King Harichandra who’s life became miserable with his
past sins, with
the advice of Gautama Muni, fasted on
Ajaa ekadhasi and regained
everything.
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
அஜா - அன்னதா ஏகாதசி
(பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்ச ஏகாதசி)
செப்டெம்பர் 1-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பாத்ரபத மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும்
ஏகாதசி திதியை அஜா - அன்னதா ஏகாதசியாக கொண்டாடுவர். அஜா - அன்னதா ஏகாதசியின்
விரத மகிமையை நாம் காண்போம்.
ஸ்ரீ யுதிஷ்டிரர் பரமாத்மா கண்ணனிடம் -
"ஹே ! ஜனார்தனா, இவ்வுலக ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாத்து ரட்சிப்பவரே, பாத்ரபத
மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டெம்பர்) கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயரையும்,
அதன் மகத்துவத்தையும் விரிவாக எனக்கு எடுத்துரையுங்கள்" என்று வேண்டி நின்றார்.
கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரரின் வேண்டுகோளுக்கு
இணங்கி, பதிலளிக்கையில் "ஹே! ராஜன், நான் சொல்லுவதை மிகவும் கவனத்துடன் கேள்,
பாபங்களைப் போக்கும் இந்த புண்ய ஏகாதசி அஜா
ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, புலன்களுக்கு
அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால், பாபத்தின் கர்மவிளைவுகளிலிருந்து விடுபடுவர். அஜா
ஏகாதசியின் மஹிமையை காதால் கேட்டாலே, கேட்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறும்.
ராஜா யுதிஷ்டிரா, இப்புவியில் மட்டுமல்லாது
தேவலோகத்திலும், இந்நாளுக்கு இணையான நன்னாள் வேறு ஒன்றும் கிடையாது. இது சந்தேகமில்லாத
உண்மையாகும்" என்று உரைத்தார்.
பழங்காலத்தில், ஸ்ரீராமர் உதித்த ரகுவம்சத்தில்,
ஹரிச்சந்த்ரன் என்ற ஒரு மஹாராஜா, இவ்வுலகத்தின் மாபெரும் வேந்தராக அரசாண்டு வந்தான். அவன் சத்யத்தையும்,
நேர்மையையும் உயிர் மூச்சாக கொண்டு இருந்தான். அவனுக்கு சந்திரமதி என்று ஒரு மனைவியும்,
லோகிதாசன் என்று ஒரு மகனும் இருந்தார்கள். நாடு சுபிக்க்ஷமாகவும், எதிரிகளின் பயமில்லாமலும்
இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விதியின் விளையாட்டால், ராஜா ஹரிச்சந்திரன் நாட்டை
இழக்க நேர்ந்தது மட்டுமல்லாமல் மனைவியையும், மகனையும் விற்கவும் நேர்ந்தது. விதி, பக்திமானான அரசன் ஹரிச்சந்திரனை நாய்களை
தின்னும் இழி குலத்தவனுக்கு அடிமையாக ஆக்கி, மயானத்தை காவல் காக்கும் பணியில் அமர்த்தியது.
ஒரு அரசனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத இழி தொழிலில் இருந்தாலும், எப்படி சோம
ரசம் வேறு பானங்களோடு கலக்கப்பட்டாலும் தன் சுயத்தன்மையை இழக்காமல் இருக்கிறதோ, அதே
மாதிரி ராஜா ஹரிச்சந்திரனும் தன் சுயதன்மையை இழக்காமல், அழிவில்லாமல் என்றும் நிலைத்திருக்கும்
உண்மையையும், நேர்மையையும் அந்நிலையிலும் விடாமல் கடைப்பிடித்து வந்தான்.
பல ஆண்டுகள் இந்த நிலைமையில் கழிந்தன. ஒரு
நாள் தன்னுடைய நிலையைக் குறித்து அரசன் மிகவும் வருத்தத்துடன், 'நான் என் செய்வேன்?
எங்கு செல்வேன்?, இந்த இழி நிலைமையிலிருந்து எப்படி மீள்வேன்?' என்று கவலைப்பட்டு மிகவும்
வருந்தினான். துக்கசாகரம் என்னும் மஹா சமுத்திரம் அரசனை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக
அவன் ஒரு மஹரிஷியை காண நேர்ந்தது. அம்மஹரிஷியை கண்டவுடன் அரசன் மகிழ்ந்து தனக்குள்,'பிரம்மா
மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே பிராமணர்களை படைத்திருக்கிறார் போலும்' என்று எண்ணினான்.
கௌதமர் என்னும் பெயர் கொண்ட அம்மஹரிஷியைக் கண்டு ராஜா ஹரிச்சந்திரனும் தன்னுடைய பணிவான
வணக்கத்தை தெரிவித்தான். தன் இரு கரங்களையும் கூப்பி கௌதமரை பணிந்து, தன்னுடைய
சோகம் நிறைந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை கூறினான்.
அரசன் ஹரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்ட
கௌதம முனிவர் மிகவும் அதிர்ச்சியடைந்து தனக்குள் "இவ்வுலகை வல்லமையுடன் ஆண்ட மாவேந்தனை,
பிணங்களிலிருந்து துணியை சேகரிக்கும் பணிக்கு கொண்டு வந்த விதியின் துரதிர்ஷ்ட விளையாட்டை"
எண்ணி வருந்தினார். அரசன் ஹரிச்சந்திரன் மீது இரக்கம் கொண்டு அவனுக்கு உபவாச விரதத்தின்
மஹிமையை எடுத்துரைத்தார்.
மேலும் அரசனிடம் " ஹரிச்சந்திரா, பாபங்களை
எல்லாம் நீக்கி, மிகவும் நற்புண்ணிய பலன்களை அளிக்கும் அஜா (அன்னதா) ஏகாதசி, பாத்ரபத
மாத கிருஷ்ணபட்சத்தில் வருகிறது. அஜா (அன்னதா) ஏகாதசி மிகவும் மங்களமானது. அந்நாளில்
மற்ற விதிமுறைகளை பின்பற்றாமல் முடியாமல் போனாலும், உபவாசத்தை மட்டும் கடைப்பிடித்தாலே
அனைத்து பாபங்களையும் நீக்கும் வல்லமை பெற்றது. நீ செய்த பாக்கியம், இன்றிலிருந்து
ஏழாவது நாள் அஜா (அன்னதா) ஏகாதசி திதி. அன்று பகவான் மஹாவிஷ்ணுவை தியானித்து, உபவாசம்
இருந்து, இரவு முழுதும் கண் விழித்து பகவானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிரு. இதனால்,
முற்பிறவியின் பாவச்செயல்களின் தளைகளிலிருந்து விடுபடுவாய்.
ஹரிச்சந்திரா, நான் இங்கு வந்தது, நீ என்னைக்
கண்டது எல்லாம் கூட கடந்த காலத்தில் நீ செய்த புண்ணிய தர்ம காரியங்களின் பலனாகத் தான்.
நீ வருங்காலத்தில் சர்வ மங்களங்களோடும் அனைத்து பாக்கியமும் பெற்று வாழ என் ஆசிகள்"
என்று வாழ்த்தி, அரசனின் கண்களிலிருந்து மறைந்தார்.
ராஜா ஹரிச்சந்திரனும் கௌதம முனிவரின் வார்த்தைகளின்படி
புண்ணியங்களை அளிக்கும் அஜா ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டான். மஹாராஜா யுதிஷ்டிரா,
ராஜா ஹரிச்சந்திரன் அந்நாளில் உபவாசம் இருந்து விரதத்தை சரிவர மேற்கொண்டதன் விளைவாக,
முற்பிறவியின் பாபங்கள் அனைத்து அழியப் பெற்றான்.
அரசர்களில் சிங்கம் போன்றவரே, அஜா ஏகாதசியின்
உபவாச விரதத்தின் செல்வாக்கை நீயும் அறிந்து கொள். அந்நாளில் மேற்கொள்ளும் விரதம் முற்பிறவிகளின்
பாபங்களின் விளைவால் நாம் இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களை உடனடியாக
நீக்கும் வல்லமை கொண்டது. இப்படியாக ராஜா ஹரிச்சந்திரனின் துன்பங்கள் அனைத்தும் சூரியனைக்
கண்ட பனி போல் விலகியது. இவ்விரதத்தின் பலனாக, மாயையால் மாண்டு மீண்டும் புத்துயிர்
பெற்ற தன் மகன், மனைவி ஆகியோருடன் இணைந்தான். சொர்க்க லோகத்தில் வசிக்கும்
தேவர்கள், துந்துபி நாதம் ஒலிக்க, மலர்களை ராஜா ஹரிச்சந்திரன், அவன் மனைவி சந்திரமதி
மற்றும் மகன் லோகிதாசன் ஆகியோர் மீது தூவி வாழ்த்தினர். ராஜா ஹரிச்சந்திரன்,
தான் செய்த விரதத்தின் பலனாக, இழந்த ராஜ்ஜியத்தையும் எளிதில் மீட்டு ஆனந்தத்துடன் வாழ்ந்தான்.
இறுதியில் அவன் மட்டுமல்லாமல், அவனுடைய உற்றார் உறவினர்கள், குடிமக்கள் அனைவரும் அவனுடன்
பக்தி லோகத்தை அடையும் பேறு பெற்றனர்.
"ஒ பாண்டு புத்ரா, ஆகவே இந்த அஜா (அன்னதா)
ஏகாதசியன்று நாளெல்லாம் உபவாசம் இருந்து, இரவு கண் விழித்து மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை
ஜபித்து வந்தால், நிச்சயம் விரத பலனாக தன்னுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கிப் பெற்று,
இறுதியில் பக்தி லோகத்தையும் அடைவர். அந்நாளில், இந்த ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும்
இந்தக் கதையைக் கேட்பவரும், படிப்பவரும் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர்" இவ்வாறு
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, யுதிஷ்டிரருக்கு எடுத்துரைத்தார்.
ப்ரம்ஹ வைவர்த்த புராணம், பாத்ரபத மாத ,
கிருஷ்ண பட்ச ஏகாதசி அதாவது அஜா - அன்னதா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின்
மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.
ஓம் நமோ பகவதோ வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம:
தொடர்புடைய ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை - பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும், ஏகாதசியும் சங்கர நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.
No comments:
Post a Comment