அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர் - பகுதி 1
உறையூர் மிக பழைய நகரமாக தொன்று தொட்டு உள்ளது. சங்க இலக்கியங்களில் உறையூர் பற்றி பெருமையுடன் பல இடங்களில் பேசப்பட்டுள்ளது. சான்றாக
"காவிரிப் படப்பை உறந்தை அன்ன பொன்னுடை நெடுநகர் " - அகம் 385
அறங்கெட அறியாது அல்கும் " - நற்றிணை
புறஞ்செவி வாரணம் புக்கணர் புரிந்தென் " - சிலம்பு நாடு காண் காதை
பதியின் வளம் பகர் வரிதாய்., " - பெரிய புராணம்
ஊரில் தோன்றிய பெரியோர்
அரங்கனைக் காதலித்து மணம் கொண்ட மன்னன் மகளான கமலவல்லிக்காக எடுக்கப்பட்டதே உறையூரில் உள்ள நாச்சியார் திருக்கோயிலாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார், அரங்கனைத் தரிசித்த அளவில் அவருடன் ஐக்கியமானாவர். பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, எண்டோள் ஈசற்கு எழில் மாடக் கோயில் எழுபது எழுப்பிய கோச்செங்கட்சோழன், புகழ்ச்சோழ நாயனார், பிசிராந்தையாருடன் நட்பு கொண்டு நட்பிற்கு இலக்கணம் செய்த கோப்பெருஞ்சோழன்.
சங்க காலப் புலவர்கள்
முத்துவீரியம் என்ற இலக்கண நூல் பாடிய முத்து உபாத்தியாயர், இவ்வூருக்கு அருகில் உள்ள அதவத்தூரில் பிறந்து மிகச்சிறந்த புலவராகவும், புராணங்கள் பல செய்தவருமான மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
மேற்கண்டவாறு சிறப்புகள் பல பெற்ற உறையூரில் உறையும் தெய்வத்தாய் "வெக்காளி அம்மன்".
அம்மன் வரலாறு
ஊர்களை அமைக்கும் பொழுது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது மரபு. அம்மரபுப் படி அமைந்தவள்தான் வெக்காளி அம்மன். வீரமும், வெற்றியுமளிக்கும் தெய்வங்களை வடக்கு நோக்கி அமைப்பார்கள். அரசர்கள் போருக்குச் செல்லும் பொழுது அத்தெய்வங்களை வணங்கிச் சென்று போரில் வாகை சூடிவருவர். அதன்படியே இத்திருக்கோயிலும் வடக்கு நோக்கி உள்ளது. எல்லைத் தெய்வங்கள் வெட்டவெளியில் கூரையின்றி இருக்கலாம் என்று நூல்கள் நவில்கின்றன. இதுபோல் பாண்டிய நாட்டின் தலை நகரான மதுரைக்கு வெளியே ஊர் எல்லையில் திருப்பரங்குன்றத்தில் வெய்யில் உகந்த காளி என்று இருப்பதும் இதற்கு சான்று.
திருக்கோவில் அமைப்பு
சுற்றிலும் எழில்மிகு மண்டபம் இருக்க நடுவே வெட்டவெளியில் வெக்காளியம்மனின் கருவறை உள்ளது. வடக்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன. தார்ச்சாலையையொட்டி தெற்கு வாயில் அமைந்துள்ளதால், பக்தர்கள் பெரும்பாலும் தெற்கு வாயில் வழியே நுழைகின்றனர்.
உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருப்பது வல்லப கணபதி சன்னதியாகும். அவரை வணங்கி மேலும் செல்ல விசாலாட்சி உடனுரை விசுவநாதர் சன்னதி, அடுத்து மயூர முருகர் வள்ளி தேவசேனையுடன் உள்ளார். அடுத்து காத்தவராயன், புலிவாகனத்துடன் பெரியண்ணன், மதுரைவீரன் சன்னதிகளாகும். அடுத்து விநாயகர் நாகப்பிரதிஷ்டையுடன் கூடிய இடம் உள்ளது. அடுத்ததாக உற்சவ அம்மன் சன்னதி. இதன் வடக்குச் சுவரில் துர்க்கை சன்னதி உள்ளது. அடுத்தது பொங்கு சனீஸ்வரர் சன்னதி. இத்திருக்கோவிலில் சனீஸ்வரனுக்காகத் தனி சன்னதி உள்ளது. இவரை வழிபட வாழ்வில் வளம் பொங்கும் என்பதால் பொங்கும் சனீஸ்வரர் என்னும் திருநாமம். இவரை வலம் வந்தால் கண்ணில் படுவது அம்மனுக்கு எதிரே நடப்பட்டுள்ள சூலங்கள். அவற்றில் ஆயிரக்கணக்கிலான பிரார்த்தனைச் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஈசான்யத்தில் உள்ளது நவக்கிரக சன்னதி. வலமாக வந்து அம்மன் திருமுன் நிற்கிறோம். அற்புதத் தோற்றம்.
வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். வருவார் குறைத்தீர்க்கக் காத்திருக்கிறாள்.
அக்கினி ஜ்வாலையுடன் கூடிய கீரிடம். அதிலே நாகம் உள்ளது. கீழே நம்மைக் கருணையுடன் நோக்கும் இருவிழிகள், கோரைப் பற்கள் இரண்டிருந்தும் சீற்றம் இல்லை. சிரித்த முகம், சிவந்த வாய், கரங்கள் நான்கு, மேற்கரங்களில் வலதுபுறம் உடுக்கை, இடதுபுறம் பாசம், கீழ் புறம் வலது கரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலம், வலது காலை மடித்து வைத்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டுள்ளாள். அரக்கனை அக்காலால் மிதித்துக் கொண்டிருக்கிருக்கிறாள். பொதுவாக அம்மனை வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் அமைப்பது வழக்கம். இங்கே மதுரையில் கால்மாறி நடனமாடிய நடராசர் போல் கால்மாறி அமர்ந்திருக்கிறாள். இதற்கும் ஒரு நுட்பம் உள்ளது.
அதனைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கீழ்கண்டவாறு வியந்து பேசுகிறார்.
" மற்ற தேவிமார்கள் இடது காலை மடித்து, வலது கால் பாதம் கீழே பதியுமாறு அமர்ந்திருப்பார்கள். கால்மாறி ஆடிய கூத்தர் பெருமானைப் போல் வெக்காளியம்மன் வலது காலை மடித்து இடது கால் பாதத்தை அசுர சக்தியின் உடலில் பதிய வைத்திருக்கும் செய்தி உய்த்து உணர வேண்டிய செய்தி, அசுர சக்தியை அடக்க அபார சக்தி தேவை. ஆதலால் தத்துவப்படி பார்த்தால் இதுவே சரியான அமைப்பு. சிற்பி ஒருவன் அம்மையின் அனுபூதி பெற்று உலகமாதாவாகிய வெக்காளி அம்மன் சிலையைச் செதுக்கி இருக்க வேண்டும். இடது காலை மடித்து வலது காலை ஊன்றியிருப்பது வீர ஆசனம் எனப்படும். வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருப்பது சுகாசனம் எனப்படும். சுகாசனத்தில் மங்களப் பலன்கள் மிக அதிகமாகக் கிடைக்கும். வீர ஆசனத்தில் கொடுமை, பகை முதலியன அழிப்பது அதிகமாகும் என்பர்.
அம்மன் இடது பாதம் அருகே சூலமும் இருபாதங்களும் உள்ளன. கருவறையின் நான்கு மூலைகளில் பாதங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
என் அம்மனைத் தரிசியுங்கள். உளம் உருக வேண்டுங்கள். உயர்வடையுங்கள்.
மற்ற விவரங்கள் அடுத்த பதிவில்
No comments:
Post a Comment