கண் பார்வை பெற உதவும் பதிகம்
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
திப்பர் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே (1)
உற்றவர்க்குதவும் பெரு மானை
ஊர்வதொன்றுடை யான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (2)
திரியும் முப்புரந் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை
மருவி ஏத்தி வழி படப்பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (3)
குண்டலம் திகழ் காதுடை யானைக்
கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டம்பு மலர்க் கொன்றையினானை
வாளராமதி சேர் சடையானைக்
கெண்டையந்தடங் கண் உமை நங்கை
கெழுமி யேத்தி வழி படப்பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (4)
வெல்லும் வெண்மழு ஒன்றுடையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறையவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாளுமை நங்கை
யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (5)
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங் கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிதுகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி யேத்தி வழி படப்பெற்ற
கங்கையாளனைக் கம்பனெம் மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (6)
விண்ணவர் தொழுதேத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓதவல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (7)
சிந்தித் தென்றும் நினைந்தெழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்
பந்தித்தவினைப் பற்றறுப் பானைப்
பாலொடானஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (8)
வரங்கள் பெற்றுழல் வாள ரக்கர் தம்
வாலிய புரம் மூன்றெரித் தானை
நிரம்பிய தக்கன் தன் பெரு வேள்வி
நிரந்தரஞ் செய்த நிர்க்கண்டகனைப்
பரந்த தொல் புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழி படப்பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (9)
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே (10)
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெருமான் என்றெப்போதும்
கற்றவர் பரவப்படு வானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆருரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
நன்னெறி உலகெய்துவர் தாமே (11)
2 comments:
இந்த பதிகத்தை நம்ம பெரிய பெரியவா ஏன் படிக்கவில்லையா ? அவர் மூக்குக்கண்ணாடி போட்டிருந்ததாக ஞாபகம். ஒரு வேளை இந்த பதிகம் தமிழில் இருப்பதாலோ?
இறைநம்பிக்கை இல்லாதவர் இங்க கமென்ட் சொல்ல அவசியம் இல்லை
Post a Comment