வடக்காலத்தூர் ஸ்ரீ சிவபெருமான்
தஞ்சை தரணியில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது வடக்காலத்தூர் என்னும் மிகப் பழமையான திருத்தலம். இப்பகுதியில் உள்ள பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களுள் வடக்காலத்தூரும் ஒன்று. இக்கிராமத்தில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ வரத நாராயணப் பெருமாள் திருக்கோயில் என்ற இரு பழமையான புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன.
இவ்விரு கோயில்களும் 1300 வருடங்களுக்கு முற்பட்டவை. இரண்டு ஆலயங்களுமே மிகவும் சிதிலமடைந்து, வெறும் வரலாற்றுச் சின்னங்களாக நின்ற நிலை மாறி, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்து புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இத்திருத்தலத்து உற்சவர் ஸ்ரீ கல்யாண சுந்தரர் என்று பூஜிக்கப்படுகிறார். இறைவனும், அம்பிகையும் திருமணக் கோலத்தில் மணமகனாகவும், மணமகளாகவும் தரிசனம் அளிப்பது அற்புத அனுபவமாகும். வடக்காலத்தூர், திருமணஞ்சேரி, திருவாரூர், திருவாவடுதுறை, வேள்விகுடி, திருநல்லம் ஆகிய ஆறு தலங்களிலும், திருமணக் கோலத்தில் தரிசனம் தந்தருள்கின்றனர் இத்தெய்வத் தம்பதிகள். ஆயினும், வடக்காலத்தூர் ஸ்ரீ கல்யாண சுந்தரர் திருமணக் கோல வடிவமே காலத்தால் மிகவும் முற்பட்டதும், அற்புதமான கலைப்படைப்பாகவும் உள்ளது.
முற்கால சோழர் காலம், அதாவது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைவனின் விக்கிரமத் திருமேனி உலகப் பிரசித்தி பெற்றது. பல வெளி நாட்டினர் இவ்வடிவைப் பார்த்து பிரமித்து, இப்படியும் ஒரு கலையழகை மனிதனால் எவ்விதம் வடிக்க முடிந்தது என வியந்துள்ளனர்.
வடக்காலத்தூர் திருத்தலம் திருமண வரம் மற்றும் குழந்தைப் பாக்கியம் அருள்பாலிக்கும் சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
இத்திருக்கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கைங்கர்ய சபா
வடக்காலத்தூர், பட்டமங்கலம் அஞ்சல், கீழ்வேளூர் - 611 104
தொலைபேசி எண்: 98657 61955
No comments:
Post a Comment