Thursday, July 26, 2012

Sampath Sukra Vara Puja - சம்பத் சுக்ர வார பூஜை

சம்பத் சுக்ரவார விரத பூஜை
சம்பத் சுக்ர வார பூஜை மத்வ சம்ப்ரதாயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழிவழியாக பெரும்பாலான குடும்பங்களில் இதை கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆடி மாதம் அல்லது தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படும் இப்பூஜை வரலக்ஷ்மீ விரத பூஜையின் ஒரு மறுவடிவம் எனலாம். சங்கல்பம், த்யான ஸ்லோகம், கலச ஸ்தாபனம், நைவேத்யம் என சில வழிமுறைகளில் மட்டும் வித்தியாசத்தை காணலாம். இப்பதிவின் முக்கிய நோக்கம் இப்பூஜையின் சிறப்பை அனைவரும் அறியவேண்டும் என்பதே.
மஹாலக்ஷ்மீயின் நிலையான கருணாகடாக்ஷ  பாக்கியத்தை பெற சம்பத் சுக்ர வார பூஜையை ஆடி மாதத்தில் செய்வது மிகவும் உசிதமாக கருதப்படுகிறது.  சம்பத் சுக்ர வார பூஜை செய்து விரதமிருப்பவர்கள் தேவி மஹாலக்ஷ்மீயின் அருளால் புத்திர பாக்கியம் மற்றும் சகல விதமான சம்பத்துக்களும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்க்கை வாழ்வர்.

சம்பத் சுக்ரவார விரத பூஜை மஹிமை
பண்டைக் காலத்தில் பாரதநாட்டின் ஒரு பகுதியை பார்வதிபுரம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு குணபாலன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். பெயருக்கேற்றபடி அவன் குணநலன்கள் கொண்டவனாகவும், குடிமக்களை நேசித்து அவர்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவனாகவும் இருந்தான். அவனுக்கு மனைவியாக வாய்த்த மங்கை நல்லாளின் பெயர் சாந்தாதேவி என்பதாகும். அவளும் அரசனுக்கேற்ற தர்ம பத்தினியாக இருந்தாள். பண்பின் உறைவிடமாகவும், அழகு மிகுந்தவளுமாகவும் இருந்த இல்லாளை அடைந்த மன்னன் கொண்டிருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனது பிரஜைகளும் தாங்கள் இப்படிப்பட்ட குணவானாகிய மன்னனுடைய ஆளுகையின் கீழ் இருக்கிறோமே எனப் பெருமை கொண்டிருந்தனர்.

ரதி மன்மதன் போன்று இணைந்து சந்தோஷ வாழ்வு நடத்திக் கொண்டிருந்த அரச தம்பதியருக்கு நாளாக நாளாக ஒரு குறை தோன்றத் தொடங்கியது. மணமாகி நெடுநாட்களாகியும் தங்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லையே என்பது தான் அக்குறை. ஜ்யோதிடர்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களது ஆலோசனையின்படி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கோதானம், பூதானம் முதலிய தானங்களும் வெகுவாக தரப்பட்டன. ஆனாலும் மகாராணிக்கு பிள்ளைப்பேறு கிட்டாமலேயே இருந்தது. விசேஷ நாட்களில் அரண்மனையில் யாசகர்களுக்கு தர்மம் கொடுப்பது உண்டு. அச்சமயம் பலரும் வரிசையில் வந்து நின்று காத்திருப்பார்கள். அரசி தானே வந்து பிக்ஷை இடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் அவ்விதம் பிக்ஷை இட்டுச் சென்று திரும்பும் போது தனக்குப் புத்திரச் செல்வம் வேண்டும் என்று சிவபெருமான் திருஉரு முன் வேண்டிக் கொள்வாள். ஈசனார் அவளது நிலைக்கு இரங்கி அவள் கோரிக்கையை நிறைவேற்றத் திருவுளம் கொண்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரண்மனை முன் காத்திருந்த யாசகர்கள் வரிசையாக வந்து மகாராணி கையால் கொடுக்கப்பட்ட பிக்ஷையை பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். வரிசையில் காத்திருந்த ஒர் அந்தணர் தம் பிக்ஷா பாத்திரத்தை அரசி முன் நீட்டியவர் சட்டென்று அதை இழுத்துக் கொண்டார். பிறகு மகாராணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்று செல்லத் தொடங்கினார். மகாராணி சாந்தா தேவி திடுக்கிட்டுப் போய் தான் தெரியாது தவறு ஏதும் செய்து விட்டோமா என எண்ணிப் பதைபதைத்து ஒடிச் சென்று அவர் கால் முன் விழுந்து நமஸ்கரித்தவாறே, " சுவாமி, அடியாள் செய்த பாவம் என்ன? ஏன் பிக்ஷையை வாங்காமல் செல்கிறீர்கள்?" எனக் கேட்டாள். அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் " ஒ மகாராணி, உனக்கு புத்திர பாக்கியம் இல்லையே. பிள்ளை இல்லாதவர்களிடமிருந்து நான் பிக்ஷை பெறுவதில்லை" என்று பதிலளித்தார். மன்னன் மனைவி கண்களில் நீர் பெருக "மகாத்மாவே தாங்கள் அறியாதது ஏதும் இல்லை. இந்த அபாக்கியவதியின் வயிற்றில் குழந்தை உண்டாவதற்கு அனுக்கிரகம் செய்யவேண்டும்" என்று இறைஞ்சினாள். அவர் சிந்தை இரங்குவது போல் சிறிது நேரம் கண்மூடி நின்றார். பிறகு அருள் பொழியும் விழிகளைத் திறந்து அவளை நோக்கி " மாது சிரோன்மணியே ! உனக்கு புத்திரன் பிறக்க வேண்டுமானால் நீ உன் கணவன் மூலமாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும்" என்றார். "சொல்லுங்கள் சுவாமி, செய்யக் காத்திருக்கிறேன்." என்றாள் மகாராணி சாந்தா தேவி. "உங்கள் அரண்மனையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியை சீர்படுத்தி அதில் ஐந்து வீடுகள் கட்டி அவற்றை ஐந்து அந்தணர்களுக்கு தானம் கொடுங்கள். அதன் பின் உங்கள் அபீஷ்டம் நிறைவேறும்" என்று மொழிந்து விட்டு அந்தர்த்யானமானார் அவர். அந்தணர் வடிவில் வந்து தனக்கு வாக்கு கொடுத்தவர் எல்லாம் வல்ல இறைவனே என்று உள்ளுணர்வினால் உணர்ந்து கொண்டாள் மகாராணி. அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மன்னனிடம் சென்று செய்தியினை தெரிவித்தாள். சந்தோஷம் கொண்ட அவன் காடுகளை திருத்தி ஐந்து வீடுகளைக் கட்ட ஆணைகள் பிறப்பித்தான். அவ்விதமே வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.  அரசன் ஐந்து அந்தணர் குடும்பங்களுக்கு அவைகளை தானமாக அளிக்க, அவர்களும் அதில் வந்து குடி புகுந்தனர்.

திருக்கயிலையில் இருந்த சிவபிரான் மகாராணிக்கு தான் கொடுத்த வரத்தின் பலனை அளிக்கத் திருவுள்ளம் கொண்டு அன்னை பார்வதியை அழைத்துக்கொண்டு குணபாலன் கோலோச்சும் பதிக்கு உருமாறி வந்தார். அரண்மனையைக் கடந்து ஆரண்யப் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர். பரமேஸ்வரன் தான் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு பார்வதி தேவியை நோக்கி, " தேவி, அதோ குணபாலன் தானமளித்த வீடுகளில் ஐந்து குடும்பங்கள் உள்ளன. நீ அங்கே சென்று உன் மனதிற்குப் பிடித்த வீட்டிற்குள்ளே போய் அவர்கள் தரும் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்வில் வேண்டுவன கிடைக்க வரம் தந்து விட்டு வா" என்றார். பார்வதி தேவி அவ்விதமே ஒரு எளிமையான சுமங்கலி வடிவில் அவ்வீடுகளை நோக்கிச் சென்றாள். முதல் வீட்டு வாசலில் ஒரு பெண் தூங்கி வழிந்த முகத்தோடு கையில் சாணம் கரைத்த பாத்திரத்துடன் வந்தவள் பார்வதியைப் பார்த்ததும் கையிலிருந்த துடைப்பத்தை ஒங்கியவளாக "எட்டிப்போ, இங்கே உனக்கு என்ன வேலை? பிச்சை கேட்க வந்தாயா !" என்று விரட்டினாள்.  தேவி முகத்தில் புன்னகையுடன் அடுத்த வீடு நோக்கி  நகர்ந்தாள். அந்த வீட்டிற்கு உரியவளோ வாசலில் அலங்கோலமாக உட்கார்ந்து தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பேன் பார்த்தவாறு இருந்தாள். முகத்தைச் சுளித்துக் கொண்ட தேவி அடுத்த வீட்டை பார்த்து நடந்தாள். அங்கே வீட்டின் முன்பகுதியில் மாமியாருடன் மருமகள் உரத்த குரலில் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். வசைமாரி சகிக்கக் கூடாததாக இருந்தது. தேவி காதுகளைப் பொத்திக் கொண்டு நடையை எட்டிப் போட்டாள். நான்காவது வீட்டிலும் ஏறக்குறைய இதே நிலை. அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தும் அந்த வீட்டுக்காரி வீடு வாசலை கூட்டிப்பெருக்காமல் புழுக்கிய நெல்லை உரலில் போட்டுக் குத்திக் கொண்டிருந்தாள். பார்வதி அவ்வீட்டையும் கடந்து கடைசி வீட்டிற்குச் சென்றாள். அவ்வீட்டையும் கடந்து கடைசி வீட்டிற்குச் சென்றாள். அவ்வீட்டு வாசல் அழகாகவும், சுத்தமாகவும் கூட்டி மெழுகப்பட்டு உள்ளேயும் செம்மண் கோலங்களுடன் மங்களகரமாக விளங்கியது.

தேவியின் மனம் மகிழ்வினால் நிறைய அவ்வீட்டினுள் நுழைந்தாள். அங்கு ஒர் பெண்மணி துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து அதன் முன் வணங்கியவளாக "என் தாயே!  ஜகன் மாதா! பிருந்தாவன வாஸினீ!  என் வறுமையை விரைவில் போக்கி எங்கள் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்வாய் அம்மா" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். தேவியைக் கண்டதும் எழுந்து வணங்கிய அவள் "அம்மா, வர வேண்டும்!  இந்த ஏழையின் வீட்டிற்கு என்ன காரியமாக வந்தீர்கள்? என விசாரித்தாள். பார்வதி தேவியும் அவள் அளித்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு " பெண்ணே! இங்கே வேறு யாரும் காணப்படவில்லை. உன் கணவர் குழந்தைகள் எல்லாம் எங்கே?  என்று கேட்டாள். அப்பெண், " தாயே எந்த முன் ஜென்மத்தில் செய்த பாபமோ! எங்கள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. தினமும் என் கணவரும் ஒரே பிள்ளையும் ஊருக்குள் சென்று உபாதானம் (பிக்ஷை) பெற்று வருவார்கள். அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் அரைவயிற்றுக் கஞ்சியாவது குடிக்கிறோம். இன்றும் அதற்குத் தான் அவர்கள் போய் இருக்கிறார்கள்." என்றாள்.

பார்வதி தேவி மனம் கனிந்து, "பெண்ணே நான் சொல்கிற பூஜையை தவறாது செய்தால் உங்களது வீட்டில் வறுமை நீங்கி வளமை கொழிக்கும்" என்றவுடன் அப்பெண் "அவ்விதமே செய்கிறேன் தாயே, விபரம் தெரிவியுங்கள்" என்று தேவி முன் பணிந்தாள். பார்வதி தேவி "இதனை சம்பத் சுக்ர வார பூஜை என்று சொல்லுவார்கள். இதனை ஐந்து வருடங்கள் தொடர்ந்து செய்தால் சகல பாக்கியமும் உண்டாகும். பூஜை நடத்த வேண்டிய விதத்தைச் சொல்கிறேன். கேள். முதல் வருடம் புத்திரன் உண்டாவதற்குப் பூரண கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும். அது எப்படி எனில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒர் செம்பு நிறைய சுத்த ஜலம் வைத்து அதன் மேல் மஞ்சளை பிடித்து வைத்து அல்லது மஞ்சள் கொம்பின் குறுக்கே முளைத்திருக்கிற மஞ்சளை வைத்து அம்மனை அதில் ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். இப்பூஜையை ஆடி, தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று எந்தக் கலசம் வைக்கிறார்களோ அந்தக் கலசத்தையே அவ்வருடம் முழுவதும் வைக்க வேண்டும். வருடத்தின் நடுவில் வேறு கலசத்தையும் மாற்றக்கூடாது. இரண்டாம் வருடம் சம்பத் பெருகுவதற்கு சந்தனக் கல்லின் மேல் அம்மனை மஞ்சளில் ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும். மூன்றாம் வருடம் பாக்கியங்கள் பெருகுவதற்கு பால்கலசம் அதாவது செம்பு நிறைய பால் வைத்து மேல் சொன்னபடி அதன் மேல் அம்மனை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும். நான்காம் வருடம் ஆயுள் வளருவதற்கு படி நிறைய அரிசி வைத்து அதன் மேல் அம்மனை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும். ஐந்தாம் வருடம் மாங்கல்யம் பெறுவதற்கு வெற்றிலை நுனி மேல் மற்றொரு வெற்றிலை நுனியைப் போட்டு அதாவது வெற்றிலையின் பின்புற காம்புகள் வெளியே இருக்குமாறு  செய்து அதன் மேல் அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் ஐந்து சுமங்கலிப் பெண்களை சாப்பிடச் செய்து அனுப்புதல் உத்தமம். கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சுமங்கலிகளை சாப்பிடச் செய்து ஒவ்வொருவருக்கும் புஷ்பம், சந்தனம், மஞ்சள், குங்குமம், தக்ஷிணை முதலியவைகளை ஒரு முறத்தில் வைத்து இன்னொரு முறத்தினால் மூடி ஒரு ரவிக்கை துண்டுடன் கொடுக்க வேண்டும். வசதி இருந்தால் புடவை வாங்கிக் கொடுக்கலாம். அப்படிப்பட்ட சுக்ர வார விரத பூஜையை இந்த ஆடி, தை மாத வெள்ளிக் கிழமையில் நான் உனக்கு எடுத்துக் கொடுக்கிறேன். இதே மாதிரி தொடர்ந்து ஐந்து வருடமும் விரதம் இருந்து பூஜித்தாயானால் உனக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்" என்று சொல்லி அவளுக்கு, முதல் பூரண கலசம் வைத்து பூஜை எடுத்துக் கொடுத்தாள். அந்தப் பெண்ணும் வெகு சந்தோஷத்துடன் பூஜை செய்து முடித்தாள்.

பூஜை முடிந்ததும் அப்பெண்மணி தேவியிடம் " தாயே! என்னால் முடிந்தவரை விருந்து வைக்கிறேன். இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்." என்று வேண்டினாள். தேவி "சரி" யெனவும் அவள் உள்ளே சமையல் செய்யச் சென்றாள். பார்வதி தேவி அங்கே ஒர் பானையிலிருந்து ஒரு பிடி அரிசியை எடுத்து வேறோரு பாத்திரத்தில் "அக்ஷய அக்ஷய" என்று சொல்லியவாறே போட்டாள். அதன் பொருள் " என்றும் குறையாதிருக்கட்டும்" என்பதாகும். அப்பாத்திரம் உடனே அரிசியால் நிறைந்தது. தேவி வெளியே சென்று இறைவனுடன் சேர்ந்து கைலாசத்திற்குத் திரும்பினாள்.

பிக்ஷைக்குச் சென்றிருந்த அவ்வீட்டுப் பெண்மணியின் கணவனும், பிள்ளையும் வீடு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் அமைப்பே மாறி இருந்ததைக் கண்டு வியப்படைந்தார்கள். சமையலை முடித்துக் கொண்டு திரும்பிய அப்பெண் வீட்டில் எல்லாப் பண்டங்களும் நிரம்பி வழிந்திருப்பதைக் கண்டு அதிஆச்சர்யம் அடைந்தாள். வந்திருந்த சுமங்கலி சாட்சாத் லோகமாதாவே என்பதையும் புரிந்து கொண்டாள். நடந்த விருத்தாந்தங்களை கணவனிடம் கூறினாள். அனைவரும் தேவியைப் பலவாறாகத் துதித்தார்கள்.

வறுமையில் வாடிய அக்குடும்பத்திற்கு ஏற்பட்ட வளம் பற்றிய செய்தி ஊரெங்கும் பரவி அரண்மனைக்கும் எட்டியது. மகாராணியே நேரில் வந்து அவ்வீட்டுப் பெண்மணியை சந்தித்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்திற்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு புத்திர பாக்கியம் பெறுவதற்காக தானும் அதே போல் சம்பத் சுக்ர வார விரத பூஜையை அனுஷ்டிக்க தீர்மானித்தாள். அதை எப்படி செய்ய வேண்டும் என அவ்வீட்டுப் பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அரண்மனைக்குத் திரும்பி தவறாது சம்பத் சுக்ர வார பூஜையை முறைப்படி செய்யத் தொடங்கினாள். முதல் ஆண்டே அவளுக்கு புத்திர சந்தானம் வாய்க்கப் பெற்றது. வருடக் கடைசியில் அரசிக்கு அழகான ஆண் மகவு பிறக்க, மன்னனும் தனக்கு வாரிசு உதித்தான் என்று மனம் மகிழ்ந்தான். அரச தம்பதியினர் ஈசனையும் இறைவியையும் வாயாற துதித்தும் வழிபட்டும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். பிறகு பன்னெடுங்காலம் அவர்கள் சகல நலன்களுடனும் வாழ்ந்திருந்தார்கள்.


சம்பத் சுக்ரவார விரத பூஜை முறைகள்
இதற்கும் வரலக்ஷ்மீ விரத பூஜைக்கும் அதிகமான வித்தியாசம் கிடையாது. லக்ஷ்மீ ஷோடசோபசார பூஜை முக்கியமானது. ஒரு சில வழக்கங்கள் அதாவது சங்கல்பம், த்யான ஸ்லோகம், கலச ஸ்தாபனம், நைத்வேத்யம் என சில வழிமுறைகளில் வித்தியாசம் காணலாம். அவற்றை அருகிலுள்ள உபாத்தியாரிடமோ அணுகி தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு யாரும் இல்லை என்றால் அருகிலுள்ள வசிக்கும் மத்வ குடும்பத்தினரிடம் விசாரித்தால் அவர்கள் நிச்சயமாக உதவுவார்கள். தேவி பார்வதியே ஒரு அந்தணர் குடும்பத்திற்கு எடுத்துக்கொடுத்த பூஜை என்பதை மறக்க வேண்டாம். ஆகையால் நிச்சயமாக அவர்கள் உதவுவார்கள்.
விரிவான ஷோடசோபசார பூஜை வழிமுறை,
கலசம் மற்றும் பூஜை அலங்காரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

Puja  - Part 1
Puja  - Part 2
Puja - Kalasa Setup

சில குறிப்புகள்
  • வெள்ளிக்கிழமை தோறும் நீராடிய பின்னர், பூஜையைத் தொடங்க வேண்டும்
  • தை அல்லது ஆடி மாதத்தில், ஒரு நல்ல வெள்ளிக்கிழமையாகப் பார்த்து, முதன்முதலில் பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
  • முதன் முதலில் பூஜை தொடங்கும் போது குருவைக் கொண்டே பூஜை நடத்த வேண்டும்
  • பூஜை செய்து வைக்க குரு (அ) உபாத்தியாயர் கிடைக்கவில்லை என்றால், வீட்டில் உள்ள மூத்த சுமங்கலியை குருவாக ஏற்று அவர் எடுத்துக்கொடுக்க அவர் மேற்பார்வையில் இந்த பூஜையை மஹாலக்ஷ்மீயை வேண்டிக்கொண்டு செய்யலாம். 
  • இங்கு பூஜை முறைகள் கொடுக்கப்பட்டிருப்பது அனைத்தும் மறந்துவிடாமல் செய்ய ஒரு வழிகாட்டியாக இருக்கத்தான்.
  • பூஜை தொடங்குவதற்கு முன்பு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பிள்ளையார் பூஜை செய்த பிறகு, லக்ஷ்மீ பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
  • லக்ஷ்மீ அஷ்டோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்ய வேண்டும். "ஓங்காரத்தைச் சொல்லாமல் நாமத்தை மாத்திரம் சொல்லி அர்ச்சிக்கவேண்டும்." அவகாசமிருந்தால், ஸஹஸ்ரநாமம் செய்யலாம்.
  • புஷ்பம் அதிகம் கிடைக்காவிட்டால், மஞ்சள் அக்ஷதையைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
  • குறைந்த பக்ஷம் பாயஸமாவது நைவேத்தியம் செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பூஜை செய்த பிறகு, ஐந்து சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட வேண்டும். வசதியில்லா விட்டால், ஐந்து சுமங்கலிகளுக்குக் குறையாமல் சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, குறைந்தது ஒரு ரூபாயாவது தக்ஷணை கொடுத்தனுப்ப வேண்டும். ஆனால் ஐந்தாவது வருடம் கடைசி வெள்ளிக்கிழமை பூஜை முடியும் போது சம்பத் சுக்ரவாரக் கதையில் சொல்லியுள்ளபடி நடக்க வேண்டும்.
  • பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு முதலியன கொடுத்து அனுப்பிய பிறகு, லக்ஷ்மீ அஷ்டோத்திரமும், லக்ஷ்மீ அஷ்டகமும், சம்பத் சுக்ர வாரக் கதையும் கட்டாயம் படிக்க வேண்டும். நேரமில்லாவிடில் இரவு அஸ்தமித்தவுடன் படிக்க வேண்டும். படித்த பிறகு பழம், கற்கண்டு ஏதாவது நைத்வேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • பூஜை செய்யும் நாளில் இரண்டு வேளையும் உணவு அருந்தலாம்.
  • பகலில் பூஜைக்குப் பிறகும், இரவு கற்பூர ஆரத்தி எடுத்த பிறகும், லக்ஷ்மீயைப் பற்றிய பாடல்கள் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • இரவில் ஆரத்தி எடுத்த பிறகு தான் மடியோடு கலசத்தை யதாஸ்தானம் செய்து, அதில் உள்ள அரிசி, பால், வெற்றிலை முதலியவற்றைத் தன் குடும்பத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விசேஷமான சம்பத் சுக்ர வார பூஜையை செய்து அன்னை மஹாலக்ஷ்மீயின் அருளால் எல்லா சம்பத்துக்களையும் பெற்று வளமாக வாழ பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment