க்கண்டவாறு கூறலானார்.
"ஒவ்வொரு வருடமும், சூர்ய நாராயணர்
(சூரியன்) கடக ராசியில் பிரவேசிக்கும் பொழுது, மஹாவிஷ்ணு யோக நித்திரையில்
ஆழ்ந்து, சூரிய தேவர் துலாராசியில் பிரவேசிக்கும் பொழுது விழித்து எழுகிறார். அதிக
மாசம் (ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாளும் அடுத்த மாதம் துவங்குவதாகக் கருதும்
சந்திரமானன பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோருக்கு, இரண்டரை வருடங்களுக்கு ஒரு
முறை வருடத்திற்கு பதின்மூன்று மாதங்கள் வரும். அதாவது, ஏதாவது ஒரு மாதத்தில்,
இரண்டு அமாவாசைகள் வரும். இந்த கூடுதல் மாதம் 'அதிக மாதம்' எனப்படும்) வந்தாலும்
இவ்விதிப்படி மாறாமல் நடக்கும்.
இவ்விதிப்படி மற்ற
தேவதைகள் நித்திரையில் ஆழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஆஷாட மாதம்
சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியன்று, விதி முறைப்படி விரதம் அனுஷ்டிக்க
வேண்டும். அன்று பகவான் மஹாவிஷ்ணுவின் பிரதிமையைச் (அதாவது சிலா ரூபத்தில்
மூர்த்தியாக) செய்து, சாதுர்மாஸ்ய விரதத்தை நியமத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று முதலில் விஷ்ணு பிரதிமைக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெள்ளை வஸ்த்ரம்
அணிவித்து பட்டு மஞ்சத்தில் நித்திரைக் கோலத்தில் வைக்க வேண்டும். பின் தூபம்,
தீபம், நைவேத்யத்துடன் பூஜை செய்ய வேண்டும். பூஜையை சாஸ்த்ரம் அறிந்த பண்டிதர்
அல்லது பிராமணர்கள் மூலம் நடத்துவது சிறப்பானதாகும்.
அதன்பின் பகவான் மஹாவிஷ்ணுவிடம் -
"ஹே பகவானே!, நான் தங்களை சயனத்தில் (யோக நித்திரையில்) ஆழ்த்துகிறேன்.
நீங்கள் துயில் கொள்வதால், இந்தப் பிரபஞ்சமே துயிலில் ஆழ்ந்து விடுகிறது. ஹே
பகவானே!, தாங்கள் நான்கு மாதங்கள் நித்திரை கொள்ளும் போது, நான் அனுசரிக்கும்
சாதுர்மாஸ்ய விரதத்தில் எவ்வித பங்கமும், இடையூறும் வராமல் காத்து அருளுங்கள்
" என்று இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்விதமாக விஷ்ணுவிடம் பிரார்த்தனை
செய்து, பின் தூய பாவத்துடன் ஸ்நானம் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். (வட
இந்தியாவில் சில பிரிவினர், ஸ்ரீவிஷ்ணுவை யோக நித்திரையில் சயனிக்கச் செய்வதால்
அவ்வாறு செய்த பின்பே ஸ்நானம் முதலியவற்றைச் செய்கிறார்கள்).
பகவான் மஹாவிஷ்ணுவின் சாதுர்மாஸ்ய
விரதத்தை தொடங்குவதற்கு ஐந்து கால வர்ணனையை கொடுத்துள்ளனர். தேவசயனி
ஏகாதசியிலிருந்து தேவோத்தானி (துயில் எழும்) ஏகாதசி வரை சாதுர்மாஸ்ய
விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். துவாதசி, பூர்ணிமா, அஷ்டமி அல்லது
சங்க்ராந்தியிலிருந்து விரதத்தை தொடங்கி, கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் வரும்
துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும். இவ்விரதத்தினால் சகல பாபங்களும் அழிந்து
மஹாவிஷ்ணுவின் பூரண கடாக்ஷம் கிட்டும். எவரொருவர் ஒவ்வொரு வருடமும் சாதுர்மாஸ்ய
விரதத்தை நியமத்துடன் கடைப்பிடிக்கிறாரோ, அவர் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்,
சூரிய தேவருக்கு இணையாக, தெய்வீகமான விமானத்தில் அமர்ந்து விஷ்ணு லோகத்தை
அடைவர்.
"ஹே ராஜனே!, இவ்விரத நாட்களில்
செய்யப்படும் பிரத்யேகமான தானங்களின் பலன்களை அறிந்து கொள்வாயாக,
எவர், ஸ்ரீவிஷ்ணுவின் ஆலயத்தில் பல்வேறு
வர்ணங்களில் பூ வேலைப்பாடுகள் செய்த (அ) பின்னிய வஸ்திரங்களை சமர்ப்பணம்
செய்கின்றனரோ, அவர்கள் ஏழு ஜென்மங்கள் பிராமணர்களாக பிறவி எடுப்பர்.
சாதுர்மாஸ்ய விரத நாட்களில், யாரொருவர்,
பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தயிர், பால், நெய், தேன் மற்றும் வெல்லம் (மிஸ்ரி) ஆகிய பஞ்ச அமிர்தங்களால் அபிஷேகம்
செய்விக்கிறாரோ, அவர் பாக்கியசாலியாக அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்.
இந்நாட்களில் எவரொருவர் சிரத்தையுடன்
பூமி தானம், ஸ்வர்ண தானம், தக்ஷிணை ஆகியவற்றை பிராமணர்களுக்கு அளிக்கின்றாரோ, அவர்
ஸ்வர்க்க லோகத்தில் இந்திரனுக்கு சமமாக, அனைத்து சுக போகங்களையும் அடைவர்ர்.
எவரொருவர் தங்கத்தால் மஹாவிஷ்ணுவின்
பிரதிமையை செய்து, தூபம், தீபம், புஷ்பம், நைவேத்யத்துடன் பூஜை செய்கிறாரோ, அவர்
இந்திர லோகத்தில் அள்ள அள்ள குறையாத சுக போகங்களுடன் வாழ்வர்.
சாதுர்மாஸ்ய தினங்களில் எவரொருவர்
நித்தமும் விஷ்ணுவிற்கு துளசி தளத்தால் (இலை) அர்ச்சனை செய்கிறாரோ, அவர் இவ்வுலக
வாழ்வுக்குப் பின் ஸ்வர்ண புஷ்பக விமானத்தில் விஷ்ணு லோகத்தை அடைவர்.
சாதுர்மாஸ்ய தினங்களில் எவரொருவர்
பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தூபம், தீபத்துடன் பூஜை செய்கின்றாரோ, அவர் வற்றாத
தன லாபம் பெறுவார்.
தேவசயனி ஏகாதசியிலிருந்து, கார்த்திகை
மாத ஏகாதசி வரை விஷ்ணுவிற்கு பூஜை செய்பவர், இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்
விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தியை பெறுவர்.
சாதுர்மாஸ்ய விரத நாட்களில், மாலையில்
விளக்கேற்றும் வேளையில் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் தீப தானம்
செய்பவர்களும், பிராமணர்களுக்கு தங்க பாத்திரத்தில் வஸ்த்ர தானம் தருபவர்களும்
விஷ்ணு லோகத்தை அடைவர்.
சாதுர்மாஸ்யத்தில், பக்தி பூர்வத்துடன்
பகவானின் திரு நாம ஸ்மரணையுடன் மஹாவிஷ்ணுவின் பாத கமலமே தஞ்சம் என்று சரணாகதி
அடைபவர்கள், பிறப்பு இறப்பு என்னும் இந்த மாய சக்ரத்திலிருந்து விடுதலை அடைவர்.
இவ்விரத காலங்களில், விஷ்ணு ஆலயத்தில்
பிரதி தினம் 108 முறை காயத்ரி மந்திர ஜபம் செய்பவர்கள், தங்களின் பாவங்கள்
உடனுக்குடன் விலகப் பெறுவர்.
எவரொருவர் இவ்விரத காலத்தில்
புராணங்கள், தர்ம சாஸ்த்ரம் ஆகியவற்றை கேட்கின்றாரோ, வேத அத்யனனம் செய்யும்
பிராமணர்களுக்கு வஸ்த்ர தானம் செய்கிறாரோ, அவர் வள்ளல், தனவான், பாண்டித்யம்
மற்றும் யசஸ்வியாக பிறவி எடுக்கும் பேறு பெறுகின்றார்.
பகவான் மஹாவிஷ்ணு அல்லது சிவனின்
திருநாமத்தை இடைவிடாமல் ஸ்மரணம் செய்து, நிறைவில் விஷ்ணு அல்லது சிவ
பிரதிமையை தானம் செய்பவர், தம் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று குணவானாக மாறுவர்.
விரத காலத்தில் நித்தமும் சூரிய
நாராயணருக்கு அர்க்யம் கொடுப்பதுடன் நிறைவில் கோதானமும் செய்பவர் நோய் நொடி அண்டாத
ஆரோக்கியம், தீர்க்காயுள், கீர்த்தி, தனம் மற்றும் பலத்துடன் கூடிய ஆனந்த வாழ்வு
ஆகியவற்றைப் பெறுவர்.
சாதுர்மாஸ்யத்தில் எவர் காயத்ரி மந்த்ர
ஜபத்துடன் தில ஹோமம் செய்வதுடன், சாதுர்மாஸ்ய முடிவில் எள் தானம் செய்கிறாரோ,
அவர் தமது சர்வ பாபங்களும் அழியப் பெறுவதுடன், திட ஆரோக்கியம்,
நன்னடத்தையுள்ள சந்தானப் பிராப்தி கிட்டப் பெறுவார்.
எவரொருவர் சாதுர்மாஸ்ய விரத காலத்தில்
அன்னத்தால் ஹோமம் செய்வதுடன், முடிவில் நெய், கடா, மற்றும் வஸ்த்ரம்
ஆகியவற்றைத் தானம் செய்கிறாரோ, அவர் ஐஸ்வர்யங்களை அடையும் பாக்யம் பெறுவார்.
எவரொருவர் துளசியை மாலையாக
அணிவதுடன், அதை, விரத முடிவில் பகவான் மஹாவிஷ்ணுவின் அம்சமான பிராம்மணருக்கு
தானம் அளிக்கிறாரோ, அவர் விஷ்ணுலோகத்தை அடைவார்.
யார், சாதுர்மாஸ்ய விரத காலத்தில்
பகவான் யோக நித்திரையில் ஆழ்ந்த பிறகு, பகவானின் மஸ்தகத்தில் நித்யம் பால்
அபிஷேகம் செய்வதுடன், நிறைவு நாளில் ஸ்வர்ணத்தால் ஆன தூர்வாவை (அருகம்புல்) தானம்
செய்து பகவானிடம் " ஹே தூர்வே!, பூமியில் உன் வேரானது
விரிந்து பரந்துள்ளதோ, அதே மாதிரி எனக்கும் என்றும் வெற்றியுடன் அமரனாக
வாழும் புத்ர சந்தானத்தை அருள்வீர்" - என்று பிரார்த்தனை செய்கிறாரோ, அவர்
சந்தானப் ப்ராப்தியுடன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைந்து இறுதியில்
ஸ்வர்க்கத்தை அடைவார்.
எவர் பகல் முழுவதும்,
சிவன் அல்லது விஷ்ணுவின் மீது பஜனை பாடல்களை பாடி துதிக்கிறாரோ, அவர் இரவிலும்
கண்விழித்து பாராயணம் செய்த புண்ணிய பலனை பெறுகிறார்.
சாதுர்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு
உன்னதமான த்வனியை (சப்தத்தை) எழுப்பும் மணியை தானம் செய்வதுடன், - "ஹே
பகவானே, ஹே ஜகதீஸ்வரா !, தாங்கள் சகலருடைய பாபங்களையும் நாசம் செய்து அழிப்பவர்.
செய்யக்கூடாத காரியங்களை செய்ததால் விளைந்த என் பாபங்களை நாசம் செய்து என்னை
ரட்சித்து காப்பீர்." - என்று துதித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சாதுர்மாஸ்ய விரத நாட்களில்
ஒவ்வொரு நாளும் பிராமணர்களுக்கு தாம்பூலம் அளிப்பவர்கள் (சரணாம்ருத் பான்)
சகல பாபங்கள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுதலை, நீண்ட ஆயுள், லக்ஷ்மீ யோகம்
ஆகியவற்றை பெறுவர்.
சாதுர்மாஸ்ய காலத்தில் பிரஜாபத்யம்
மற்றும் சாந்த்ராயண விரத வழிமுறைகளின் படியும் விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
பிரஜாபத்ய விரதம் பன்னிரண்டு தினங்களில்
பூர்த்தி செய்கின்றனர். விரத ஆரம்பத்தில் முதலில் மூன்று நாட்கள் பன்னிரண்டு
கவளம் (கைப்பிடி) உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். அடுத்த மூன்று நாட்கள்
இருபத்தாறு பிடி உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். அதை அடுத்த மூன்று
நாட்கள் இருபத்து எட்டு பிடி உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். கடைசி
மூன்று நாட்கள் உணவில்லாமல் உபவாசம் இருப்பது மரபு வழக்கமாக இருக்கிறது.
இவ்விரதத்தை மேற்கொள்வதால், மனதின் நியாயமான ஆசை, அபிலாஷைகள் (மனோகாம்யம்)
பூர்த்தி ஆகிறது.
ப்ராஜபத்ய விரதம் மேற்கொள்ளும் சாதகன்
அவ்விரதத்துடன் சாதுர்மாஸ்ய விரத தார்மீக கடமைகளான பூஜை, ஜபம், தானம்,
சாஸ்த்ரங்கள் அத்யயனம் செய்தல், பஜனை, கீர்த்தனை ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.
ஹே அர்ஜூனா!, இதே மாதிரி சாந்த்ராயண
விரதமும் கடைப்பிடிக்கப் படுகிறது. சாந்த்ராயண விரத வழி முறைகள் சொல்லுகிறேன்.
கேள் - இவ்விரதம் மாதம் முழுவதும் அனுஷ்டிக்கப் படுகிறது. பாபங்களிலிருந்து
நிவர்த்தி பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்விரதம் தொடக்கத்தில் வளர்ந்து பின்னர்
தேய்ந்து நிறைவு பெறுகிறது. விரத வழிமுறைப்படி அமாவாசை அன்று ஒரு கைப்பிடி,
ப்ரதமையில் இரண்டு கைப்பிடி, த்விதீயையில் மூன்று கைப்பிடி உணவு இப்படியாக
பெளர்ணமி தினத்திற்கு முன்பு பதினான்கு கைப்பிடி உணவும், பெளர்ணமி தினத்தன்று
பதினைந்து கைப்பிடி உணவும் உட்கொள்ள வேண்டும்.
பின்னர் தேய்பிறையில், பெளர்ணமி
தினத்திற்கு பின் பதினான்கு, பதின்மூன்று, பன்னிரண்டு, பதினொன்று கைப்பிடி
இவ்வரிசையில் உணவு உட்கொள்ளும் அளவை பிரதி தினம் குறைத்துக் கொண்டு வர
வேண்டும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - "ஹே
அர்ஜூனா!, பிரஜாபத்யம் மற்றும் சாந்த்ராயண விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு,
இவ்வுலகில் தனப்பிராப்தி, பூர்ண ஆரோக்யத்துடன் கூடிய திடகாத்திரமான சரீரம்,
கடவுளின் பரிபூரணமாக க்ருபை ஆகியவை கிட்டுகிறது. தாமிரப் பாத்திரம்,
வஸ்த்ரம் போன்றவற்றை தானம் அளிப்பதும் சாஸ்த்ரத்தில் வழக்கமாக கூறப்பட்டுள்ளது.
சாதுர்மாஸ்யத்தின் நிறைவில் வேத பண்டிதர்கள் அல்லது பிராமணர்களுக்கு மனநிறைவான
தக்ஷிணை அளிப்பதும் வழக்கமாக உள்ளது.
சாதுர்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்தபின்
தான் கோதானம் செய்ய வேண்டும். கோதானம் செய்ய இயலாதவர்கள் அதற்கு பதிலாக வஸ்த்ர
தானம் அவசியம் செய்ய வேண்டும்.
எவரொருவர் சாதுர்மாஸ்ய விரதகாலத்தில்
ஒவ்வொரு நாளும் பிராமணர்களுக்கு நமஸ்கார வந்தனம் செய்கிறாரோ, அவருக்கு வெற்றிகரமான
வாழ்க்கை அமைவதுடன், சகல பாபங்களிலிருந்தும் முக்தி கிட்டுகிறது.
சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு ஆனவுடன்
பிராம்மண போஜனம் செய்விப்பவருக்கு ஆயுள் விருத்தி, தன விருத்தி கிட்டும்.
எவரொருவர் அலங்கரிக்கப்பட்ட கன்றுடன்
கூடிய கபில (பழுப்பு நிற) வகை பசுவை வேதம் ஓதும் பிராமணருக்கு தானம் செய்கிறாரோ,
அவர் ஆயுள் முழுவதும் சக்ரவர்த்தியாக வாழும் பாக்கியம் கிட்டும். மேலும்
அவர், அரசனைப் போன்ற புத்ரர்களைப் பெறுவதோடு ஸ்வர்க்க லோகத்தில் பிரளயத்தின்
முடிவு வரை இந்திரனுக்குச் சமமாக ராஜ்யத்தை ஆள்வார்.
எவரொருவர் சூர்ய பகவான் மற்றும் விக்ன
விநாயகருக்கு தினமும் நமஸ்கார வணக்கம் செய்கிறாரோ, அவர் ஆயுள் வளர்ச்சி, செல்வ
வளர்ச்சி பெறுவர். விக்ன விநாயகரின் கிருபையால் மனோ வாஞ்சித பலனும்
(விரும்பியவற்றை அடைவது) கிட்டப் பெறுவார்.
விநாயகர் மற்றும் சூரிய பகவானின்
பிரதிமையை பிராமணர்களுக்கு தானம் அளிப்பதால் எடுத்த காரியங்கள் ஜயத்துடன்
நிறைவடையும்.
எவரொருவர் இரண்டு ருதுக்களிலும்,
மஹாதேவரின் ப்ரீதிக்காக திலம் (எள்), வஸ்த்ரம் மற்றும் தாமிர பாத்திரம் ஆகியவற்றை
தானம் செய்கிறாரோ, அவர் இல்லத்தில் ஆரோக்கியமான அழகான சிவன் மீது பக்தி பூண்ட
புத்ர பிராப்தியை பெறுவார்.
எவரொருவர் பகவான் விஷ்ணு
யோகநித்திரையில் ஆழ்ந்த பிறகு சக்திக்கேற்றவாறு வஸ்த்ரம், திலம் (எள்)
இவற்றுடன் ஸ்வர்ணதானமும் செய்கிறாரோ, அவரின் அனைத்து பாபங்களும் நாசம் அடைகிறது.
அவர் இவ்வுலகத்தில் இகபோகத்துடன் வாழ்வதுடன் மோட்ச பிராப்தி கிட்டப்
பெறுவார்.
சாதுர்மாஸ்ய விரத நிறைவு ஆனவுடன் எவர்
படுக்கை விரிப்பு அல்லது படுக்கையைத் தானம் செய்கிறாரோ, அவர் அளவில்லாத
சுகம் பெறுவதுடன், குபேரனைப் போன்ற தனவான் ஆகும் யோகத்தையும் பெறுகிறார்.
வர்ஷ ருது காலத்தில் கோபி சந்தன தானம்
பகவானுக்கு ப்ரீதி அளிக்கிறது. சாதுர்மாஸ்யத்தில் ஒரு வேளை உணவு உட்கொள்பவர்,
பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் அளிப்பவர், தரையில் நித்திரை செய்பவர், தமது
அபீஷ்டங்கள் நிறைவேறப் பெறுவர். சாதுர்மாஸ்யத்தில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர்
அனேக நற்பலன்களைப் பெறுவர். சிராவண மாதத்தில் காய்கறிகள், பழம்,
பாத்ரபதத்தில் தயிர், அஸ்வின் மாதத்தில் பால், கார்த்திகை மாதத்தில் பருப்பு
வகைகள் இவற்றை தியாகம் செய்தால் (சாப்பிடாமல் இருந்தால்) நோய், நொடியில்லாத பூரண
ஆரோக்கியம் கிட்டப் பெறுவர்.
சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிப்பதன்
முடிவில் உத்யாபனம் (இறைவனை இருப்பிடத்திற்கு எழுந்தருளச் செய்தல்) செய்ய
வேண்டும். பகவானிடம் நித்திரையை தியாகம் செய்து விழித்தெழ வேண்டுவதற்கு முன் பூஜை
செய்ய வேண்டும். இந்த நல்வேளையில் பாரபட்சமில்லாத (நிர் அபிமானி), வித்வானான
பிராமணருக்கு தன் சக்திக்கு இயன்ற அளவு தானம், தக்ஷிணை அவர் ஆனந்தத்தால் மனநிறைவு
பெறும் அளவு அளிக்க வேண்டும்.
ஹே பாண்டு நந்தனா !, தேவசயனி ஏகாதசி
மற்றும் சாதுர்மாஸ்யத்தின் மஹாத்மியம், மிகுந்த புண்யத்தை அளிக்கும் பலன் கொண்டது.
இதைப்படிப்பதாலும், கேட்பதாலும் மன நோய்களிலிருந்து அமைதி பெறுவதோடு, பகவான்
விஷ்ணுவின் மீதான நிஷ்டையும், பக்தியும் பன்மடங்கு வளரப் பெறுவர்.
கதாசாரம்
சாதுர்மாஸ்ய விரதம், பகவான்
மஹாவிஷ்ணுவின் க்ருபா கடாக்ஷம் பெறுவதற்காக நான்கு மாதங்கள் மேற்கொள்ளப்படும்
விரதமாகும்.
தேவசயனி ஏகாதசியிலிருந்து தேவோத்தானி
ஏகாதசி வரை இவ்விரதத்துடன் இணைக்கப் பெறுவதால் பகவான் விஷ்ணுவின் மீதான நம்முடைய
பக்தி, நம்பிக்கை உறுதி பெறுகிறது.
சாதுர்மாஸ்ய நான்கு மாதமும் பகவான் ஸ்ரீ
ஹரி நித்திரையில் ஆழ்ந்திருப்பதால், அச்சமயம் சுபமங்கள காரியங்களை விலக்க
வேண்டும்.
சுப மங்கள காரியங்கள் தேவோத்தானி
ஏகாதசியிலிருந்து மீண்டும் தொடங்கலாம்.
No comments:
Post a Comment