Friday, November 29, 2013

Ekadashi Vrat Katha – Utpanna Ekadashi - ஏகாதசி விரத கதை - உத்பன்னா ஏகாதசி


Utpanna Ekadhasi  
Utpanna Ekadhasi
  • This is the day Sri Ekadhasi Devi manifested herself from Sri Vishnu and killed the demon Mura.
  • Sri Ekadhasi Devi (Sri Vishnu’s maha shakthi) has taken a boon from Sri Vishnu, the power to deliver from the greatest sins that person who fasts of this day.
  • One who strictly observes a complete fast on my appearance day (On Ekadhasi), with controlled senses, go to the abode of Lord Vishnu for one billion kalpas after he has enjoyed all kinds of pleasures in this world. 
  • Bathing at Śaṅkhoddhāra, where the Lord killed the Śaṅkhāsura demon, nor the merit one receives upon seeing Lord Gadadhāra directly is equal to one sixteenth of the merit one obtains by fasting this Ekādhaśī.
Neither the merit by doing few yaagas nor giving charity on a Monday when the moon is full nor feeding brahmachari nor by donating land to the needy nor by giving away a virgin girl in marriage to a young, well-educated, responsible man nor educating children properly on the spiritual path, without expecting any reward in return nor giving food grains to the hungry etc can all be measured. But the merit one obtains by observing a complete fast on this Ekādhaśī cannot be measured. The powerful effect of this merit is inconceivable even to the demigods. 
[courtesy:-http://madhwasaints.wordpress.com]

 ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
உத்பன்னா ஏகாதசி
(மார்க்கசீர்ஷ மாதம் - கிருஷ்ண பட்ச ஏகாதசி)
நவம்பர் மாதம் 29 ம் தேதி, வெள்ளிக்கிழமை, மார்க்கசீர்ஷ மாதம், கிருஷ்ண ப‌ட்சத்தில் வரும் ஏகாதசி திதியை உத்பன்னா ஏகாதசியாக‌ கொண்டாடுவர். உத்பன்னா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

ஸ்ரீ சுதர் "ஹே மஹரிஷிகளே, விதிமுறையுடன் கூடிய இந்த ஏகாதசி மஹாத்மியமானது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்டது. பகவானால் அருளப்பட்ட ஏகாதசி மஹாத்மியத்தை பக்த ஜனங்கள் ப்ரேமையுடன் ஸ்ரவணம் செய்கின்றார்கள்.அப்படி பக்தியுடனும், ப்ரேமையுடனும் ஸ்ரவணம் செய்யும் பக்தர்களில் அநேகர் இவ்வுலக வாழ்க்கையை சுக போகங்களுடன் வாழ்ந்து முடிவில் விஷ்ணுலோகத்தை அடைகின்றனர். ஒரு முறை அர்ஜூனன் ஸ்ரீ ஹரி கிருஷ்ணரிடம் -" ஹே ப்ரபோ!, ஏகாதசி விரதத்தின் மஹாத்மியம் என்ன? அந்த விரதத்தை மேற்கொள்வதால் கிட்டும் புண்ணியம் என்ன? விரதம் அனுஷ்டிக்கும் வழிமுறை என்ன? இவற்றைப் பற்றி எனக்கு விரிவாக சொல்லவும் " என்று வேண்டுகோள் விடுத்தான். 

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு பதிலளிக்கையில், " அர்ஜூனா, முதன் முதலில் ஹேமந்த ருது, மார்க்கசீர்ஷ மாதம்,கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். தசமி தினத்தன்று மாலையில் பற்களை சுத்தப்படுத்திக் கொண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இரவில் அன்னம் உட்கொள்ளாமல் உபவாசம் இருத்தல் வேண்டும். ஏகாதசியன்று காலை சங்கல்ப நியமத்தின் பிரகாரம் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.  மதியம்  புனித நதியிலிருந்து எடுத்த மண்ணை உடம்பெங்கும் பூசிக் கொண்டு, பிறகு ஸ்நானம் செய்தல் வேண்டும். ஸ்நானத்திற்குப் பிறகு நெற்றியில் சந்தனத்தால் பொட்டு இட்டுக்கொள்ள வேண்டும். சந்தனப் பொட்டு வைத்துக் கொள்ளும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் கீழே

"अश्‍वक्रान्ते रथक्रान्ते विष्‍णुकान्ते वसुन्धरे, उद्धृतापि वराहेण कृष्‍णेन शतबाहुना ।
मृत्तिके हर मे पाप यन्मया पूर्वक संचितम् , त्वया हतेन पापेन गच्छामि परमां गतिम् ॥

அஸ்²வக்ராந்தே ரத²க்ராந்தே விஷ்ணுகாந்தே வஸுந்த⁴ரே, உத்³த்⁴ருʼதாபி வராஹேண க்ருʼஷ்ணேன ஸ²தபா³ஹுனா | 
ம்ருʼத்திகே ஹர மே பாப யன்மயா பூர்வக ஸஞ்சிதம் , த்வயா ஹதேன பாபேன க³ச்சா²மி பரமாம்ʼ க³திம் ||

ஸநானம் முடிந்தபின் தூப, தீப, நைவேத்யத்துடன் பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும். இரவில் தீபதானம் செய்ய வேண்டும்.

விதிக்கப்பட்ட இந்த சத்கர்மங்களை (நற்செயல்கள்) பக்திபூர்வத்துடன் ப்கவத் சிந்தனையுடன் செய்தல் வேண்டும். அன்று சகலவிதமான சுக போகங்களையும் தவிர்த்து, இரவு முழுதும் கண்விழித்து ஸ்ரீஹரி நாம ஜபம், பாகவத பாராயணம், கீர்த்தனை, பஜன் என்று பகவத் த்யானத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். மனதில் நற்சிந்தனை மற்றும் சாத்வீக எண்ணங்களுக்கு இடமளித்தல் உயர்வினை அளிக்கும். ஏகாதசியன்று சிரத்தையுடன் பிராம்மணர்களுக்கு தானம், தக்ஷிணை அளித்து, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு பெறுதல் வேண்டும். தார்மீக சிந்தனையுள்ளவர்கள் சுக்ல, கிருஷ்ண பட்ச ஏகாதசிகளையும் சமமாக பாவித்து விரதம் இருக்க வேண்டும். அவற்றில் வித்தியாசம் காண்பது உசிதமல்ல. 

சங்கோத்வார் தீர்த்த ஸ்நானம், தரிசனம் செய்வதால் கிட்டும் புண்ணியமானது, மேற்சொன்ன விதிமுறைப்படி ஏகாதசி விரதம் அனுஷ்டித்து கிட்டும் புண்ணியத்தில் பதினாறில் ஒரு பங்கை விட மிகக் குறைவானதாகும். ஹே பாண்டு சிரேஷ்டா, வியதிபாதம் யோகத்தில், சங்கிராந்தி, சந்திர, சூரிய கிரகணங்களில் தானம் கொடுப்பது மற்றும் குருக்ஷேத்திரத்தில் ஸ்நானம் செய்வது இவற்றால் கிட்டும் புண்ணியத்தை, ஒருவர் ஏகாதசி விரதத்தை விரத விதிமுறைப்படி கடைப்பிடிப்பதால் எளிதில் அடைவர்.

ஹே அர்ஜூனா, வேத அத்யனனம் செய்யும் பிராம்மணர்கள் ஆயிரம் கோ (பசு) தானம் செய்வதால் அடையும் புண்ணியத்தை விட பத்து மடங்கு அதிக புண்ணியம் விதிமுறைப்படி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் ஒருவருக்கு கிட்டுகிறது. பத்து உத்தம பிராமணர்களுக்கு போஜனம் அளிப்பதால் கிட்டும் புண்ணியம், ஏகாதசி விரத புண்ணியத்தில் பத்தில் ஒரு பங்கிற்குச் சமமானதாகும். நீரின்றி (நிர்ஜலம்) விரதம் கடைப்பிடிப்பது பாதி பங்கு பலன் ஒரு முறை அன்னம் உண்பதற்கு சமமானது ஆகிறது. 

ஏகாதசி விரதம் மேற்கொள்ளுவதால் மட்டுமே யக்ஞம், தானம், தபம் இவற்றின் பலன் கிடைக்கப் பெறுகிறது. அல்லாவிடில் பலன் தடை பெறுகிறது. இதன் அர்த்தமானது ஏகாதசி விரதத்தை அனைவரும் அவசியம் மேற்கொள்ளுதல் நல்லது. ஏகாதசி விரத நாளன்று சங்கு தீர்த்தத்தை அருந்துதல் கூடாது. புலால் மற்றும் நிராகரிக்கப்பட்ட (निरामिष) உணவை விரத நாளன்று கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன், ஆயிரம் யக்ஞம் செய்ததால் கிட்டும் பலனை விட பன்மடங்கு அதிகமானது.

இதைக் கேட்டு அர்ஜூனன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம்," பரந்தாமா!   அநேக புண்ணிய தீர்த்த ஸ்நானத்தால் கிட்டும் புண்ணியத்தை விட ஏகாதசி விரதத்தால் கிட்டும் புண்ணியம் மிகவும் உத்தமமானது, பவித்ரமானது என்று சொன்னீர்கள். இவை அனைத்தை பற்றியும் விஸ்தாரமாக அடியேனுக்குச் சொல்லவும்." என்று வேண்டினான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," குந்தி புத்ரா! (மைந்தன்), சத்யயுகத்தில் மூர் என்னும் பெயர் கொண்ட மகா பயங்கரமான ராட்சஸன் தோன்றினான். இந்திரன் முதலிய தேவர்களை வெற்றி கொண்டு இந்திர பதவியையும், தேவலோகத்தையும் அபகரித்தான். தேவேந்திரன் பகவான் சங்கரிடம் " ஹே கைலாச‌பதி வாசா, எம்பெருமானே, மூர் என்னும் ராட்சஸனின் கொடுமையினால் பீடிக்கப்பட்டு துக்கத்துடன் மிருத்யுலோகத்தில் எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ராட்சஸனின் மீதான பயத்தால் நாங்கள் மிகவும் துக்கத்தையும், கஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மிகுந்த துக்கமும், அச்சமும் தேவர்களின் தலைவனான என்னையே நடுநடுங்க வைக்கும் போது, மற்ற தேவர்களின் கதியை நான் கூறவும் வேண்டுமா..?  ஆகையால் தேவாதி தேவா, மஹா தேவா! தாங்கள் தயைகூர்ந்து இந்த மகத்தான துக்க நிலையிலிருந்து விடுதலை பெற தக்கதொரு உபாயத்தை அருள வேண்டும்." என்று பிரார்த்தித்தான்.

அதைக் கேட்டு சிவபெருமான்," தேவேந்திரா !, நீங்கள் அனைவரும் பகவான் விஷ்ணுவிடம் சென்று உங்களின் நிலையை எடுத்துச் சொல்லுங்கள். மது-கைடபன் என்னும் அரக்கர்களை சம்ஹரித்த ஸ்ரீ ஹரி நிச்சயம் உங்களின் பயத்திலிருந்து விடுதலை அளிக்கும் உபாயத்தை அளிப்பார்" என்றார்.

இந்திரனும் மற்ற தேவர்களும் சிவபெருமான் ஆணைப்படி, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனின் மீது பள்ளிக் கொண்டருளும் பகவான் விஷ்ணுவின் இருப்பிடமான க்ஷீரசாகரம் என்னும் பாற்கடலை அடைந்தனர். தேவர்கள் புடைசூழ, தேவேந்திரன் காக்கும் திருவான விஷ்ணுவைப் புகழ்ந்து துதி செய்தான். "ஹே தேவாதி தேவா!, தங்கள் துதி பாடுபவர்க்கு யோகங்களை அருளும் யோகவானே, தங்களுக்கு அளவில்லா நமஸ்காரங்கள், ராட்சஸர்களை சம்ஹரிப்பவரே!, எங்களை காத்து அருள்வீர். ஜகநநாதா, தேவர்கள் அனைவரும் மூர் என்னும் ராட்சஸனின் கொடுமையால் பயந்து நடுங்கி தங்களிடம் சரண் அடைந்துள்ளோம்!. அந்த அரக்கன் சொர்க்க லோகத்தைக் கைப்பற்றி எங்கள் அனைவரையும் துரத்தி விட்டதால், நாங்கள் அனைவரும், புவியில் பார்ப்பவர் இரக்கப்படும் நிலையில் வாழ்ந்து வருகிறோம். தாங்கள் தான் எங்களை ரட்சித்து அருள வேண்டும். காத்து அருள்வீர் தேவாதி தேவா!, திரிலோகபதி, எங்களை காத்து அருள்வீர்"  என்று முறையிட்டான்.

தேவர்களின் தயவான வேண்டுகோளை கேட்டதும், கருணையே வடிவான ஸ்ரீஹரி," தேவர்களே, தங்களை வெற்றி கொண்ட அரக்கன் யார்? நீங்கள் அனைவரும் யாரைக் கண்டு பயந்து ப்ருத்வி லோகத்தில் அலைந்து திரிந்து வாழ்கிறீர்கள்?,  சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை கொண்ட இந்திரன் முதலான தேவர்களை வெற்றி கொள்ளும் அளவு அவன் அத்தகைய பலசாலியா? பயமில்லாமல் அவனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறுங்கள்." என்றார்.

பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அம்ருதமயமான  வார்த்தைகளைக் கேட்டு இந்திரன்," பகவானே, பழங்காலத்தில் பிரம்மவம்சத்தில் தோன்றிய நாடீஜங்கம் என்னும் பெயர் கொண்ட ராட்சஸனின் மகனே மூர் . அவன் சந்திரவதி என்னும் பெயர் கொண்ட பட்டினத்தில் வசித்து வருகிறான். அவன் பலசாலியாகவும், எவராலும் வெல்ல முடியாத திறமை கொண்டவனாகவும் இருப்ப‌தால், அகில உலகத்தையும் எளிதில் வெற்றி கண்டு ஆட்சி புரிந்து வருகிறான். தேவலோகத்தில் இருந்து தேவேந்திரனாகிய நான் மற்றும் தேவர்கள் அனைவரையும் நீக்கி விட்டு, ராட்சஸ குலத்தில் பிறந்த அசுரர்களை இந்திரன், அக்னி, யமன், வருணன், சந்திரன் என லோகபாலகர்களாக நியமித்து விட்டான். அவனே சூரியனாக மாறி வெப்பத்தால் ப்ருத்வியை தகித்து வருவதுடன், அவனே மழை மேகமாகவும் மாறி மழையைப் பொழிகிறான். இவ்வளவு பலசாலியான‌ நடுங்க வைக்கக் கூடிய ராட்சஸனை சம்ஹரித்து தேவர்களை காத்து அருள்வீர்." என்றான்.

இந்திரனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் ஸ்ரீ ஹரி," தேவர்களே, கவலை கொள்ள வேண்டாம். உடனடியாக என்னை சந்திரவதி பட்டினத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் எதிரியான அந்த பலசாலி ராட்சஸனை சீக்கிரமே சம்ஹரிப்பேன்.." என்றார்.

இப்படியாக பகவான் விஷ்ணு தேவர்களுடன் சந்திரவதி நகருக்குப் புறப்பட்டார். அங்கு ராட்சஸ ராஜன் மூர் தன்னுடைய வாயு வேக மனோபலத்தால், ஸ்ரீ விஷ்ணு தன்னுடன் யுத்தம் புரிவதற்காக தன் நகருக்கு வருவதை அறிந்து கொண்டான்.அவனும் தன்னுடைய ராட்சஸ மஹாவீரர்களுடன் யுத்த களத்திற்கு வந்து சிங்கத்தைப் போன்று கர்ஜனை புரிந்தான். இரு தரப்பினரும்  பார்த்துக் கொண்டிருக்க, யுத்தம் ஆரம்பம் ஆயிற்று.. 

யுத்த ஆரம்பத்தில் கணக்கில்லா அசுரர்கள் (दानव) ஏராளமான அஸ்திரஙகள், ஆயுதங்கள் அணிந்து தேவர்களுடன் யுத்தம் செய்தனர். ஆனால் தேவர்களின் மனதிலோ பயம் நிரம்பி இருந்தது. அதனால் அவர்கள் அதிக நேரம் ராட்சஸர்களுக்கு எதிராக போர் புரிய இயலாது, போர்க்களத்தை விட்டு ஒட ஆரம்பித்தனர். அச்சமயம்  பகவான் விஷ்ணு, தானே போர்க்களத்தில் தோன்றினார்.  அதைக் கண்டதும் ராட்ச வீரர்களும், ராட்ச ராஜனான் மூரும் அதிக சக்தியுடனும், உற்சாகத்துடனும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவுடன் போர் புரியத் தொடங்கினர். அவர்கள் தங்களுடைய அஸ்திரம் மற்றும் ஆயுதங்களால் அம்பு மழை பொழியத் தொடங்கினர். ஸ்ரீ விஷ்ணு தன் சக்ராயுதத்தாலும், கதையாலும் அவர்களுடைய அஸ்திர வித்தைகளை நாசம் செய்தார். 

யுத்தத்தில் அநேக அசுர வீரர்கள் மடிந்தாலும், அசுர ராஜனாக மூர், அதைக் கண்டு  சற்றும் கலங்காமல் நிச்சலனத்துடன் ஸ்ரீ ஹரியுடன் யுத்தம் புரிந்து வந்தான்.அவனுடைய தலைமுடி கூட அசையவில்லை. எதைப் பற்றியும் கலங்காது யுத்தம் புரிவதில் கவனமாக இருந்தான். பகவான் ஸ்ரீ ஹரி அவனை அழிப்பதற்கென அனுப்பிய வித விதமான அஸ்திர அம்புகளும் அவன் மீது புஷ்ப மழை பொழிவதைப் போல துரித கதியில் நஷ்டம் அடைந்தது. 

அத்தனை விதமான அஸ்திர சஸ்திர வித்தைகளின் ப்ரயோகத்திற்குப் பின்னரும், பகவானால் அரக்கன் மூரை வெல்ல முடியவில்லை. அப்பொழுது இருவரும் மல்யுத்தத்தில் ஈடுபட்டனர். பகவான் விஷ்ணு, தேவர்களுக்காக அந்த அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் வரை போர் புரிந்தும், அரக்கனை வெல்ல இயலவில்லை. முடிவில் ஸ்ரீவிஷ்ணு சாந்தத்துடன் ஒய்வு எடுக்க வேண்டி, பத்ரிகாஸ்ரம‌த்தில் 28 கஜ (कोस) தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் நுழைந்து சயனத்தில் ஆழ்ந்தார்". 

"அர்ஜூனா, ஸ்ரீ விஷ்ணு அக்குகையில் சயனத்தில் ஆழ்ந்திருந்தார். ராட்சஸனும் அவரை பின் தொடர்ந்து வந்து அக்குகையில் நுழைந்து ஸ்ரீ விஷ்ணு சயனத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, அவரைக் கொல்ல ஆயத்தம் செய்தான். அவன் எண்ணமெல்லாம் கடும் பகைவனான ஸ்ரீவிஷ்ணுவை அழித்துவிட்டால் ஆயுள் முழுதும் எவ்வித எதிரி பயமும் (கண்டங்கள் - ஆபத்து) இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்பதிலேயே இருந்தது.ஆனால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை. அச்சமயம் ஸ்ரீவிஷ்ணுவின் உடம்பிலிருந்து திவ்ய வஸ்த்ரங்களுடன், அதி அற்புதமான அழகுடன் மங்கை தோன்றினாள். அவள் அரக்கனை நோக்கி ஒங்கார சப்த கர்ஜனையுடன் அசுரனுடன் போர் புரியத் தொடங்கினாள். அதைக் கண்டதும் மூர் அரக்கன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். இத்தனை பலசாலியான மங்கை எங்கிருந்து தோன்றினாள் என்று எண்ணினான். மங்கையுடன் விடாமல் தொடர்ந்து கடும் போர் புரிந்தான். சில நேரம் கழித்து அம்மங்கை வெகுண்டு குரோதத்துடன் அசுரனின் அஸ்தர- சஸ்திரம் அனைத்தையும் துள் துளாக்கினாள்.  அசுரனின் ரதத்தை உடைத்து எறிந்தாள். அதைக் கண்டு அசுரனும் வெகுண்டெழுந்து யுத்த மரியாதைகளை விட்டு விட்டு பெண் என்றும் பாராமல் அம்மங்கையுடன் மல்யுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

அந்த மங்கை அசுரனை கீழே தள்ளி மூர்ச்சையடையச் செய்தாள். கீழே விழுந்த மயக்க நிலையிலிருந்து விழித்தெழும் முன்னரே, அசுரனின் தலையை கொய்து உடம்பிலிருந்து தனித்து விழச் செய்தாள். சிரம் துண்டிக்கப்பட்டவுடன் அசுரன் பூமியில் விழுந்து மரணமடைந்தான். மீதம் இருந்த அசுரர்கள், தங்கள் ராஜனுக்கு ஏற்பட்ட துக்ககரமான மரணத்தை கண்டு பயத்தால் நடுங்கி, பாதாள லோகத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டனர். 

அப்பொழுது பகவான் நித்திரை கலைந்து விழித்தெழுந்தார். தன் முன்பு, அசுரன் மூரின் இறந்த உடலைக் கண்டு அவருக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. 'இந்த பலசாலியைக் கொன்றவர் யாராக இருக்கக்கூடும்..' என்று எண்ணத் தொடங்கினார். அப்பொழுது மூரைச் சம்ஹரித்த மங்கை ஸ்ரீவிஷ்ணுவின் முன் தோன்றி, இரு கரங்களையும் கூப்பி நமஸ்கரித்து, " பிரபு,  தாங்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், இவ்வரக்கன் தங்களை கொல்வதற்கு தயார் ஆனான். அதைக் கண்டு நான் தங்களின் சரீரத்திலிருந்து தோன்றி அவனை வதைத்தேன்." என்று கூறினாள்.

அதைக் கேட்டதும் ஸ்ரீஹரி, " மங்கையே, உன் செயல் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. அரக்கனை வதைத்த‌தால், மூவுலகிலும் உள்ள தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளாய். அவர்கள் இழந்ததை மீட்கவும் செய்துள்ளாய். ஆகையால் உன் விருப்பத்துக்கு ஏற்ப வேண்டிய வரத்தை கேள். நீ கேட்கும் வரத்தை அளிக்கிறேன். நீ கேட்கும் வரம் எதுவானாலும் அதைப் பூர்த்தி செய்கிறேன்." என்றார். 

மங்கை அதைக் கேட்டு," ஜகதீஸ்வரரே, பிராணிகளோ (மிருகம்) அல்லது தேவரோ, என் விரதத்தை அனுஷ்டித்தால், அவர்களுடைய சகல பாபங்களும் நஷ்டமடைந்து முடிவில் அவர்கள் ஸ்வர்க்கப்பிராப்தி அடைய வேண்டும். என் விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனில் பாதி, ராத்திரியில் கண் விழிப்பவருக்கும், மீதம் பாதி ஒரு வேளை உணவு உட்கொள்பவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். சிரத்தையுடன் பக்திபூர்வத்துடன் என் விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்கள், தங்கள் வாழ்வின் முடிவில் நிச்சயம் விஷ்ணு லோகத்தை அடையும் பிராப்தியையும் தர வேண்டுகிறேன். எவர் ஒருவர் என் நாளில் பகல் அல்லது இரவு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் கடைபிடித்தால், அவர்  தனம் தான்யத்துடன் நிறைந்து வாழவேண்டும். கருணை கூர்ந்து நான் கோரிய இவ்வரத்தை கொடுத்தருளுமாறு வேண்டுகிறேன்." என்றாள்.

ஸ்ரீவிஷ்ணு பதிலளிக்கையில்," கல்யாணி, நீ கோரியபடி வரத்தை அளிக்கிறேன். எனக்கு உன் பக்தர்கள் அனைவரும் சமம். அவர்கள் பூலோகத்தில் பிரசித்தி பெற்று சுக, போகங்களுடன் வாழ்ந்து, முடிவில் விஷ்ணு லோகத்தை அடைவர். மங்கையே!, நீ ஏகாதசி திதியில் பிறந்திருப்பதால், உன் பெயரும் ஏகாதசி என்றே விளங்கப்பெறும். மேலும் நீ என் அங்கத்திலிருந்து தோன்றியதால் (உத்பன்னம்), புவியில் நீ உத்பன்ன ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுவாய் மற்றும் எவர் ஒருவர் உன் தினத்தன்று விரதம் அனுஷ்டிக்கிறாரோ, அவரின் சகல பாபங்களும் அகன்று நஷ்டமடைவதுடன், அவர் முடிவில் முக்தியையும் பெறுவார்.

நீ எனக்கு, திருதியை, அஷ்டமி, நவமி மற்றும் சதுர்த்தசி தினங்களை விட மிகவும் பிரியமான நாளாவாய். உன் விரத பலனானது, சர்வ புண்ணிய தீர்த்தங்களின் பலனை விட மகத்தானதாகும். இது என் வாக்கு." என்று கூறி ஸ்ரீவிஷ்ணு மறைந்தார். ஏகாதசியும் பகவானின் உத்தம வசனத்தை கேட்டு மிகவும் மகிழ்வடைந்தாள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், " பாண்டுவின் மைந்தனே!, ஏகாதசி விரத பலனானது, மற்றெல்லா விரதங்கள் மற்றும் சகல புண்ணிய தீர்த்தங்களின் பலனை விட மிகவும் சிரேஷ்டமானது. ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பவர்களின் எதிரிகளை அதாவது தீயவைகளை நான் பூரணமாக நஷ்டமடையச் செய்வதுடன், விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு மோட்சப் பிராப்தியையும் அளிக்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் தடை மற்றும் தடங்கல்கள் அனைத்தையும் அகற்றி விடுகிறேன்.
இதன் தாத்பர்யம் என்னவென்றால், எனக்கு மிகவும் பிரியமான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கும், பிராணிகளுக்கும், எவ்வித பயமுமின்றி சுகத்தோடு வாழ்க்கையையும், முடிவில் மோட்சத்தையும் அளிக்கிறேன்". 

"ஹே அர்ஜூனா, இதன் மூலம் உனக்கு நான், ஏகாதசி எவ்வாறு பிறந்தது என்னும் விவரத்தை கூறியுள்ளேன். ஏகாதசி விரதம் சர்வ பாபங்களையும் அழித்து சித்தியை அளிக்கக் கூடியதாகும். உத்தமமான பக்தர்கள் இரண்டு பட்சங்களிலும் வரும் ஏகாதசி  திதியை சமமாக பாவித்து விரதம் இருப்பர். அவற்றில் வேறுபாடு பார்ப்பது உசிதமானது அல்ல. எவர் ஒருவர் ஏகாதசி மஹாத்மியத்தை ஸ்ரவணம் அல்லது பாராயணம் செய்கிறாரோ, அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர். இது என்னுடைய சத்யவாக்காகும். இதில் எவ்வித சந்தேகமுமில்லை".

கதாசாரம்
ஏகாதசி பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சாட்சாத் சக்தி அம்சமாகும். பகவானும் அழிக்க இயலாத மூர் என்னும் ராட்சஸனை வதம் செய்த மகத்தான சக்தியின் முன்னால், மனிதர்களின் பாபம் என்னும் ராட்சஸ சக்தி என்ன செய்ய இயலும்?!!!. பாபங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்க்கை கிட்டும் என்பது உறுதி. தேவர்கள்  இழந்ததை மீண்டும் பெற்று சுகத்துடன் வாழச் செய்த ஏகாதசியின் சக்தியால், பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் எதை அளிக்க இயலாது?!!!. சுகம், சம்ருத்தி, சாந்தி மற்றும் மோட்சம் இவை  யாவையும் எளிதில் ஏகாதசி விரதம் மூலம் அடைய முடியும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம:
தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.


No comments:

Post a Comment