Wednesday, March 2, 2011

மஹா சிவராத்திரி 02-03-2011

|| ஓம் நம சிவாய ||

மஹா சிவராத்திரி
 உயிருக்கு உயிராகத் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் ஈசனுக்கு, நாம் நன்றி செலுத்தும் நன்னாள் தான் சிவராத்திரி. மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாள். மகாசிவராத்திரி எனும் விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.

"இந்நாள் எம்மை கண்டவர், நோற்றவர், பூசை பண்ணினவர் நற்கதி அடைவர்" எனத் தென்னாடுடைய சிவனாரே உறுதியளித்துள்ளார் என் கிறது 'வரத பண்டிதம்' எனும் நூல்.  எண்குணத்தானாகிய இறைவனை வழிபட்டு உய்வதற்கு, எட்டு விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை சோமவார விரதம், உமா மகேசுவர விரதம். திருவாதிரை விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம்,  அஷ்டமி விரதம், கேதார கௌரி விரதம், மகா சிவராத்திரி விரதம். இவற்றில் தலையாய விரதமாகப் போற்றப்படுவது, மகா சிவராத்திரி.

"நாள் செய்வதை நல்லோர் செய்யார்" என்று முன்னோர் மொழியை அறிவோம். ஆகவே சிவராத்திரியன்று, விரதமிருந்து இரவெல்லாம் கண்விழித்து, சிவநாமத்தை ஜபித்தபடி இருந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறலாம் என்கின்றன ஆகமங்கள்.

அடியார்கள் பலரும் விரதமிருந்து சிவனருளைப் பெற்றுள்ளனர். நந்தி தேவர் மூலம் சிவராத்திரியின் கீர்த்தியை அறிந்து சூரியன், மன்மதன், அக்னி, எமன், இந்திரன், குபேரன், முருகப் பெருமான் முதலானோரும் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டு சிவனருள் பெற்றனர்.

மேலும் நான்முகன், கலைமகளை தன் நாயகியாக அடைந்ததும், ஸ்ரீ சக்ராயுதத்தைத் திருமால் பெற்றதும் மகாசிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் தான் என்றும் புராணங்கள் சொல்கின்றன.

சுவையான கதைகள்
ஒருமுறை, பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நம்மில் பெரியவர் யார்? எனும் ஆணவம் தலைதூக்கியது. இதில் ஏகப்பட்ட தர்க்கத்தில், 'சிவபெருமானின் அடியையும், முடியையும் கண்டு, முதலில் வருபவர் எவரோ, அவரே பெரியவர்' எனத் தீர்மானித்தனர். அதன்படி, ஈசனின் அடி முடி தேடிப் புறப்பட்டனர்.

எங்கும் இருள் சூழ்ந்தது. முனிவர்கள் கிடுகிடுத்தனர். உலகமே நடுநடுங்கியது. இவை அனைத்தையும் அறிந்த சிவனார், ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக, லிங்கோத்பவராக எழுந்தருளினார். திருமாலும், பிரம்மனும் மட்டுமன்றி, தேவர்கள், ரிஷிகள் முதலானோரும் உண்மையை உணர்ந்து, சிவனாரைப் பூஜித்து வணங்கினர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி.

உமையவள் ஒருமுறை, விளையாட்டாக ஸ்ரீகயிலாசநாதரின் திருக்கண்களை, தனது கைகளால் பொத்தினாள். அவ்வளவுதான்...அந்த விநாடி, அகிலமே இருளில் முழ்கியது. பேரொளி வேண்டிப் பிரபஞ்சமே தொழுதது, கண்ணீர் விட்டது. பிறகு உலகை ரட்சிக்கும் பொருட்டு ஈசன் பேரருள் புரிந்தார். அதுவே சிவராத்திரித் திருநாள்.

விடமுண்ட கண்டன் அல்லவா சிவனார்? அப்படி விஷத்தைச் சாப்பிட்டு நீலகண்டனாகத் திகழ்ந்த தருணத்தில், "ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக்கூடாது, அகிலமே தாங்காது" எனத் தேவாதி தேவர்களும், முனிவர்களும் கடும் தவத்தில் மூழ்கி, பூஜையில் ஈடுபட்டனர். அந்த நாளே, சிவராத்திரி.

யுத்தத்தின் முடிவு பிரளயம் உண்டானது. அனைத்தும் அழிந்தது. எஞ்சியதும் மிஞ்சியதும் சிவ-பார்வதி மட்டுமே! அப்போது அனைத்துலகையும் உயிர்களையும் காத்தருளும்படி அம்பிகை, சிவபிரானை மனம் குவித்து நான்கு காலங்களிலும் பூஜை செய்து, பிரார்த்தித்தாள். அதாவது, மீண்டும் சிருஷ்டித் தொழில் நடைபெற, சிவனாரை பார்வதி தேவி தொழுத தினம், சிவராத்திரி.

உலக க்ஷேமத்திற்காக, ஏகாதச உருத்திரர்கள் திருவிடைமருதூர் திருத்தலத்தில், சிவனாரை மனமுருகி வழிபட்டது, சிவராத்திரியின் போதுதான்.

லிங்க புராணம், ஸகந்த புராணம், சிவ மகா புராணம் ஆகியவை சிவ பூஜையையும், சிவ வழிபாட்டையும், அவற்றால் ஏற்படும் பலாபலன்களையும் விரிவாக எடுத்துரைக்கின்றன. சிவப் பரம் பொருளே மூலம், சிவ பெருமானே காலம், சிவமயமே இந்த ஞாலம்!

மேற்கொண்டு பூஜை முறைகள், அபிக்ஷேக விதிகள், அபிக்ஷேகப் பொருட்கள், உபவாச முறைகள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள கீழ்க்கண்ட வலைத்தளங்களை சொடுக்கி அறியலாம்.

 சிறப்பான வழிபாடுகள் செய்ய வசதி இல்லை, விரதம் இருக்க இயலாத உடல் நிலை...என்ன செய்வது என்கிறீர்களா? 


 
கவலை வேண்டாம். வில்வ இலை போதும். மனதாரச் சமர்ப்பித்து வழிபடுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.

Information Source courtesy: world wide web, sakthi vikatan.

1 comment:

Adsense said...

nice bolg keep posting
for adsense solution- http://www.adsensehelp.co.in/
www.adsenseaccounts.in

Thanks

Post a Comment