ஏகாதஸி
சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பத த்யானம்
சுத்தம் ஏகாதஸி விரதம்."
- ஸ்ரீ கிருஷ்ணர்
ஸ்ரீ கிருஷ்ணரே துரியோதனனுக்கு எதிரில் சொன்ன அழகான ஸ்லோகம் இது. விரதங்களில் மிகச் சிறந்தது ஏகாதஸி விரதமே. ஏகாதஸி விரத மகிமைகளையும், அதன் அளவற்ற சக்தியையும் நம்முடைய புராணங்களான விஷ்ணு புராணம், பத்ம புராணம், ப்ரும்மாண்ட புராணம், கந்த புராணம், பவிஷ்ய புராணம் போன்றவை கூறுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த இந்த விரத முறை மிக எளிமை உடைய பரிகாரமாகவும் ஜோதிட நூல்களும், நீதி நூல்களும் கூறுகின்றன.
"ஏகாதஸி" விரதம் பிறந்த கதை:
சர்வேஸ்வரன் உமாதேவியாரிடம் ஏகாதஸி விரத மகிமையைப் பற்றிக் கூறும் போது, "விரதங்களில் சிறந்தது ஏகாதஸியே! அஸ்வமேத யாகபலனுக்குச் சற்றும் குறையாதது. சகல பாவங்களையும் போக்கும் வல்லமை உடைய இந்த விரதத்தை அவதார தெய்வங்களும், தேவர்களும், ரிஷிகளும், மகாராஜாக்களும் கடைப்பிடித்து மஹாவிஷ்ணுவின் அருளைப் பெற்றுள்ளனர் " என்று கூறியுள்ளார்.
மஹாவிஷ்ணுவும், "ஏகாதஸி" யும்:
பகவான் மஹாவிஷ்ணு 'முரன்' என்னும் அசுரனை சம்ஹாரம் செய்ய முனைந்த காலத்தே களைத்துப் போய், சிறிது நேரம் கண் அயர்ந்தார். அந்த நொடிப்பொழுதை தனக்கு சாதகமாக்க 'முரன்' பகவானை ஹிம்ஸை பண்ணத் துணிந்த போது, பகவானின் சரீரத்தில் இருந்து வெளிப்பட்ட 'ஸ்திரீ ' ரூபமான சக்தி வெளிப்படுத்திய ஹுங்காரமே அசுரனை சம்ஹரித்தது. விழித்தெழுந்து அது கண்ட விஷ்ணு பரமாத்மா அந்த சக்தியினை " ஏகாதஸி " எனப் பெயரிட்டதுடன் ஏகாதஸி விரத நாளாக அந்நாளை மாற்றினார். தேவர்களுக்காக பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்த நாளும் " ஏகாதஸி " நாளே ஆகும்.
"ஏகாதஸி" விரதம்:
எல்லோருக்கும் பொதுவானதாய் 8 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் அனுஷ்டிக்கலாம். சாஸ்திரங்களில் உள்ளது போல் அவ்வப்போது ஒருபொழுதும், பதினைந்து நாளுக்கு ஒருமுறை சுத்தோபவாஸமும் இருப்பது மனசை சுத்தமாக்கி பகவானின் திவ்ய நாம ஸ்மரணத்தால் பலப்படுத்தும்.
எடுத்த எடுப்பிலேயே நம் மனது தீவிரமாய் அனுஷ்டிக்க எண்ணும் போது எல்லாம் சிதறி பலனற்றுப் போகும். எனவே நாம் நிதானத்துடன் படிப்படியாய் விரதத்தை ஆரம்பித்துப் போகும் போது நம் மனமும் திடசித்தமும் வைராக்கியமும் வளர்வதை உணர்வோம்.
அன்னம் பிராணமயம் என்போம் கலியுகத்தில். ஆனால் அதுவே அளவு மீறும் போது உடம்பில் வியாதி தான் கூடும். " லங்கணம் பரம ஔஷதம் " என்பதை அறிவோம். "லங்கணம்" என்றாலே தாண்டுதல் எனப் பொருள்படும். ஒருவேளை உணவைத் தாண்டுதல். இம்மைக்கும், மறுமைக்குமாய் சேர்த்து. நமது உயிர், உடல் நலங்களையும் இணைத்தே நமது ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஸத்வ உணவே ஆனாலும் மனஸை லேசாக்கி, மேலே கிளம்ப விடாமல் கனமாக கீழே இழுக்கும். பக்தியின் துணையோடு, சங்கல்ப பலத்துடனும், அப்யாஸத்தினாலும் இதைச் சமாளிக்க முடியும். உணவுகளை சாப்பிடும் நாளில் உண்டான பகவத் தியானத்திற்கும், உபவாஸ நாளில் உண்டான பகவத் தியானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நடைமுறையில் உணர முடியும்.
அடுத்து பார்ப்போம் " கிரகங்களும் ஏகாதஸியும் " அதுவரை
" ஓம் நமோ நாராயணாய"
" ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே "
1 comment:
அஸ்வமேதயாகம் என்றால் என்னவென்று உங்களால் சொல்லமுடியுமா ?
Post a Comment