Saturday, July 9, 2011

செல்வம் செழிக்க செய்யும் திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர்

செல்வம் செழிக்க செய்யும் திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர்
செல்வ செழிப்போடு வாழ்வதற்கு அருள்பாலிக்கக்கூடிய மகாலட்சுமிபுரீஸ்வரரை வழிபட்டால் வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதீகம். காவிரியின் வடகரையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பாதையில் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருநின்றியூர். அட்சய திரிதியையில் வழிபட வேண்டிய ஆலயம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியையில் தொடர்ந்து வழிபட செல்வ வளம் சிறக்கும். இக்கோயில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும். வேளூர்  வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு
ஜமதக்னி மகரிஷி தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமரும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே இத்தலத்து சிவன் மகாலட்சுமி புரீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று கூறப்பட்டு காலப்போக்கில் திருநன்றியூர் என்று அழைக்கப்படுகிறது,

சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒரு சமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்ற போது காவலாளிகள் கொண்டு சென்ற தீவட்டி அணைந்து விட்டது, அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்த போது அது தானாகவே எரியத் தொடங்கியது. தினமும் இவ்வாறு நடந்தாலும் இதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. ஒரு சமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவன் "மன்னரே, இந்தப்பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்றன" என்றான்.

மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தைக் கண்டான். அதனை வெளியே எடுக்க எடுத்த முயற்சி தோற்றது. எனவே அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் பிரதிஷ்டை செய்தான். பிற்காலத்தில் கோயிலும் உருவானது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தப்டி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். நீர்க்கடன் தருவது விசேஷம். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார்.

சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும், அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர்ப் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார்.

இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இத்தலத்து சிவனுக்கு சந்தனக்காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

வழிபட்டோர்.
இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறுகள் பலவும் பெற்றுள்ளனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடிய திருப்பதிகத்துள் நின்றியூர்ப் பரமனை வழிபட்டுப் பேறு பெற்றோர் பற்றிக் கூறியுள்ளார். இத்தலத்து இறைவன் இந்திரன் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வான நாட்டையும், அகத்தியர் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவருக்குப் பொதிய மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால் சொரிந்து வழிபட்ட பசுவுக்குத் திருவடிப்பேற்றையும், ஐராவதத்தின் வழிபாட்டிற்கு மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினன் என்று குறித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு ஒருவேலி நிலத்தின் வருவாயினால் வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளில் பரசுராமர் வேதமோத 300 அந்தணர்களுடன் 360 வேலி நிலம் அளித்து வழிபட அவனுக்கு இத்தலத்து இறைவன் திருவருட்பேறளித்த சிறப்பினை சுந்தரர் மொய்த்த சீர் எனத் தொடங்கும் இத்தலத் தேவாரப்பாடலில் குறித்துப் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திறைவனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர் எனக் கூறுகிறார். திருநாவுக்கரசு சுவாமிகள் அஞ்சியாகிலும் அன்பு பட்டாகிலும் நின்றியூர் இறைவனை நினைக என்றும், நின்றியூர் இறைவனைப் பற்றினாரை வினை பாவம் பற்றா என்றும், வினை ஒயும் என்றும், வினை அல்கும் என்றும் அருளியுள்ளார்.  சுந்தரர் இத்தலத்திறைவனை வழிபடுவோர் வினை நீங்கி இறைவன் திருவடிப்பேற்றினை எய்துவர் என்று கூறியுள்ளார். மற்றும் தாம் அவதரித்த தலத்தினை நம் நாவலூர் என்று கூறுவது போல இத்தலத்தையும் நம் திருநின்றியூர் என்று உரிமை பாராட்டிக் கூறுகிறார்.

கோயில் அமைப்பு
நாற்புறமும் மதிலால் சூழப் பெற்று கிழக்கே ராஜகோபுரமுடையதான தோரணத்திரு வாயிலை உடையதாய்த் திகழ்கிறது. இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தெற்கு முகமாகவும் விளங்குகிறது. விநாயகர், சுப்ரமணியர் கிழக்கு நோக்கி தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.

கல்வெட்டு
இத்தலத்தில் திரிபுவன சக்ரவர்த்தி ராஜராஜதேவன் கல்வெட்டு ஒன்று மட்டும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

தகவல் நன்றி: தினமலர் நாளிதழ்.

No comments:

Post a Comment