பிள்ளையாரின் பதினாறு வடிவங்கள் மிகச் சிறப்பானவை என்கின்றன புராணங்கள். அந்த எண்ணிரு கணபதிகளையும் போற்றிடும் இந்தத் துதியை விநாயகர் சதுர்த்தியன்று அவசியம் சொல்லுங்கள். நீங்கள் எண்ணிய எல்லாம் ஈடேறும். கணபதியின் 32 திரு உருவங்கள் மற்றும் அதற்குரிய ஸ்லோகங்கள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்
ஷோடச கணபதி ஸ்தோத்ரம் அல்லது எண்ணிரு கணபதி துதி
வேழ முகத்து விநாயகனே! பால வடிவப் பரம்பொருளே !
பலாவுடன் முக்கனியும் கரும்பும் தரித்த மெய்ப்பொருளே !
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் படைத்தோம்
பால கணபதியே....பலவளங்கள் தந்தருள்வாயே !
தருணசூரியப் பிரகாசனே ! தங்க வடிவானவனே !
ஒரு கொம்பு, நெற்கதிர், பாசக்கயிறு கையில் தரித்தோனே !
பருப்புப் பூரண மோதகம், முக்கனி படைத்தோம்
தருண கணபதியே...தக்க நிதி தந்தருள்வாயே !
பக்த ஜன ப்ரியனே ! பார்வதி புத்ரனே !
பாயசம் நிறை கலயத்தை கரந்தனில் கொண்டோனே !
பாயசம் மட்டுமின்றி பலவகை மோதகம் படைத்தோம்
பக்த கணபதியே...பக்கபலமாய் என்றுமிருப்பாயே !
மூல முதற்பொருளே ! மூஷிக வாகனனே !
வேல், வில், சக்ராயுதமென பதினாறு கரத்தோனே !
பொரி, கடலை, அப்பம், அவல், பாயசம் படைத்தோம்
வீர கணபதியே...வீரம் என் நெஞ்சில் விதைத்தருள்வாயே !
சக்தியைத் தழுவிய வித்தகனே ! சங்கரன் மகனே !
சிந்தூர வர்ண சிங்கார விநாயகனே !
செந்தாமரைப் பூ, தங்க அரளி, அறுகம்புல் சாற்றினோம்
சக்தி கணபதியே....சங்கடங்கள் தீர்த்தருள்வாயே !
வேழ முகம் நாலுகொண்ட வேத விழுப் பொருளே !
புத்தகம், ருத்ராட்சம், தண்டம், கமண்டலம் தரித்தவனே !
பவித்ரமாய் பலகாரங்கள் பலவும் படைத்தோம்
த்விஜ கணபதியே....நவநிதியும் தந்தருள்வாயே !
ஸித்தி புத்தி விநாயகனே ! சித்தத்தினுள் உறைபவனே !
ஸம்ருத்தி தேவியுடனுறை தத்துவ உட்பொருளே !
ஸம்பங்கி பூ மணக்க சாம்பிராணி தூபமிட்டோம்
ஸித்தி கணபதியே...புத்தி தந்து காத்தருள்வாயே !
உச்சிப் பிள்ளையாரே ! உயிரினுள் உறைநாதமே !
உவப்புடன் ஆறுகரத்தினில் வீணை, குவளை, மாதுளம் தரித்தவனே !
உப்புக் கொழுக்கட்டையுடன் உண்ண தீங்கனிகள் படைத்தோம்
உச்சிஷ்ட கணபதியே.....உயர்வான வாழ்வளிப்பாயே !
வினாயகப் பெருமானே ! விமல விக்னேஸ்வரனே !
வில்லுடன் பாணம், கோடரி, சக்ரம் தரித்த பரம்பொருளே !
விருந்தாக மோதகம், விளாம்பழம் படைத்தோம்
விக்ன கணபதியே....வினையாவும் தீர்த்தருள்வாயே !
ஐந்து கரத்தோனே ! ஐம்புலன்கள் ஆள்பவனே !
ஐந்தாவது கரத்தில் தங்கக்குடம் தரித்தவனே !
செம்பருத்தி மலருடன், செங்கமலமும் சூட்டினோம்
க்ஷிப்ர கணபதியே....பத்திரமான வாழ்வளிப்பாயே !
ஏகதந்த வினாயகனே ! ஏழ்பிறப்பிற்கும் ஆதாரமே !
வரமுத்திரை, அபய முத்திரை இருகையில் தரித்தவனே !
எருக்கம்பூ, மாலை சூட்டி, எள் மோதகம் படைத்தோம்
ஹேரம்ப கணபதியே....மனபாரங்கள் குறைப்பாயே !
பேழை வயிறு பெருமானே ! வேழமுக வேந்தனே !
லக்ஷ்மீ தேவியர் இருபுறமும் உறைய அருள்வோனே !
லட்டுடன் பால், தேன், பழ பாயசம் படைத்தோம்
லக்ஷ்மீ கணபதியே... அஷ்ட ஐஸ்வர்யம் அருள்வாயே !
மாயாப்பிறவி மயக்கம் அறுத்த மாமணியே !
மாமலராளுடன் உறை மாதவன் மருகனே !
மலர்மாலை சூட்டி மத்தளம் முழங்க வழிபட்டோம்
மஹாகணபதியே....மங்களங்கள் சேர்ப்பாயே !
கரும்பு விரும்பு விநாயகனே ! கரிமுக கணபதியே !
ஏறு மயிலோன் தமையனே ! ரத்னவர்ண நிறத்தோனே !
விருப்புடனே பொறுப்பாக பூஜைகள் புரிந்தோம்
விஜய கணபதியே...விண் எட்டும் புகழ் தருவாயே !
நவசக்தி விநாயகனே...சிவசக்தி மைந்தனே !
நர்த்தன தோற்றமுடன் பொன்னிறமாய் மிளிர்வோனே !
நவமணிகள் மின்ன, பட்டாடை சாற்றினோம்
நிருத்த கணபதியே....நிம்மதி வாழ்வு அருள்வாயே !
ஒங்காரரூபனே ! ஒளவைபாடிய அரும்பொருளே !
ஒதும்வேதத்தின் உட்பொருள் ஆனோனே !
ஊதாமலரான நீலோற்பலம் சாற்றினோம் !
ஊர்த்துவ கணபதியே....ஊழ்வினைகள் தீர்த்தருள்வாயே !
1 comment:
very nice collection. thank you sooo much.
Post a Comment