Wednesday, May 8, 2013

Akshaya Tritiya - அக்ஷய திருதியையில் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு


அக்ஷய திருதியையில் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு
அக்ஷய திருதியை தினத்தில் நாம் ஒரு புண்ணியம் செய்தால் இரட்டிப்பான பலன், தானம் செய்தால் பன்மடங்கு பலன், ஒரு பொருள் வாங்கினால் அது பன்மடங்காகப் பெருகும். ஆம்!! அக்ஷய திருதியை தினத்தில் இவையனைத்தும் நிச்சயம் நடைபெறும் என்பது புராணங்களும் சாஸ்திரங்களும் பறைசாற்றும் உண்மை.

அதே போல், ஒரு தெய்வத்தை நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வேண்டி பூஜித்து எப்போதுமே நமக்கு யோகம் நிலைபெறுமாறு செய்யலாம். அந்த தெய்வத்தின் திருநாமம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி என்பதாகும்.
.
அக்ஷயம் என்றால் சிதையாத, குறையாத என்று பொருள். இந்த ஆண்டு அக்ஷய திருதியை அன்று அதிர்ஷ்ட தேவியை முறையாக பூஜை செய்து வழிபட்டு குறையாத அதிர்ஷ்டம் நம்மோடிருக்கச் செய்யலாமே !

ஐஸ்வர்யம், சௌபாக்கியம், அதிர்ஷ்டம், யோகம், வளம் ஆகிய வார்த்தைகளைச் சொல்லில் மட்டுமே கேட்டிருக்கும் பலருக்கு அதிர்ஷ்ட தேவியின் வழிபாடு நல்லதொரு திருப்பத்தைத் தருவது உறுதி. அத்தேவியின் பூஜா முறையை இங்கே காண்போம்.

அதிர்ஷ்ட தேவி பூஜை முறை
இவ்வருடம் சித்திரை மாதம்  30ம் தேதி திங்கட்கிழமை (மே மாதம் 13ம் தேதி) அன்று அக்ஷய திருதியை வருகிறது.

அக்ஷய திருதியை முதல் நாள் மாலையில் பூஜை அறையைச் சுத்தம் செய்து மணைப் பலகையில் அதிர்ஷ்ட தேவிக்குரிய விசேட கோலமிட்டு அதன் மேல் வாழை இலை - அரிசி போட்டுக் கலசம் வைக்க வேண்டும். இரண்டு குத்து விளக்குகளை இரு பக்கத்திலும் வைத்து நெய்யிட்டு மூன்று முகங்கள் தீபமேற்ற வேண்டும். விளக்கை ஸ்வஸ்திக் கோலமிட்டு அதன் மேல் வைக்கவும்.

அதிர்ஷ்ட தேவியின் படத்தை மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். முன்பக்கத்தில் பூஜை அறையில் வைக்கும் முக்கியமான குடும்ப விளக்கை (தினம் ஏற்றுவது) ஒரு தட்டில் வைக்கவும். அதைச் சுற்றிலும் 16 காசுகளை சந்தனம், குங்குமம் வைத்து மலர்களை வளையம் போல் வைத்து விருப்பப்படி ரங்கோலிக் கோலம் போல் அலங்காரமாக அமைக்கவும்.

மறு நாள் அதிகாலை நீராடி, சுத்தமான உடை அணிந்து  பூஜைக்கு அமரவும்.

முதலில் விநாயகப் பெருமானை சந்தனத்தில் பிடித்துவைத்துக் குங்குமம் இட்டு எளிய பூஜை செய்யவும். (அருகம்புல் 16 சாற்றி அர்ச்சனை செய்க).

ஓம் பால கணபதயே நம:
ஓம் தருண கணபதயே நம:
ஓம் பக்த கணபதயே நம:
ஓம் சித்தி கணபதயே நம:
ஓம் லக்ஷ்மி கணபதயே நம:
ஓம் ஸ்வேத கணபதயே நம:
ஓம் வக்ரதுண்ட கணபதயே நம:
ஓம் விஜய கணபதயே நம:
ஓம் விக்னராஜ கணபதயே நம:
ஓம் சக்தி கணபதயே நம:
ஓம் கந்த கணபதயே நம:

(சந்தனத்தால் ஆனவருக்கு கந்த கணபதி என்று பெயர்)

பிறகு தூப, தீப நிவேதனம் செய்து, கற்பூரம் ஆரத்தி செய்தபின்
"ஓம் வக்ரதுண்டாய ஹீம் நமோ ஹேரம்ப மதமோதித மம அத்ருஷ்ட சக்தி பூஜா பலம் தேஹிமே ஸ்ரீகந்த கணபதயே நமோ நம:" என்று கையில் மஞ்சள் அரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு பிரார்த்தித்துப் போடவும்.

அடுத்ததாக மஞ்சள் அட்சதை எடுத்துக் கொண்டு உங்கள் பிரார்த்தனையைச் சொல்லி, மகாசங்கல்பம் செய்து, திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி 'மம ஸக குடும்பஸ்ய அதி சீக்ர அத்ருஷ்ட சக்தி ப்ரசாத சித்யர்த்தம், தேவி பூஜாம் கரிஷ்யே' என்று சொல்லி அட்சதையை வடக்காகப் போட்ட பிறகு, விநாயகரை யதாஸ்தானம் செய்யவும்.

கலசத்தில் தேவி பூஜை
மஞ்சள் நிற உதிரிப் பூக்களைக் கையில் எடுத்துக்கொண்டு தேவியின் அருட்சக்தியை கலசத்தினுள் நிறுத்த தேவி அர்ச்சனையைச் செய்க.

"ஓம் ஹ்ரீம் தாராயை, வித்யாயை, முநின்யை, ஸ்ரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, த்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உந்மந்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷாந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்த்யை, தூத்யை, கத்யாயை, கௌர்யை, அதிர்ஷ்ட கலாயை நம:
(எல்லா நாமாவளியிலும் முதலில் ஓம் ஹ்ரீம் என்று சேர்த்துக் கொள்ளவும்.)

ஆவாகன பூஜாம் சமர்ப்பயாமி
கையில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு அதிர்ஷ்ட தேவியின் தியானத்தைத் முழுமனதுடன் உச்சரித்துச் சொல்லி கலசத்திலும், பாதத்திலும் போட வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி த்யானம்
பங்கஜாக்ஷீம் ஸூவர்ணாபாம் ஸுரத்ன மகுடான்விதாம்
நானாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன் விதாம்
ஸீதா பேடக சாலீஞ்ச வாமஹஸ்தேன தாரிணீம்
ஸ்வ்யேகரே சுபத்மஞ்ச லம்பகேசேண சோபனாம்
பத்மோப விஷ்டாம் ஸூவஸ்தராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் ஸங்கோலூக சமன்விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்யலக்ஷ்மீ மஹம் பஜே !


விளக்கம்: தலையில் மாணிக்கக்கீரிடம் அணிந்து செந்தாமரையில் அமர்ந்தவளாக, வலக்கையில் தாமரை மலரேந்தி, இடக்கையில் தன்னை வணங்குவோர்க்குத் தர பொற்கிழியும்,  நெற்கதிரும் வைத்துள்ளாள்.  அவள் தாமரை தடாகத்தில் செந்தாமரை மலர் மேல் அமர்ந்திருக்க, சகுணபட்சியாம் ஆந்தையும், சௌபாக்யம் தரும் வலம்புரிச் சங்கு, மஞ்சள் சிந்தாமணி சாளக்ராமம் ஆகிய மங்களப் பொருட்களும் அவளுடன் வைக்கப்பட்டுள்ளன.

- தியானம் சொல்லிய பின், அதிர்ஷ்ட தேவி காயத்ரியை 16 முறை அல்லது 32 முறை சொல்ல வேண்டும்.

"ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே: கமலஹஸ்தாய தீமஹி, தந்நோ அதிர்ஷ்ட தேவி: ப்ரசோதயாத்."

அடுத்ததாக தேவியின் மூலமந்திரத்தை 108 தடவை கண்களை மூடியபடி ஜபிக்கவும்.. 

"ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷிண்யை ஸ்வாஹா"
 
தியானம் - காயத்ரீ, மூலமந்திரம் சொல்லி முடித்தபின், பால்பாயசம், லட்டு, உளுந்துவடை, பால்சாதம், கருப்பு திராட்சை, சாத்துக்குடி, பலா (முப்பழம்) நிவேதித்து, தேங்காய், வாழைப்பழம் தாம்பூலம் வைத்து ஆரத்தி செய்து நமஸ்கரிக்கவும்.  மூன்று சுமங்கலிகளை அழைத்து தாம்பூலம் தருக.

அக்ஷ‌ய திருதியை அன்று வீட்டிலும், தொழிலகத்திலும், அதிர்ஷ்ட தேவி பூஜை செய்திட தேவியருளால் அதிர்ஷட வாய்ப்புக்களாய்ப் பெற்றுச் சிறக்கலாம்.

No comments:

Post a Comment