Saturday, December 28, 2013

Ekadashi Vrat Katha - Saphala Ekadashi - ஏகாதசி விரத கதை சஃபால ஏகாதசி


Saphala ekadhasi
The Ekādhaśī that occurs during the dark fortnight of the month Pushya is the Saphalaa Ekadhasi.
  • Sri Hari does not get pleased if one does many charity and scarifices. Fasting on ekadhasi will please him to the best.
  • Offering ghee lamp is especially glorious on Saphalaa Ekadhasi.
  • If one can remain awake and alert the entire night long, it bestows the same merit as the performance of austerity for 5000 earthly years.
  • One gets all the merits of observing Ekadhasi fast even without his knowledge or unwillingly due to circumstances.
  • There a wonderfull incident where a man’s life changed totally by fasting Saphalaa Ekadhasi without his knowledge and willingness.    
 [Courtesy:- http://madhwasaints.wordpress.com]



ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே 

 சஃபால ஏகாதசி
(புஷ்ய (தை) மாதம் - கிருஷ்ண பட்ச ஏகாதசி)
வரும் டிசம்பர் மாதம் 29ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, புஷ்ய (தை) மாதம், கிருஷ்ண‌பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை சஃபால ஏகாதசியாக ‌கொண்டாடுவர். சஃபால ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

உன்னதமான மோக்ஷ்தா ஏகாதசி விரத மஹாத்மிய கதையை கேட்டு அதன் சிறப்பான மகத்துவத்தை உணர்ந்த அர்ஜூனன் கிருஷ்ண பரமாத்மாவிடம் - ஹே பகவான்!, மோக்ஷ்தா ஏகாதசி விரத கதையைக் கேட்ட நான் மிகவும் தன்யன்   ஆனேன். தாங்கள் தயை கூர்ந்து தை மாதத்தின் கிருஷ்ண பட்ச ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்" என்றான்.

அர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்," பார்த்தா!  நீ என் மீது கொண்டுள்ள பக்திபூர்வமான நட்பின் காரணமாக உன் கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறேன். இப்பொழுது நான் கூறப்போகும் ஏகாதசி விரத மஹாத்மியத்தைக் கவனமாக கேள்." என்றார். 

"ஹே அர்ஜூனா!, இவ் ஏகாதசி விரதம் பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரீதியானது. ஆதலால் இந்த‌ ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருளை எளிதில் அடையலாம். புஷ்ய (தை) மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் இந்த‌ ஏகாதசி சஃபலா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரபு நாராயணர். ஆகவே அன்று  பிரபு நாராயணருக்கு விதிமுறைகளின்படி பூஜை, புனஸ்காரம் செய்து ஆராதிக்க வேண்டும்."

"ஹே அர்ஜூன்!, எப்படி நாகங்களில் ஆதிசேஷனும், பறவைகளில் கருடனும், கிரஹங்களில் சூர்ய, சந்திரர்களும், யாகங்களில் அஸ்வமேத யாகமும், தெய்வங்களில் பகவான் மஹாவிஷ்ணுவும் மேன்மையானதாகவும், உன்னதமானதாகவும் கருதப்படுகிறதோ, அதே போல், விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் சிரேஷ்டமானதாக கருதப்படுகிறது."

" பாண்டு நந்தனா!, ஏகாதசி விரதத்தைக் அனுஷ்டிப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானவர்களாகிறார்கள். இந்த‌ ஏகாதசி நாளன்று எலுமிச்சை, தேங்காய், ஆகியவற்றை நைவேத்யமாக சமர்ப்பித்து பகவான் நாராயணருக்கு பூஜை செய்ய வேண்டும்."

"சஃபலா ஏகாதசியன்று இரவு கண்விழித்து, விதிமுறைப்படி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியமானது, ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானதாகும்."

" ஹே அர்ஜூனா!, இப்பொழுது சஃபலா ஏகாதசியின் விரதக் கதையைக் கவனத்துடன் கேள். வெகு நாட்களுக்கு முன்பு, சம்பாவதி நகரை, மஹிஷமான் என்னும் பெயர் கொண்ட ராஜா, ஆண்டு வந்தான்.  அவனுக்கு நான்கு புத்ரர்கள். அவர்களில் மூத்தவனான லும்பகன், மிகவும் பாபியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான். பிற பெண்களின் மீது மோகம் கொண்டவனாகவும், விபசாரி இல்லங்களிலும் தந்தையின் செல்வத்தை வியர்த்தமாக செலவழித்து வந்தான். தெய்வம், பிராம்மணர்கள், வைஷ்ணவர்கள் முதலிய நல்லோர்களை நித்தமும் நிந்தனை செய்வது அவன் வேலையாக இருந்து வந்தது. ராஜ்ஜியத்தின் பிரஜைகளும் அவனின் துர்நடத்தையைக் கண்டு மிகவும் வேதனையுடன் இருந்தனர். இளவரசன் ஆனதால் அனைவரும் பொறுமையுடன் அவனின் அராஜகத்தை வேறு வழியின்று சகித்து வந்தனர். ராஜாவிடத்தில் சென்று இளவரசனின் நடத்தையைப் பற்றி முறையீடு செய்ய யாருக்கும் துணிவில்லாமல் இருந்தது. 

ஆனால் இம்மாதிரியான தீய செயல்களை நெடுநாட்கள் மறைக்க இயலாது. அது போல், இளவரசன் லும்பகனின் துர்நடத்தை, அவனின் அராஜகம் எல்லாம் ராஜா மஹிஷமானுக்கு தெரிய வந்தது.   அதை அறிந்ததும், ராஜா மஹிஷமான் மிகவும் கோபம் அடைந்து தன் மைந்தன் லும்பகனைத் தன் நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டான்.  தந்தையே மகனை வெளியேற்றியதைக் கண்டு மற்றவரும் அவனை ஒதுக்கி விலக்கினர். 'என்ன செய்வது ?, எங்கு செல்வது ?', என்று அறியாமல் திகைத்து நின்றான். முடிவாக இரவில் தந்தையின் நகரான சம்பாவதி நகரில் திருடுவது, கொள்ளை அடிப்பது என்று முடிவெடுத்தான். பகலில் ராஜ்ஜியத்தை விட்டு வெளியில் இருந்தான். இரவில் நகருக்குள் சென்று திருடுவது மற்றும் பிற தீய செயல்களை செய்து வந்தான். இரவில் நாட்டின் பிரஜைகளை அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். வனத்தில் எவருக்கும் கெடுதல் இழைக்கா சாதுவான பசு, பிராணிகளை கொன்று புசித்து வந்தான். சில சமயம் இரவில் திருடும் போது மாட்டிக் கொண்டாலும், காவல்காரர்கள் ராஜ பயத்தால் அவனை பிடிக்காமல் தப்ப விட்டனர். 

சில சமயம் நாம் அறியாமல் செய்யும் செயல் நம்மை பகவானின் அருள் கிருபைக்கு பாத்திரமாக்கும். அப்படி ஒரு சம்பவம் இளவரசன் லும்பகனின் வாழ்விலும் நடந்தது. அவன் எவ்வனத்தில் வசித்து வந்தானோ, அது பகவானுக்கு மிகவும் பிரியமான வனமாகும். அவ்வனத்தில் மிகவும் பழைமையான ஒரு அரசமரம் இருந்தது. அவ்வனத்தை மக்கள் தெய்வங்களின் வசிப்பிடமாக நினைத்து வந்தனர். அரசமரங்கள் நிறைந்த வனத்தில் அந்த பழைமையான அரசமரத்தில் கீழ் மஹா பாபியான இளவரசன் லும்பகன் வசித்து வந்தான். சில நாட்கள் கழித்து, புஷ்ய (தை) மாதத்தில் கிருஷ்ணபட்ச தசமி திதியன்று உடுக்க உடை இல்லாமல், குளிர்   தாங்காது லும்பகன் மரத்தின் கீழ் மூர்ச்சையடைந்தான். குளிரை தாங்க இயலாது அவன் கை கால்கள் விறைத்துக் கொண்டன. அன்று இரவை மிகவும் கஷ்டத்துடன் கழித்தான். காலையில் சூரியன் வந்த பின்னரும் அவனின் மயக்கம் தெளியவில்லை.அவன் அப்படியே விழுந்து கிடந்தான். 

சஃபலா ஏகாதசி மத்தியானம் வரை துர்புத்தி, துர்நடத்தை கொண்ட லும்பகன் மயக்கத்தில் விழுந்து கிடந்தான். மத்தியான வேளையில் சூரியன் உச்சியில் வந்ததும், சூரியக்கதிர்கள் உடம்பில் பட, சிறிது நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்து எழுத்தான். தட்டு தடுமாறி எழுந்து, பசி மயக்கம் கண்களை இருட்ட, விழுந்து எழுந்து உணவைத் தேடி அலைந்தான். அன்று பிராணிகளை கொல்ல சக்தியில்லாததால், வனத்தில் கீழே விழுந்து கிடந்த கனிகளை சேகரித்து எடுத்துக் கொண்டு அரசமரத்தின் கீழ் வந்தான். அவ்வமயம் சூரிய அஸ்தமனம் ஆரம்பமாக இருந்தது. பசியால் வாடினாலும், கனிகளை உண்ணாமல் இருந்தான். நித்தமும் பிராணிகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்டு வந்த இளவரசன் லும்பக்கிற்கு, கனிகள் உண்பது எவ்விதச் சுவையும் அளிக்கவில்லை. ஆகவே கனிகள் உண்பதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தான். அவன் அக்கனிகளை அரசமரத்தின் கீழ் வைத்து விட்டு மிகவும் வருத்தத்துடன் - " ஹே பகவானே,!  இக்கனிகளை உனக்கு சமர்ப்பிக்கிறேன். இக்கனிகளால் நீ திருப்தி அடைவாய்" என்று கூறி விட்டு அழ ஆரம்பித்தான். இரவு அவனுக்கு நித்திரை வரவில்லை. இரவு முழுவதும் அழுது கொண்டு இருந்தான். இப்படியாக மஹாபாபியான இளவரசன் லும்பகன் தான் அறியாமல் சஃபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து முடித்தான். அவன் இரவெல்லாம் கண் விழித்து ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தை கண்டு பகவான் மஹாவிஷ்ணு மிகவும் ஆனந்தம் அடைந்து அவனின் அனைத்து பாபங்களையும் அழித்து,  துர்கர்மாக்களிலிருந்து அவனை விடுவித்தார்.

காலையில் அழகான பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு திவ்ய ரதமானது அவன் முன் வந்து நின்றது.  அச்சமயம் ஆகாயத்திலிருந்து அசிரீரி -" ஹே ராஜபுத்ரனே!,  பகவான் நாராயணனின் அருளால் உன் அனைத்து பாபங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இப்பொழுது நீ உன் தந்தையார் வசம் சென்று ராஜ்ய பாரத்தை ஏற்று நடத்து." என்று சொல்லியது.

இளவரசன் லும்பகன் ஆகாயத்தில் அசிரீரி உரைத்ததைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து, " ஹே பகவானே! உனக்கு என் வந்தனம். உன் திருநாமத்திற்கு என் வந்தனம். ஜெய் ஜெய் நாராயணா!" என்று உரத்தகுரலில் கூறினான்.  பின்னர் ரதத்தில் இருந்த அழகிய பட்டாடைகளை அணிந்து கொண்டு தன் தந்தையாரை அடைந்தான்.  தன்  தந்தையிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். நடந்தவற்றை அறிந்து மிகவும் மகிழ்ந்த ராஜா மஹிஷமான் இளவரசன் லும்பகனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து விட்டு வனப்பிரஸ்தம் சென்றான்.  இளவரசன் லும்பகன் ராஜ்ஜியத்தை மிகவும் செம்மையாக சாஸ்திரங்கள் கூறியவழியில் ஆண்டு வந்தான். அவன் மனைவி மற்றும் பிள்ளைகளும் பகவான் நாராயணின் பரம பக்தர்களாக மாறினர். லும்பகனும் நன்கு ஆட்சி புரிந்து வனப்பிரஸ்தம் செய்யும் வேளை வந்ததும், நாட்டை தன் மகனின் கையில் ஒப்படைத்து விட்டு வனவாசம் பூண்டான். அங்கு நித்தமும் பஜனை, கீர்த்தனை, ஜபம் என்று பகவத் தியானத்தில் கழித்தான். முடிவில் பரமபதத்தை அடைந்தான்". 

"ஹே அர்ஜூனா, எவர் ஒருவர் சிரத்தையுடனும், பக்தியுடனும் இந்த சஃபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவரின் அனைத்து பாபங்களும் அழியப் பெறுவதுடன் முடிவில் முக்தியையும் அடைவர்.  சஃபலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை பிறர் சொல்லி கேட்பதாலும் அல்லது படிப்பதாலும்,  ராஜ சூய யாகம் செய்த பலன் கிட்டும்."என்றருளினார் ஸ்ரீகிருஷ்ணர். 

கதாசாரம்
இக்கதையின் மூலம் நமக்கு பகவானின் ஈடு இணையில்லா அருட்கிருபைக்கு சாட்சி கிட்டுகிறது.  உயிரினங்கள் தம்மை அறியாமல் பகவானின் திருநாமத்தை ஸ்மரணம் செய்தாலும், பூரண பலனைப் பெறுகின்றனர். உண்மையில் வருந்தி, தூய இதயத்துடன் பகவானிடம் நம் பாபங்களுக்கு மன்னிப்பை யாசித்தால், பகவான் நம்முடைய அனைத்து பாபங்களையும் மன்னித்து, நமக்கு விடுதலை அளிப்பார். உதாரணமாக, மஹாபாபியான இளவரசன் லும்பகன், ஸ்ரீமன் நாராயணனின் கிருபையால் வைகுந்தப் பிராப்தியை பெற முடிந்தது.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -
  மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு  சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment