Monday, May 17, 2010

ஐஸ்வர்யங்கள் தரும் அஷ்டலட்சுமி திருக்கோயில்


ஐஸ்வர்யங்கள் தரும் அஷ்டலட்சுமி திருக்கோயில்
வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் லட்சுமியின் ரூபங்கள் 16. இந்த 16 ரூபங்களும் "சோட லட்சுமிகள்" என்றழைக்கப்படுகின்றனர். இந்த 16 உருவங்களும் ஒருமுகப்படுத்தப்பட்டு அஷ்டலட்சுமிகளாக சுற்றிலும் தனித்தனி சந்நிதிகளில் அமைந்திருக்க, இவர்கள் அனைவரும் சேர்ந்த ஏக லட்சுமியாக, "மகாலட்சுமி" மூலக்கருவறையில் அமர்ந்திருக்கிறாள். மகாலட்சுமியுடன் “நின்றான்” கோலத்தில், மகாலட்சுமியுடன் மஹாவிஷ்ணு திருமணக் கோலத்தில் மூலக் கருவறையில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சி

கருவறையின் மேல் அஷ்டாங்க விமானம் எனும் எட்டு திசைகளில் எட்டு அங்கங்கள் கொண்ட திருக்கோயில் அமைப்பில் இரண்டு தளங்களில் திருமகளின் அதிரூப எட்டு ரூபங்களும் காட்சி தருகின்றன. இங்கே இடம் பெற்றிருக்கும் இந்த அஷ்டாங்க விமானம் திருக்கோயில் கட்டிட அமைப்பு ஆகம முறைப்படி அமையப்பெற்ற ஒரு கட்டிடக் கலை மூலவரிடமிருந்து படியேறி சென்றபடியே எட்டுத் திக்குகளிலும் ஒவ்வொரு லட்சுமியையும் தரிசிக்கும் வழிவகையே இந்த அஷ்டாங்க விமானக் கட்டிடக்கலை.

இனி அஷ்டலட்சுமிகள் மற்றும் ஒவ்வொரு லட்சுமிக்கும் உண்டான சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்
ஆதிலட்சுமி
ஆதி அந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமி என்றழைக்கப்படுவது. இத்திருக்கோயிலின் தரைத் தளத்தில் தெற்கு முகமாக அஷ்டமங்கலப் பொருட்களுடன் கூடிய பீடத்தில் ஆதிலட்சுமி அருள் புரிகிறாள். இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.
தான்யலட்சுமி
தரைத் தளத்தில் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும் கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள்.  இவள் உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.

தைரியலட்சுமி
மனத்திற்கு தைரியத்தைக் கொடுத்து தன்னம்பிக்கையூட்டுபவள். தைரியலட்சுமி தரைத்தளத்தில் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். வடக்கு திசை வெற்றியின் திசை என்பதால் இந்த தைரியலட்சுமிக்கு வீரியம் அதிகம். செய்யும் காரியங்களில் வெற்றியும், மனோதைரியமும் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தேவி இவள்.

சந்தானலட்சுமி
திருக்கோயிலின் முதல் தளத்தில்  தெற்குமுகமாகச் சந்தானலட்சுமி வீற்றிருக்கிறாள். சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள்.  சந்ததி வளர குழந்தைச் செல்வம் தந்து வரமளிப்பதால் சந்தானலட்சுமி என்று பெயர் பெற்றாள்.  சடையுடன் கிரீடத்தைத் தரிசித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம்  ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியபடியும், விளக்கைக் கையிலேந்தியும்  நின்று கொண்டிருக்கின்றனர்.  இவளை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும்.

விஜயலட்சுமி
திருக்கோயிலின் முதல்தளத்தில் மேற்கு முகமாக  அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜயலட்சுமி. விஜயம் என்றாலே ஜெயம். வெற்றி என்று பொருள். தன்னை வணங்கி காரியம் தொடங்குபவர்களுக்கு வெற்றி, ஜெயம் என்கிற வார்த்தைகளைத் தவிர வேறு அருள்வதில்லை இந்த தேவி.
                       
வித்யாலட்சுமி
கலைவாணியும் லட்சுமியும் இணைந்து நிற்பவள்தான் இந்த வித்யாலட்சுமி. திருக்கோயிலின் முதல் தளத்தில் வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள் இவள். வித்யை என்பதற்கு ஞானத்தின் மூலம் கற்கும் வித்தைகள் என்று பொருள். இந்தத் திருமகளை வழிபட்டால் கல்வியும் வளரும், செல்வமும் வளரும்.

கஜலட்சுமி
திருக்கோயிலின் முதல் தளத்தில் கஜலட்சுமி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். ஒரே கல்லில் ஆன இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற, தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கஜம் என்றால் யானை என்று பொருள். இருபுறமும்  யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது. கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என்றும் அழைப்பதுண்டு.  கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசல் நிலைப்படியில் பெரும்பாலும் காணலாம். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற விரும்புபவர்கள் கஜலட்சுமியை வணங்குங்கள்.

தனலட்சுமி
செல்வங்களை அள்ளியள்ளித் தரும் தனலட்சுமி திருக்கோயிலின் இரண்டாவது தளத்தில் கிழக்கு முகம் நோக்கி அமர்ந்திருக்கிறாள். இடது கரத்தில் கெண்டி வைத்துக் கொண்டும், வலது கரத்தில் தாம்பூல வெற்றிலை கொண்டும் காட்சி தந்தபடி அமர்ந்திருக்கிறாள். தன்னை நம்பி வருபவர்களுக்கு தனத்தை அளிக்கும் பாவனையே இந்த பாவனை.

இது தவிர, கருடாழ்வார், கமல விநாயகர், தசாவதாரங்கள், குருவாயூரப்பன், ஆஞ்சனேயர் என்று தனி சந்நிதிகள் உண்டு. குருவாயூரப்பன் சந்நிதியில் குழந்தைகளுக்கு சோறுட்டும் விழாக்கள் சிறப்பாக நடக்கிறது.

விழாக்கால விசேஷங்கள்
நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் லட்சுமி திருப்பிரகார வலம் வருகிறாள். கடைசி நாள் மஹாவிஷ்ணு குதிரை வாகனத்தில் சென்று சமுத்திரத்தில் அம்பு விடுதல் நடக்கிறது.

தீபாவளி திருநாள் அன்று சதுர்தசியில் பிறந்த லட்சுமி அமாவாசையன்று பெருமாள் கரம் பிடிக்கிறார். எனவே அன்று ஸ்ரீசுத்தயோகலக்ஷ்மி குபேரபூஜை நடைபெறும்.

கோகுலாஷ்டமி தினத்தன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வைத்து மாலையில் உறியடித்திருவிழா நடக்கிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று பெருமாள் சொக்கப்பனை கொளுத்துவார்.

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளிலும், அதிகாலையில் தனுர்மாத பூஜை நடைபெறும். சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் நடைபெறும்.

மாசி மாதம் 'கடலாடுதல்' என்கிற பிரமாண்ட நிகழ்ச்சியில் (விஷ்ணுவின்) செல்வர்  கடல் நீராடுவாராம். அதற்குமுன்  கடவுளுக்கு நடப்பது போலவே அனைத்து பூஜை புனஸ்காரங்களும் கடலுக்கும் வெகுஜோராக நடக்கும்.

வரலட்சுமி பூஜையில் சுமங்கலி பெண்களுக்கு மங்கல தாம்பூலம் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

சில சுவாரஸ்யமான செய்திகள்
தசாவதாரச் சிறப்பம்சம்
பெருமாளின் தசாவதாரங்களில் எந்த அவதாரத்திற்கும் நவக்கிரஹ தோஷம் இல்லை. எனவே நவக்கிரஹ தோஷம் உள்ளவர்கள், தங்களை எந்தக் கெடுதலும் தீண்டக்கூடாது என்று, இந்த தசாவதார பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள் என்பது சிறப்பம்சம்.

அஷ்டாங்க விமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் லட்சுமியின் தோற்றம், லட்சுமி அருள்பாலித்த வரலாறுகள், லட்சுமியைப் போற்றித் துதித்த மகான்கள் ஆகியோரின் திருவுருவங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

மூலக்கிரஹத்தில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் மற்ற விஷேச தினங்களிலும் மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் விதவிதமான அலங்காரங்கள் உண்டு. மற்ற தெய்வங்களையும் பக்தர்கள் விரும்பும்  நாட்களில் வழிபாட்டு நேர்த்திக்கடனாக விஷேச அபிஷேகங்கள் காண அனுமதி உண்டு. இத்திருக்கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் உண்டு.

திருமண கோலத்தில் மகாலட்சுமி நாயகனுடன் நிற்கும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் முடியும் என்பது நம்பிக்கை. தவிர வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் தருகிறார்கள் அஷ்டலட்சுமிகளும்.

இந்தத் திருக்கோயிலே ஒம்கார க்ஷேத்திரம் என்பதாலும், அருகிலேயே கடல் இருப்பதாலும், தனியாக திருக்குளம் என இந்த திருக்கோயிலுக்கு அமைய தேவையில்லை என்பது தனிச்சிறப்பு.

வில்வ விருட்சமே இங்கு தலமரம்

முக்கூர் சீனிவாச வரதாச்சாரியாரால் அஷ்டலட்சுமி தோத்திரப்பாடல் பாடப் பெற்றுள்ள தலம்

சக்தி வழிபாட்டில் ஒர் அம்சமாக லட்சுமியை முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்ட சிறப்புமிக்கத் திருக்கோயில் என்பதும் இதன் தனிச்சிறப்பு.

Source: Snehithi Magazine and Other Newspapers

2 comments:

துளசி கோபால் said...

கோவிலுக்குப் பக்கத்திலே குடி இருந்தோம். கோவிலைப் பற்றி எழுதலாமுன்னு படங்கள் எல்லாம் எடுத்துவச்சும் எழுத நேரமில்லாமல் போச்சு.

kshetrayatraa said...

Dear sir,

thanks for visiting. I was searching for good pictures of this great temple to post but not able to get clear pictures. If you share it, kindly send it to my email id kshetrayatraa@gmail.com. Will post it.

thanks once again

Post a Comment