Tuesday, March 1, 2011

கணபதி தரிசனம் - 1


கணபதி தரிசனம் - 1
விபூதிப் பிள்ளையார்

என் முதல் சந்திப்பு விக்ன வினாயகர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விபூதி பிள்ளையார். பொற்றாமரை குளத்தின் தெற்கு பகுதியில் தான் உண்டு தன் சிறு வட்டம் உண்டு என்று அமைந்திருக்கும் இவரிடம் ஒரு ஈடுபாடு. சிறு வயதில் அம்மாவுடன் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் அவரை கண்டு அப்படி ஒரு வியப்பு. ஏன் விபூதியை அவர் மேல் பூசுகிறார்கள், ஏன் இந்த பெயர் வந்தது என்று கேட்டு கேட்டு தொந்தரவு செய்ததுண்டு. ஆனால் இன்று வரை எனக்கு பதில் கிடைக்கவில்லை. இதைப்படிக்கும் யாருக்காவது தெரிந்தால் மின் அஞ்சலிடவும் அல்லது கமெண்ட் இடவும்.

முக்குறுணி விநாயகர்
இரண்டாவது அதே கோயிலில் வடக்கு பகுதியில், சோமசுந்தரர் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள பிரமாண்டமான முக்குறுணி பிள்ளையார். இவரிடம் என்னை ஈர்த்தது அவருக்கு நைவேத்தியமாக செய்யப்படும் கொழுக்கட்டை. அதில் உள்ள உள்ளர்த்தங்களை அறியா வயதில் கொழுக்கட்டைக்காக இப்பிள்ளையாரை சுற்றி சுற்றி வந்தததுண்டு. இவரிடம் இரண்டாவதாக பிடித்தது அவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும், சிறிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது. அம்மாவிடம் இன்று வரையில் இந்த கேள்வியை கேட்பதுண்டு. இவரை பற்றி மேல் கொண்டு அறிய mukkuruni-ganesha வலத்தளத்தை சொடுக்கி பார்க்கவும். அருமையான கதை மற்றும் தத்துவம்.

கதை மற்றும் தத்துவம் என்றதும் நினைவிற்கு வருவது விநாயகர் உருவமும், அதன் தத்துவமும்....
கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள்
பெரிய தலை - பெரியதாக சிந்தித்தல். வெற்றிக்கான முதல்படி பெரிய அளவில் யோசிப்பது
பெரிய காதுகள் - நிறைய கேள்- மற்றவர் பேசுவதை எந்தவித குறுக்கீடும் செய்யாமல் கேட்டல். 2ம் படி

சிறிய கண்கள் - கூர்மையான கவனம். 3 ம் படி- மனதை திசை திருப்பாமல், எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிறுத்துதல்.

சிறிய வாய் - குறைவாக பேசுதல் - 4 ம் படி - நிறைய கேட்க வேண்டும், படிக்க வேண்டும் ஆனால் குறைவாக பேச வேண்டும். குறைவாகவும், அளந்தும் பேசுபவருக்கு வார்த்தைகள் சொந்தம் / கட்டுப்படும் அல்லாவிடில் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்படவேண்டி இருக்கும். இதைத் தான் திருவள்ளுவர் "நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற சிக்கனமாக சொன்னார்.

ஏகதந்தம் - ஒரு தந்தம் - 5ம் படி - கெட்டதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளல். நான்காம் படி, குறிக்கோளை அடையும் வழியில் நல்லது, கெட்டது இரண்டும் வரும். அப்போது கெட்டதை விலக்கி நல்ல வழியில் செல்ல வேண்டும்.

தும்பிக்கை - தும்பிக்கை விநாயகரின் ஐந்தாவது கரமாக கருதப்படுகிறது. ஐந்து கரத்தனை, ஆனை முகத்தானை என்று அவரை வழிபடுவதுண்டு. திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை - 6ம் படி - திறமையும் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையும் மிகவும் இன்றியமையாதது.

கோடரி - அறுத்தல் - பாசம், பந்தம் போன்ற கட்டுப்பாடுகளை அறுத்தல் - 7ம் படி - இதன் அர்த்தம் ஒரு கர்மயோகியைப் போல் லட்சியத்தை (அ) குறிக்கோளை அடைய செயல்படுவது. அதில் இந்த கட்டுப்பாடுகளினால் வரும் தடைகளை ஒரு பற்றற்ற துறவியைப் போல் விலக்குதல்.

கயிறு - வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு இழுத்துச் செல்ல.- 8ம் படி -  பெரிதாக யோசித்து சாதிக்க வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிலைநிறுத்தினால், குறிக்கோளை அடைய வழிகள் தன்னால் பிறக்கும்.

அபயம் / வாழ்த்தும் கை - வாழ்த்துதல் - 9ம் படி - விநாயகரின் அபய ஹஸ்தம் தன் பக்தர்களை காக்கும் கவசம். அவர்களின் பக்தி வழியில் வரும் எல்லா தடங்கலையும் விலக்கி அவர்களை உய்விக்கும் ஒரு வரப்பிரசாதம். - வந்தவர்களை எப்போதும் நன்றாக கவனித்து, வேண்டியவற்றை தன்னால் இயன்ற அளவில் செய்தல்.

பெரிய வயிறு - ஜீரணிப்பதற்கு - 10ம் படி - தன் குறிக்கோளை அடையும் வழியில், எத்தகைய துன்பம் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக சகித்து ஜீரணித்தல்.

மோதகம் (கொழுக்கட்டை) - பலன்கள் - 11ம் படி - மேல் சொன்ன படிகளின் படி சென்றால் கிடைக்கும் பலன்கள் கொழுக்கட்டை எப்படி இனிக்கின்றதோ அது போன்ற தன்மை உடையது.

மூஞ்சுறு - வாகனம் - ஆசைகள் - 12 ம் படி - ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆசையை கட்டுப்படுத்தாமல் அதன்படி நடந்தால் நம்மை கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். ஆகையால் ஆசையை கட்டுப்படுத்தி அதை நம் வழிக்கு திருப்பி நடந்தால் அது நாம் அடைய வேண்டிய குறிக்கோள் என்ற இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்.

பிரசாதம் - பழங்கள் - மேல் சொன்ன வழிகளின் படி நடந்தால், இந்த உலகமே வசப்படும் மற்றும் நமக்காக காத்திருக்கும்.

தரிசனம் தொடரும்...

Photo courtesy for vibhuti and mukkuruni pillaiyar : http://theemerald.wordpress.com
and sincere thanks to the blog owner for the excellant work on ganesha.

No comments:

Post a Comment