கணபதி தரிசனம் - 3
|| ஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச தேவா ||
சென்னையிலிருந்து அப்பாவிற்கு வேலூருக்கு (வட ஆற்காடு) மாற்றல் ஆகியது. வேலூரில் விநாயகர் கோயில் அவ்வளவு காணவில்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் வேலூர் முனிசிபாலிட்டி வளாகத்திற்குள் ஒரு ஆஞ்சநேயர் கோயில் தான் இருந்தது. ஆகவே அவரை கும்பிட்டு பள்ளிக்கு செல்வதுண்டு. அப்பாவிற்கு மாற்றல் கிடைத்து ஊரை விட்டு செல்லும் முன் கடைசியாக இந்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜை செய்து வடை மாலை சாற்றி கிளம்பியது இன்றும் நினைவில் அழியாமல் இருக்கிறது, அப்போது ரஜினி போல் தலைமுடி முகத்தில் வந்து விழும். அர்ச்சகர் பொட்டு வைக்க வரும் போதெல்லாம், தலைமுடி முகத்தில் விழாமல் இருக்க, அதை விரலால் பிடித்துக் கொள்வதுண்டு. இதற்காக அவர் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து திட்டு வாங்கியதும் உண்டு. ஆனால் வேலூருக்கு அருகில் விரிஞ்சிபுரம் என்கிற இடத்தில் உள்ள பிள்ளையார் கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அதைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
வேலூருக்கு அடுத்த வந்தது சேலம். ஒரு சம்மர் காலத்தில் வந்தோம். மாங்கனி நகரம் என்று படித்ததுண்டு, கேள்விப்பட்டதுண்டு. ஆனால் உண்மையில் பார்த்த பொழுது தான் அதன் சிறப்பு தெரிந்தது. வீடு சின்னக்கடை தெரு அருகில். சின்னக்கடை வீதி மிகவும் பரபரப்பான பஜார் தெரு. சேலம் மாநகரின் நடுவில் அமைந்திருந்தது. எது வேண்டுமானாலும் இங்கு தான் வர வேண்டும். நான் குறிப்பிடும் கால கட்டம் 1980 - 1990. இப்போது சேலம் மிகவும் பரந்து விரிந்துள்ளது. எங்கு கண்டாலும் பலபொருள் அங்காடிகளும், சூப்பர் மார்க்கெட்டும், காய்கறி விற்பனை நிலையங்களும் வந்துள்ளன. சின்னக்கடை வீதி பஜாரில் உள்ள மண்டியில் இருந்து மாம்பழ டப்பாக்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். மாம்பழ சீசனில் அந்த தெருவில் நடந்து செல்வதே ஒரு அனுபவம். மாம்பழ வாசனை ஆளை தூக்கி அடிக்கும். இத்தனைக்கும் நடுவில் நமது விநாயகர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.
அதில் முதலில் வருவது மூன்று பிள்ளையார். சின்னக்கடை வீதியின் ஆரம்பத்தில் இவர் கோயில் இருக்கிறது. ஆரம்பத்தில் சிறு கோயிலாக இருந்தது பின்னர் 90 ல் கும்பாபிஷேகம் நடந்து இப்போது பெரிய சன்னதியாக இருக்கிறது. அடுத்து அந்தத் தெருவின் கடைசியில் ராஜவீதி இணையும் Junction -ல் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோயில் உள்ளது.
ராஜகணபதி, சேலம்
ராஜகணபதி பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.
மூன்றாவதாக டவுன் ரயில்வே ஸ்டேசன் தெருவில் உள்ள கணபதி. மூர்த்தி மிகவும் சிறியது ஆனால் கீர்த்தி மிகவும் பெரியது. தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் இருப்பதால் இவரிடம் என் ஆஜர் கட்டாயம் உண்டு. கடைசியில் வருபவர், அம்மாபேட்டை மெயின் ரோடில் பாவடி மகளிர் உயர் நிலைப் பள்ளி அருகில் உள்ள பிள்ளையார் கோயில். நண்பன் வீட்டுக்கு சாயங்கால வேளையில் செல்லும் போது இவரை கும்பிடாமல் சென்றதில்லை.
இத்தனை விநாயகர்களும் என்னை கைவிடவில்லை. கல்லூரியில் பி.காம் சேர்ந்த பின்னர் நிறைய நேரம் கிட்டியது. மற்ற நண்பர்களை போல சுருக்கெழுத்து, தட்டெழுத்து பயில மனம் இசையவில்லை. சோம்போறித்தனம் என்று இல்லை. வருங்காலத்தில் எல்லாம் கணிணி, எங்கும் கணிணி என்று இருக்கப் போகிறது, அப்போது இந்த திறமை அத்தனை உபயோகப் படாது என்று உள்ளுணர்வு சொல்லியதால் போகவில்லை. மாறாக பெரிதாக வர வேண்டுமென்றால் ஏதாவது professional course செய்ய வேண்டும் என்று தோணியது. ஆகையால் கிடைத்த நேரம் எல்லாம் கல்லூரி லப்ரரியில் நிதி நிர்வாகம், கணக்கியலில் உள்ள உயர் வேலை வாய்ப்புகள் என்ன, அந்த வாய்ப்புக்கு ஏற்ற தகுதிகள் என்ன என்று சுமார் ஒரு மாத காலம் ஆராய்ச்சி செய்து பின்னர் பி.காம் படித்துக் கொண்டே cost and works accountancy (ICWA) படிக்கலாம் என்று முடிவு செய்து அந்த இன்ஸ்ட்டிட்யூட் (institute) க்கு விண்ணப்பித்தால் அவர்கள் அதில் சேருவதற்கான தகுதிகள் மாற்றப்பட்டுள்ளன என்றும், குறைந்த பட்ச தகுதி பட்டப்படிப்பு அல்லது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். சரி முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் என்று நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, தேர்வு நாளுக்குக்காக காத்திருந்தேன். அந்த நாட்களில் சேலத்தில் centre கிடையாது. திருச்சி, கோயம்புத்தூர், மதுரை அல்லது சென்னை செல்ல வேண்டும். நான் திருச்சி செலக்ட் செய்து அங்கு பரீட்சை எழுத சென்றேன். பரீட்சை ஒன்றும் அத்தனை கடினம் கிடையாது. சிம்பிள் ஜெனரல் அறிவு, ஆங்கில அறிவு திறன், கணக்கு திறமை. ஆனால் பாஸ் பெர்செண்ட் மிகவும் குறைவு. பரீட்சை எழுதி முடித்தபின் கிடைத்த நேரத்தில் நண்பர்களுடன் முதல் முறையாக திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிசித்து வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
அதுவரை எத்தனையோ விநாயகர் கோயில் கண்டதுண்டு. ஆனால் மலையுச்சியில் அமர்ந்து இருக்கும் விநாயகரை காண்பது அதுவே முதல் முறை. சிறு வயது, ஆகவே படிக்கட்டு ஏறுவது அத்தனை சிரமமாக இல்லை. ஆனால் அத்தனை படிக்கட்டு ஏறி அவர் சன்னதியில் நிற்கும் போது ஒரு அசாத்தியமான நம்பிக்கை மனதில் வரும் பாருங்கள், அது தான் அவருடைய சக்தி. அப்படியே ஒரு சுற்று நோக்கினால் அந்த பிரம்மாண்டம் புலப்படும். அண்ட வெளி பிரம்மாண்டத்தில் ஒரு சிறு துகள் போல பிள்ளையார். ஆனால் அவரை காண்பதற்கு எத்தனை மனிதர்கள் அத்தனை படிகளையும் தாண்டி வருகின்றனர். வாழ்க்கையின் தத்துவத்தை அவர் உணர்த்துவதாக எனக்கு தோன்றியது, அன்றிலிருந்து திருச்சி சென்றால் உச்சி பிள்ளையாரை தரிசிக்காமல் வந்ததில்லை.
உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்யவும், அவரைப் பற்றி மேலும் விவரம் அறியவும், கீழ்க்கண்ட வலைத்தளங்களை பார்க்கவும்.
தினமலரின் 360 டிகிரி பனோரமா பார்வையில் மலைக்கோட்டை கோயில் மிகவும் பிரமாதமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
தரிசனம் செய்யுங்கள். நிச்சயம் உச்சிப்பிள்ளையார் உங்களை வாழ்க்கையின் உச்சிக்கு அழைத்துச் செல்லுவார்.
தரிசனம் தொடரும்.
No comments:
Post a Comment