Thursday, March 10, 2011

கணபதி தரிசனம் - 2

கணபதி தரிசனம் - 2

மதுரையை அடுத்து சிங்கார சென்னைக்கு வருவோம். 1972 - 73 ம் ஆண்டு என்று ஞாபகம்.  4 std பாதியில் மதுரையில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு வந்தோம். வீடு சோலைப்ப முதலி தெரு கோடியில். தெருவின் நடுவில் மாரியம்மன் கோவிலும், கோடியில் விநாயகரும், பின்னால் ஸ்ரீனிவாச பெருமாள், கேசவ பெருமாள் கோயிலும் இருந்தன. இவை நடுவில் விநாயகர் கோயிலை ஒட்டி, வீட்டிற்கு நேராக (perpendicularly) ஒரு சந்து ஒன்று செல்லும்.  அச்சந்தின் கடைசியில் ஒரு விநாயகர் உண்டு. தினமும் காலையிலும், மாலையிலும் இந்த இரண்டு விநாயகரிடம் ஆஜர் சொல்லாமல் பள்ளிக்கு சென்றதில்லை. இரண்டு விநாயகர் சிலையும் கருங்கல்லால் ஆனது. ஆனால் பின்னால் உள்ள கண்ணாடியில் விளக்கு ஒளி பட்டு ஒளிச்சிதறலில் முகம் தத்ரூபமாக ஒளிரும்.  சந்து பிள்ளையார் கோயிலில் தினம் இரவு ஆர்த்தி உண்டு. இரவு ஆர்த்தி ஏற்பாடுகள் ஒரு விழாவுக்கு கட்டியம் கூறுவது போல் நடக்கும். வித விதமான அடுக்கு வரிசை தீபங்கள் ஏற்றப்பட்டு, வெண்கல மணியோசை ஒலிக்க இரவு நேரத்தில் ஆர்த்தி நடப்பதை காண கண்கோடி வேண்டும்.

பின்னர் அப்பா சினிமா கூட்டிச் செல்லும் போது காமதேனு தியேட்டர் அருகில் உள்ள நவசக்தி விநாயகர் கோயில் பரிச்சயமானது. மிகவும் சக்தி வாய்ந்தவர். நடைபாதையில் குடி கொண்டு இருந்த போதிலும் தன் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்து தன்னிடம் ஈர்த்துக் கொள்பவர். இப்போது நிச்சயம் பெரிய கோயிலாக மாறி இருக்கும் என்று நினைக்கிறேன். நவசக்தி விநாயகர் (Luz Pillaiyar) பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இவ்வலைத்தளத்தை பார்க்கவும்
Nava Sakthi Vinayakar - Luz corner

அடுத்தவர் கபாலி கோயில் அருகில் கச்சேரி ரோடு அல்லது முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் செங்கழுநீர் பிள்ளையார்.

அடுத்து வருபவர் ETPS வரசித்தி விநாயகர். வடசென்னையில் உள்ள எண்ணூரில் அனல் மின் நிலையம் உண்டு. அதில் சித்தப்பா வேலை பார்த்து வந்தார். அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு என ஒரு குடியிருப்பு எர்ணாவூரை அடுத்து அமைக்கப்பட்டிருந்தது. அதில் வசிக்கும் மக்கள் எல்லோரும் சேர்ந்து அமைத்த விநாயகர் தான் ETPS வரசித்தி விநாயகர்.

இதைத் தவிர சென்னையில் விநாயகர் கோயில் ஏராளம். அதைப் பற்றிய விவரம் அனுப்பினால் இத்தொடருக்கு மிகவும் உதவியாய் இருக்கும். என் மின் அஞ்சல் முகவரி kshetrayatraa@gmail.com

அடுத்த பதிவில் மலையுச்சியில் இருக்கும் விநாயகரை தரிசிப்போம்.

No comments:

Post a Comment