Tuesday, March 12, 2013

Sundara Kandam - சுந்தர காண்டம்

Image Courtesy - Google Images
சுந்தர காண்டம் 
நாம், நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, நமக்கு எல்லா நன்மைகளையும்  தரும் ஒரு பாராயணம் சுந்தர காண்ட பாராயணம். நமது முன்னோர்கள் இதனை வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர்.

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தரகாண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள். 24,000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 ஸ்லோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது சுந்தரகாண்டம். ஸ்ரீ ராமபிரான் சீதாபிராட்டியை தொலைத்த துக்கம் தாளாமல் நம்பிக்கை இழந்து செய்வதறியாது நின்ற போது, அனுமன் கொண்டு வந்த் கணையாழி நம்பிக்கை ஒளியை காட்டியது. இது ராமாயண காதையின் ஒரு மிக அற்புதமான ஒரு தருணம்.  கருணாமூர்த்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கே அனுமனின் பிரபாவம் நம்பிக்கை தந்தது என்றால்,  அதை நம்பிக்கையோடு பாராயணம் செய்யும் அடியவர்களான நம்மை நிச்சயம் ஸ்ரீராமனின் அருளோடு கூடிய அனுமனின் கடாக்ஷம் காப்பாற்றும் எனலாம்.

சுந்தர காண்டத்தை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அதன் சிறப்பு எழுத எழுத மேன்மேலும் இனிக்கும். வரும் நாட்களில் சுந்தரகாண்டத்தையும், பாராயண முறைகளையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க, தகுந்தமுறையில் சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். வேத மந்திரங்கள் தரும் அனைத்து நன்மைகளையும் சர்வமங்களங்களையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம். அப்பேர்ப்பட்ட மகிமை பொருந்திய, அற்புதமான சுந்தரகாண்டத்தை தினசரி பாராயணம்  செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் நிவர்த்தி ஆகி, அனைத்து நலங்களும் பெற்று வளமாக வாழலாம்.

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சுந்தர காண்டம் தமிழில் மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. சுந்தரகாண்டம் முழுவதும், எளிய இனிய தமிழில் சுருக்கமாகவும் அழகாகவும் விவரிக்கப்பட்டிருக்கும்  இதை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

ஸ்ரீமத் ராமாயணம் - சுந்தர காண்டம்
(இதை தினமும் படிப்பவர்களுக்கு கஷ்டங்கள் சடுதியில் மறையும். வெற்றிகள் விரைவில் ஓடி வரும்.)

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்,
சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தில் கொள்வார்,
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன,
கருணை மிகு ராமபக்தன் ஆஞ்சநேயர் பெருமை இது.

அஞ்சனை தனையன் அலைகடல் தாண்டவே,
ஆயத்தமாகி நின்றார் ராம பாணம் போல்,
ராசஷஸர் மனைநோக்கி ராஜ கம்பீரத்தோடு,
ராமதூதனும் விரைந்தே சென்றார்.

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்,
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே !
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்,
வழியெல்லாம் நின்று பூமாரி பொழிந்தனரே !

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க,
மகிழ்வுடன் மாருதியும் மைநாகத்தை திருப்தி செய்து,
ஸுரசையை வெற்றி கொண்டு ஸிம்ஹிகையை வதம் செய்து,
சந்தோஷமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தார்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை,
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தைக் கவர்கின்றார்,
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை,
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டார்.

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்,
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்,
ராவணன் வெகுண்டிட ராசஷஸியர் கலங்கிட,
வைதேகி மகிழ்ந்திட வந்தார் துயர்துடைக்க.

கணையாழியைக் கொடுத்து ஜயராமன் சரிதம் சொல்லி,
சூடாமணியைப் பெற்ற சுந்தர ஆஞ்சநேயர்,
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கன் மேல் கோபம் கொண்டு,
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தார்.

பிரம்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்,
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க,
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்,
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்,
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டார்,
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயர் தாவி வந்தார்,
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தார்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்,
கைகூப்பிக் 'கண்டேன் சீதையை' என்றார்,
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணி அளித்தார்.

மனம் கனிந்த மாருதியை மார்போடணைத்த ராமர்,
மைதிலியை சிறைமீட்க மறுகணம் சித்தமானார்,
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டிப் படைகள் சூழ,
அனுமனும் இலக்குவனும் உடன்வரப் புறப்பட்டார்.

அழித்திட்டார் ராவணணை, ஒழித்திட்டார் அதர்மத்தை,
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டார்,
அயோத்தி சென்று ராமர் ஜகம் புகழ் ஆட்சி செய்தார்,
அவனைச் சரணடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு.

எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ அங்கெல்லாம் கரம் குவித்து,
மனம் உருகி கண்களில் நீர் சொரிந்து, ஆனந்தத்தில் மூழ்கி,
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயா - உன்னைப்
பணிகின்றோம் !! பன்முறை உன்னைப் பணிகின்றோம் !!

No comments:

Post a Comment