Thursday, August 15, 2013

Ekadashi Vrat Katha – Pavitropana (Putradha) Ekadashi - ஏகாதசி விரத கதை - பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி

 
When the cow and her calf started to drink, the merchant 
rudely shoved them aside and selfishly slaked his own thirst

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.


பவித்ரோபன (புத்ரதா ) ஏகாதசி
(சிராவண மாதம், சுக்ல பட்ச ஏகாதசி)

ஆகஸ்ட் 17-ம் தேதி, சனிக்கிழமை, சிராவண மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசியாக கொண்டாடுவர். பவித்ரோபன  (புத்ரதா)  ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.

மஹாராஜா ஸ்ரீ யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் -"அரக்கன் மதுவை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்றவரே, சிராவண மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் மகத்துவத்தை அறிய விரும்புகிறேன். ஆகையால் தயை கூர்ந்து அந்த ஏகாதசி திதியின் மகிமையை விரிவாக சொல்லுங்கள்." என்று வேண்டிக் கொண்டார்.

முழுமுதற் கடவுளான கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரின் வேண்டுக்கோளைக் கேட்டு - மஹாராஜனே!,  ஏகாதசி திதியின் மஹிமையைப் பற்றிய உன் தேடல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.  சிராவண மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் மகத்துவம் பற்றி சொல்கிறேன் கேள். இந்த  ஏகாதசியானது மிகவும் புண்ணியமானது. இந்த ஏகாதசி திதியின் மஹிமையை கேட்பவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவர்.

துவாபர யுகத்தின் தொடக்கத்தில், மஹிஷமதி பூரி என்னும் ராஜ்யத்தை மஹிஜித் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அனைத்து வளங்களும் சுகங்களும் இருந்தாலும், அரசன் உற்சாகம் இன்றி, ஊக்கமில்லால் கடமையே  என்று அரசாட்சி  செய்து வந்தான். அவனுக்குப் பின் அரசை காத்து ஆட்சி செய்ய ஆண் வாரிசு இல்லை என்ற கவலை அவனை வாட்டி வைத்துக் கொண்டு இருந்தது

திருமணத்திற்கு இல்லற வாழ்க்கையில் புத்ரன் இல்லாமல் இருப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமின்றி அவ்வுலக வாழ்க்கையிலும் ஆனந்தம் கிட்டாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சமஸ்க்ருத வார்த்தையான புத்ரா என்பதற்கு  மைந்தன், மகன் என்று அர்த்தம். "பு" என்றால் நரகங்களில் ஒரு வகை நரகம். "த்ரா" என்றால் விடுதலை அளிப்பவர்" என்று அர்த்தம். ஆக " புத்ரா" என்னும் சொல்லுக்கு  "பு"  என்னும் நரகத்திலிருந்து காத்து விடுதலை அளிப்பவர் என்று அர்த்தம்.

ஆகையால் இல்லறத்தார் தங்கள் வாழ்க்கை பூரணமாக புத்ரன் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர். நல்மகனை ஈன்றெடுத்து, நற்பயிற்சியும் அளித்து அவனை உருவாக்குதல் என்பது ஒவ்வொரு தந்தையின் கடமையாகவே இருக்கிறது. அக்கடமையை சரிவர நிறைவேற்றுவோர் புத்ரனால் "பு" என்னும் நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவர்.

இந்நியதியானது  பகவான் மஹாவிஷ்ணுவை சரணாகதி என்று சரணடைந்த பக்தர்களையோ அல்லது நானே (ஸ்ரீ கிருஷ்ணர்) அனைத்தும் என்று சரணாகதி அடைந்த பக்தர்களையோ கட்டுப்படுத்தாது.  ஏனெனில் அவர்களுக்கு நானே மகனாகவும், பெற்றோராகவும் அமைகிறேன்.

மேலும் சாணக்கியர் கூறுகிறார்.
சத்யம் மாதா, பிதா ஞானம்
தர்மோ ப்ராதா தயா சகா
சாந்தி பத்னி க்ஷ‌மா புத்ரா
சடேதே மம வந்தாவா


அதாவது, உண்மை, சத்யம் என் அன்னை, ஞானம், அறிவு என் தந்தை, என் தொழில்  என் சகோதரன், கருணை என் நண்பன், அமைதி  என் மனைவி, மன்னித்தல்  என் புத்ரன். ஆக சத்யம், ஞானம், தர்மம் (தொழில்), கருணை, அமைதி, மன்னிப்பு ஆக  இவை ஆறும் எனது குடும்பத்தினர் என்று கூறுகிறார்.

இறைவனின் பக்தர்களிடம் உள்ள இருபத்தி ஆறு முக்கிய குணங்களில் மிகவும் உயர்ந்தாக கருதப்படுவது மன்னித்தல் என்னும் நற்பண்பு. எனவே பக்தர்கள் இந்நற்பண்பை கூடுதல் முயற்சி மேற்கொண்டு  தங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  

இங்கு சாணக்கியர், க்ஷ‌மா அதாவது மன்னித்தல் தனது புத்ரன் என்று கூறுகிறார். அதற்கு, பக்தர்கள் இறைவனை அடைய வேண்டி துறவு பாதையில் இருந்தாலும், புனிதமான ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு மன்னித்தல் என்னும் நற்பண்பான புத்ரனை அடைய வேண்டி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அரசன் மஹிஜித்தனும் தனக்கு வாரிசு அமைய வேண்டி நெடுங்காலம் கடினமான பூஜை, ஆராதனை, பிரார்த்தனை எல்லாம் செய்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல, ஆண்டுகள் தான் பல கழிந்து சென்றன. எதுவும் பயனளிக்கவில்லை. அரசனின் கவலை பன்மடங்கு அதிகரித்தது.

ஒரு நாள் தனது அமைச்சரவையை கூட்டி, "ஞானத்தில் சிறந்த சான்றோர்களே, இப்பிறவியில், நான் ஒரு தவறும் செய்யவில்லை. சட்டத்திற்குப் புறம்பாக கேடு விளைவித்து சேகரித்த சொத்துக்களும் எனது கருவூலத்தில் இல்லை. தெய்வம், தேவர்கள் அல்லது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தானத்தை அபகரித்ததும் இல்லை. அரசனின் கடமையாக ராஜ்யங்களை வெல்வதற்காக போர் புரிந்த போதும், இராணுவ விதிமுறைகளை மீறாமல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு போர் புரிந்துள்ளேன். எனது நாட்டின் குடிமக்களை எனது குழந்தைகளாகத் தான் கருதி பாதுகாத்து வந்துள்ளேன். எனது சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள் சட்டத்தை மீறி இருந்தால், விசாரித்து அதற்குரிய  தண்டனையை  பாரபட்சம் பாராது  உடனடியாக அளித்துள்ளேன். என் எதிரி மென்மையானவராகவும், பக்திமானாகவும் இருந்தால் அவரை வரவேற்று உபசரித்துள்ளேன். ஒரு நேர்மையான அரசனுக்கு உரிய அனைத்து தர்மங்களையும் தவறாது கடைபிடித்து அரசாளும்  எனக்கு ஏன் ஆண் வாரிசு இதுவரை பிறக்கவில்லை என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஆகையால் பூமியில் இருமுறை பிறவி எடுக்கும் புனித ஆன்மாக்களே!  கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்டு, வேதங்கள் காட்டும் வழியில் வாழும் எனக்கு ஆண்வாரிசு இல்லாமல் இருப்பதற்கான காரணத்தை தயைகூர்ந்து கூறுங்கள்" என்றான்.

இதைக் கேட்ட அரசனின் அமைச்சர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். அவர்களுக்கும் இதற்கான சரியான விடை கிட்டாததால், தவத்தில் சிறந்த மஹரிஷிகளின் ஆஸ்ரமத்தை அணுகி அவர்களிடம் அரசனின் கேள்விக்கான விடையை தேடினர்.

அவர்களின் முயற்சியின் நிறைவில் உத்தமமான, தூய, தெய்வீக, தம்மிடம் உள்ளதில் மன நிறைவு கொண்ட‌, கடும் உபவாச விரதத்தை மேற்கொண்டு இருக்கும் மஹரிஷி ஒருவரின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அது, புலன்கள் அனைத்தையும் அடக்கி, சினத்தை வெற்றி கண்டு, தனது தொழில் தர்மத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்று,  நான்கு வேதங்களிலும் அபார ஞானமும்,  நிகரில்லாத தம் தவ வலிமையினால் பெற்ற வரத்தால், பிரம்மாவின் ஆயுளுக்கு நிகராக தனது ஆயுளையும் விருத்தி செய்த மஹாமுனி லோமச ரிஷியின் ஆஸ்ரமம் ஆகும். மஹரிஷி  லோமசர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானியாவார். ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், அவரது உடலில் இருந்து ஒரு முடி வெளியே விழும். (ஒரு கல்பம்  என்பது பிரம்மாவிற்கு 12 மணி நேரமாகும். அதாவது 4,320,000,000  வருடங்கள்).   

அத்தகைய தவசிரேஷ்டரை கண்ட மகிழ்ச்சியினால்,  அமைச்சர்கள் அனைவரும் தங்களது வணக்கத்தை தெரிவித்தனர். மஹரிஷியின் தரிசனத்தின் சாந்நித்யத்தில் கட்டுண்ட அமைச்சர்கள், மெதுவாக மீண்டு, மஹரிஷியிடம் மிகவும் பணிவாக- " நாங்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த பாக்கியத்தினால், இன்று தங்களது தரிசனம் கிடைக்கப் பெற்றோம்." என்றனர்.
 
மஹரிஷி லோமசர் அமைச்சர்களின் விந‌யத்தை கண்டு, அவர்களிடம்- "நீங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்னை ஏன் பாராட்டுகிறீர்கள்?" என்று வினவினார். "உங்கள் பிரச்னை என்ன என்பதை கூறுங்கள். கட்டாயம் என்னால் இயன்றவரை அதை தீர்க்க வழி சொல்கிறேன்" என்றார். மேலும் -" எங்களைப் போன்ற மஹரிஷிகளுக்கு மற்றவர்களுக்கு உதவுவதே தலையாய கடமையாகும். அதில் சந்தேகம் வேண்டாம்" என்றார்.

பகவான் மஹாவிஷ்ணுவின் மீது கொண்ட அபார பக்தியின் விளைவால், லோமச மஹரிஷி அனைத்து நல்ல குணநலன்களையும் பெற்றிருந்தார்.  ஸ்ரீமத் பாகவதம் (5:8:12) ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. அதாவது

யஸ்யஸ்தி பக்திர் பகவதை அகிஞ்சனா
சர்வைர் குணைஸ் தத்ர சமஸ்தே சுரா
ஹராவ் அபக்தஸ்ய கூடோ மாஹட்குணா
மனோரதேநசதி தவதோ பஹி:

yasyasti bhaktir bhagavaty akinchana
sarvair gunais tatra samasate surah
harav abhaktasya kuto mahad-guna
manorathenasati dhavato bahih

"In one who has unflinching devotional service to Krishna, all the good qualities of Krishna and the demigods are consistently manifest. However, he who has no devotion to the Supreme Personality of Godhead has no good qualifications because he is engaged by mental concoction in material existence, which is the external feature of the Lord."

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது திடமான பக்தி ப்ரேமையில் ஈடுபட்டு இருப்பவரிடம், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பரிவார தேவர்களின் அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்று காணப்படும். அதே சமயம், முழு முதற்கடவுளான ஸ்ரீகிருஷ்ணரிடம் பக்தி ப்ரேமை இல்லாதவரிடம் நற்குணங்கள் காணப் பெறாது. ஏனெனில் அவர்களது மனமானது பகவானின் மாய வெளித்தோற்றமான ஆதாயத்தின் (லோகாயத சுகங்களின்)  மீது லயித்துள்ளது.

லோமச முனிவரின் அமுதமொழிகளைக் கேட்ட அரசனின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் மஹரிஷியிடம், "தவசிரேஷ்டரே!   எங்களை ஆட்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்கு  விடை தெரியாமல், அதை தேடி அலைந்து, கடைசியில் தங்களது ஆஸ்ரமத்தை கண்டு தங்களிடம் அதற்கான விடையை அறிய வேண்டி இங்கு வந்தோம்" என்றனர். "இவ்வுலகில் தங்களைத் தவிர வேறு யாராலும் எங்கள் சிக்கலை தீர்க்க இயலாது"  என்றனர்.

"எங்கள் அரசன் நல்லாட்சி செய்தும், பிரஜைகள் அனைவரையும் தனது குழந்தைகள் போல் பாதுகாத்து வந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்ற குறையால் சதா வாட்டத்தில் இருக்கிறார். அவர் இப்படி ஆண் வாரிசு இல்லை என்ற குறையால் வாட்டத்துடன் துன்பப்படுவதை காண முடியாமல், எங்களது மனமும் சோகத்தில் ஆழ்கிறது. ஆகையால், நாங்கள் அதற்கான காரணத்தை அறிந்து, எங்களால் இயன்றால் அதை நிவர்த்தி செய்யலாம் என்ற நோக்கத்தில் தவசிகள் வாழும் இவ்வனத்திற்கு வந்தோம். எங்களது நற்பாக்கியம், தங்களை காணும் பேறு கிட்டியது. தங்களை சந்தித்த மாத்திரத்தில் ஒருவரது ஆசைகளும், செயல்களும் வெற்றி அடைகின்றன. ஆகையால், நாங்கள் மிகவும் பணிவுடன் தங்களிடம் வேண்டிக் கொள்கிறோம். தயைகூர்ந்து எங்கள் அரசனுக்கு ஆண் வாரிசு கிடைக்கும் வழியை அருளி ரட்சிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர்.

அமைச்சர்களின் உண்மையான பிரார்த்தனையைக் கேட்ட மஹரிஷி லோமசர், சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து அரசன் மஹிஜித்தின் முந்தைய பிறவியைப் பற்றி அறிந்து கொண்டார். பின்னர் அவர்களிடம் - " உங்கள் அரசன் தன் முன் பிறவியில் வணிகராக பிறந்திருந்தார். அப்பிறவியில் செல்வம் எத்தனை இருந்தாலும், போதாது என்னும் பற்றாக்குறை மனப்பான்மையால் பாவச்செயல்கள் புரிந்தார். வர்த்தகத்தில் மேன்மேலும் பொருள் ஈட்டுவதற்காக, நிறைய கிராமங்களுக்கு பயணம் செய்தார். அப்படி பயணம் புரிகையில், துவாதசி நாளன்று அதாவது ஜேஷ்ட மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசிக்கு (த்ரிவிக்ரமா - மே - ஜூன் மாதம்)  மறுநாள் மதிய வேளையில், அங்குமிங்கும் அலைந்ததால் தாகம் ஏற்பட்டு  நீர் சுனையை தேடி, கடைசியில் கிராமத்தின் எல்லையில் ஒரு அழகிய குளத்தை கண்டார். ஓடிச் சென்று நீர் அருந்தும் வேளையில், ஒரு பசுவானது புதிதாக ஈன்ற கன்றுக்குட்டியுடன் அங்கு வந்தது. அவ்விரண்டு ஜீவன்களும் மதிய வெப்பத்தின் தாக்கத்தால், தாகம் மேலிட நீர் அருந்துவதற்காக அங்கு வந்திருந்தது. அவ்விரண்டு ஜீவனும் நீர் அருந்த முற்பட்ட போது, உங்கள் அரசன் அவற்றை மிகவும் கோபத்துடன் முரட்டுத்தனமாக அவைகளை விரட்டி விட்டு, சுயநலத்துடன் முதலில் தன்னுடைய தாகத்தை தீர்த்துக் கொண்டான். தாகத்தில் தவித்த பசுவையும், அதன் கன்றினையும் விரட்டிய பாவச் செயலால் இப்பிறவியில் ஆண் வாரிசு இன்றி தவிக்கும் படி நேர்கிறது. அரசன் தன் முற்பிறவியில் செய்த நல்ல செயல்களுக்கு பலனாக இப்பிறவியில் தொல்லையில்லாத அமைதியான ராஜ்யத்தை ஆளும் தகுதியை பெற்றான்" என்று உரைத்தார்.

இதைக் கேட்ட அரசனின் அமைச்சர்கள் மஹரிஷியிடம், " அனைத்தும் அறிந்தவர் தாங்கள், முற்பிறவியின் பாவங்களை ஒருவன் இப்பிறவியில் பெரும் புண்ணியத்தை ஈட்டுவதன் மூலம் அழித்து நற்கதி பெறலாம் என வேதங்களில் கூறப்பட்டு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகையால் தாங்கள் கருணை கூர்ந்து எங்கள் அரசர் தன்னுடைய முற்பிறவி பாவத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை காண்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். எங்கள் அரசர் விரும்பியவண்ணம் ஆண் வாரிசு உண்டாக தங்கள் அருளாசியை வேண்டுகிறோம்" என்றனர்.

அதைக் கேட்ட மஹரிஷி லோமசர், " சிராவண மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதி புத்ராதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அந்நாளன்று, நாட்டின் குடிமக்கள் அனைவரும் உங்கள் அரசர் உட்பட, விதி வழி முறைகளின் படி ஏகாதசி விரதத்தை கடைப்பிடியுங்கள். நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், இரவில் கண்விழித்து பகவான் மஹாவிஷ்ணுவின் புகழை பாடும் கீர்த்தனைகளை பாடுதல், ஸ்ரீமத் பாகவத பாராயணம், புராணம் படித்தல் என்று விரதத்தை சரியாக கடைப்பிடித்து, மறுநாள் அதனால் நீங்கள் பெற்ற விரத பலன்களை அரசருக்கு அளியுங்கள். கட்டாயம் அவருக்கு ஆண்மகன் பிறப்பார்" என்று அருளினார்.

மஹரிஷியின் வார்த்தைகளை கேட்டு மிகவும் மகிழ்ந்த அமைச்சர்கள், பணிவன்புடன் தத்தமது வணக்கங்களை ரிஷி லோமசரிடம் தெரிவித்து   விடைபெற்றுக் கொண்டு மிகவும் ஆனந்தத்துடன் ராஜ்ஜியத்திற்கு திரும்பினர்.

சிராவண மாதம் வந்தவுடன், அரசனின் அமைச்சர்கள் மஹரிஷி லோமசர் கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தனர். அரசனிடம் மஹரிஷியின் அறிவுரையை எடுத்துச் சொல்லியதோடு, மஹிஷமதிபுரி பட்டினத்தின் பிரஜைகள் அனைவருக்கும் ஏகாதசி விரதம் பற்றிய செய்தியினை பறையறிவித்தனர். அதன் பின், அரசன் மஹிஜித் உட்பட ஏகாதசி விரதத்தை குடிமக்கள் அனைவரும் மிகவும் சிரத்தையுடன் கடைபிடித்தனர்.  மறுநாள் துவாதசியன்று, அனைவரும் தாம் பெற்ற விரத பலனை அரசருக்கு அளித்தனர். இப்புண்ணியத்தின் வலிமையால் அரசி மிக விரைவில் அரசர் மற்றும் குடிமக்கள் அனைவரும் மகிழும் வண்ணம் அழகான ஆண் மகவை பெற்றெடுத்தாள்.

அதனால் சிராவண மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி ( புத்ர சந்தான பிராப்தியை வழங்கும்) என்று புகழுடன் அழைக்கப்படுகிறது. எவர் ஒருவர் இவ்வுலகில் மட்டுமல்லாது அவ்வுலகிலும் மகிழ்ச்சியை விரும்புகிறாரோ, அவர் இப்புனித நாளில் பருப்பு மற்றும் தானிய வகைகளை தவிர்த்து உபவாசத்தை மேற்கொள்ள வேண்டும்.

கலியுகத்தில் புத்ரதா ஏகாதசியின் மஹிமையை அந்நாளன்று கேட்பவர்களும், படிப்பவர்களும் நிச்சயமாக தமது பாவங்கள் நீங்கப் பெற்று, புத்ர சந்தான பிராப்திக்கான அருளாசியைப் பெறுவதோடு, இப்பிறவியின் முடிவில் சொர்க்கத்தை அடையும் பாக்கியமும் பெறுவர்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு சொல்லி முடித்தார்.

ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பவித்ரோபன (புத்ரதா)  ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

ஓம் நமோ பகவதோ வாசுதேவாய....வாசுதேவாய நமோ நம:

தொடர்புடைய ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.

ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.

ஏகாதசி விரத கதை - யோகினி  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.

ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.

அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.

கிரகங்களும் ஏகாதசியும் ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.

குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,  ஏகாதசியும் சங்கர நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.


No comments:

Post a Comment