Monday, March 18, 2013

Pandurangashtakam - பாண்டு³ரங்கா³ஷ்டகம்

பண்டர்பூரின் அரசரான விட்டலை, 'பாண்டுரங்கன்' முதலான பல்வேறு திருநாமங்களால் அழைத்து வழிபடுகிறார்கள்.  இந்த வழிபாடு மிகவும் தொன்மையானது. ஸ்கந்த புராணம்,  பீம நதிக்கரையில், பண்டர்பூர் என்னும் புண்ணிய க்ஷேத்திரம் அமைந்துள்ளதாகவும், அங்கு ஸ்வாமி பாண்டுரங்கன் அர்ச்சா மூர்த்தமாக (சிலாரூபம்) அமர்ந்து அருளுவதாகவும் குறிப்பிடுகிறது. பீமநதியை பீவரா என்றும் அழைப்பர். இந்நதியின் ஓட்டம் பிறைச் சந்திர வடிவத்தில் அமைந்திருப்பதால், இதை 'சந்திரபாகா'  என்றும் அழைப்பர்.

||  பாண்டு³ரங்கா³ஷ்டகம் || 

மஹாயோக³பீடே² தடே பீமரத்²யா
வரம் புண்ட³ரீகாய தா³தும் முனீந்த்³ரை:| 
ஸமாக³த்ய நிஷ்ட²ந்தமானந்த³கந்த³ம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம்‌ || 1 ||

புண்டரீகன் என்னும் பரமபக்தனுக்கு வரமருளுவதற்காக,   பீம நதிக்கரையில் யோகபீடத்தில், முனிவர்களோடு கூடி நின்று அருள்பாலிக்கின்ற,  நிறை ஆனந்தத்தின் திருவடிவான,  நிர்க்குண பரம்பொருளான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.
தடித்³வாஸஸம் நீலமேகாவ பாஸம்
ரமாமந்தி³ரம் ஸுந்த³ரம் சித்ப்ரகாஸ²ம் | 
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்த பாத³ம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 2 ||

மின்னல் வரியை ஒத்த நிறத்தில் ஆடை அணிந்தவரும், நீல மேகம் போன்ற நிறத்தை உடையவரும், ஸ்ரீ மஹாலக்ஷ்மி மனமகிழ்வோடு வாசம் செய்யும் இடமாக உள்ளவரும், மிகுந்த அழகானவரும்,  ஆழ்மன அற்புதத்தின் ஸ்வரூபமாக இருப்பவரும், புண்டரீகன் இட்ட செங்கல்லில் இதன் இருகால்களையும் சமமாக ஊன்றி நிற்பவருமான‌, (புண்டரீகன்,  தன் மதிமயக்கத்தால், தாய் தந்தையரைப் புறக்கணித்து, பின் குக்கட முனிவரால் பெற்றோரின்  சேவையில் தன்னை அர்ப்பணித்தவன். பரம பக்தன். ஒரு நாள் பெற்றோரின் பாத  சேவையில் அவன் ஈடுபட்டிருக்கும் பொழுது, பாண்டுரங்கன் வந்து அவனை அழைத்தார். வந்திருப்பது இறைவனே என்று அறிந்தும், ஒரு செங்கல்லை வீசி, 'இதன் மேல் நில், வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் சேவையைத் தொடர்ந்தான். இன்று வரை, தன் பக்தனுக்காக, பக்தவத்ஸலனான பாண்டுரங்கன், தன் இருகைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அழகாக,  செங்கல்லில் நின்ற வண்ணம் சேவை சாதிக்கிறார்)  நிர்குண பரம்பொருளான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ப்ரமாணம் பவாப்³தேரித³ம் மாமகானாம்
நிதம்ப³: கராப்யாம் த்ருதோ யேன தஸ்மாத் | 
விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோஸ²:
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 3 ||

படைக்கும் கடவுளான பிரம்மா வசிப்பதற்காக தன் நாபியிலிருந்து புண்ய பத்மத்தை (தாமரை) படைத்தவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு, இவ்வுலக வாழ்க்கை இடுப்பளவு மாத்திரமே என்பதை உணர்த்த,  திருக்கரங்களை தன் இடையில் வைத்தருளுபவரும்,  நிர்க்குண பரப்ரஹ்ம ஸ்வரூபருமான‌  பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ஸ்பு²ரத்கௌஸ்துபாலங்க்ருதம் கண்ட²தே³ஸே²
ஸ்²ரியா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீனிவாஸம் | 
ஸி²வம் ஸா²ந்தமீட்³யம் வரம் லோகபாலம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 4 || 

கௌஸ்துப மணி ஹாரம் தம் அழகிய திருக்கழுத்தை அலங்கரிக்க, அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அரிய அணிமணிகளும் தோள்வளைகளும் (கேயூரம்) அணிந்தவரும், திருமகளின் இருப்பிடமானவரும், மங்கள ஸ்வரூபியும், அமைதியின் சொரூபமானவரும், இவ்வுலகத்தை ரட்சித்து காக்கும் நிர்குண பரம்பொருளுமான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ஸ²ரச்சந்த்³ரபி³ம்பா³னனம் சாருஹாஸம்
லஸத்குண்ட³லாக்ராந்தக³ண்ட³ஸ்த²லாந்தம் | 
ஜபாராக³பி³ம்பா³தரம் கஞ்ஜனேத்ரம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 5 || 

இலையுதிர் காலத்து நிலவைப் போன்று பிரகாசமும்,  மனதைக் கவரும் அழகிய புன்சிரிப்பும் கொண்டவரும், ஜொலிக்கும் குண்டலங்களின் பிரகாசம் பிரதிபலிக்கும் அழகிய கன்னங்களை உடையவரும்,  சிவந்த செம்பருத்தி மலர் மற்றும் பிம்ப பழத்தின் நிறத்தை ஒத்த உதடுகளை உடையவரும், செந்தாமரை மலர் போன்ற(கஞ்ஜனேத்ரம்) அழகிய கண்களைக் கொண்டவரும், நிர்குண பரம்பொருளுமான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

கிரீடோஜ்வலத்ஸர்வதி³க்ப்ராந்தபாக³ம்
ஸுரைரர்சிதம் தி³வ்யரத்னைரனர்கை: | 
த்ரிபங்கா³க்ருதிம் ப³ர்ஹமால்யாவதம்ஸம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 6 || 

சிரசில் அணிந்த பொற்கிரீடத்தின் ஜொலிக்கும் கதிர்வீச்சு,  அனைத்து திசைகளிலும் பிரகாசத்தை ஏற்படுத்த, தேவர்களால் விலைமதிப்பில்லாத ரத்னங்களை கொண்டு பூஜிக்கப்படுபவரும், மூன்று வளைவுகள் உடைய திருவுருவைக்(த்ரிபங்கா) கொண்டவரும், நறுமணம் வீசும் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையையும், மயிற்பீலியையும் அணிந்தவரும் நிர்குண பரம்பொருளுமான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

விபும் வேணுனாத³ம் சரந்தம் து³ரந்தம்
ஸ்வயம் லீலயா கோ³பவேஷம் த³தானம் | 
க³வாம் ப்³ருந்த³கானந்த³த³ம் சாருஹாஸம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 7 || 

சர்வ வியாபியும், வேணுகானம் (புல்லாங்குழல்) இசைப்பவரும், அசுர (தீய) சக்திகளின் எமனாக விளங்குபவரும், தம் லீலைகளின் பொருட்டு, விளையாட்டாக, பசுக்களை மேய்க்கும் இடையனைப் போன்ற ஆடைகள் தரித்தவரும்,  பசுக்களின் கூட்டத்திற்கும் மகிழ்ச்சியை அளிப்பவரும், தாமரையை போன்ற அழகிய புன்சிரிப்பு உடையவரும் நிர்குண பரப்ரஹ்ம ஸ்வரூபியுமான‌ பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

அஜம் ருக்மிணீப்ராணஸஞ்ஜீவனம் தம்
பரம் தாம கைவல்யமேகம் துரீயம் | 
ப்ரஸன்னம் ப்ரபன்னார்திஹம் தே³வதே³வம்
பரப்³ரஹ்மலிங்க³ம் பஜே பாண்டு³ரங்க³ம் || 8 ||

சுயம்புவாக தோன்றியவரும், (பிறப்பில்லாதவரும்),  ருக்மிணியின் பிராண நாதரானவரும், பிரபஞ்சத்திற்கே ஒளியானவரும், மோட்சத்தை அடைவதற்கான ஒரே வழியாக இருப்பவரும், முக்குணங்களுக்கும் மேலான, நான்காவது நிலையில் (துரீயம்) இருப்பவரும் (முக்குணங்களுக்கும் (சத்வம், ரஜஸ், தமஸ்) அதன் விளைவான முத்தொழில்களுக்கும் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) மேலான நான்காவது பரப்ரஹ்ம நிலைதான் துரீயம். (நிறை ஆனந்த நிலையே துரீயம்). எப்பொழுதும் சந்தோஷத்துடனும் திருப்தியுடனும்  இருப்பவரும்,  தேவர்களுக்கு எல்லாம் தேவரான மஹாதேவரும்,  தஞ்சம் என்று நாடி வந்தோரின் கஷ்டங்களையும், குறைகளையும் நீக்கும் நிர்குண பரப்ரஹ்ம ஸ்வரூபருமான பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ஸ்தவம் பாண்டு³ரங்க³ஸ்ய வை புண்யத³ம் யே
பட²ந்த்யேகசித்தேன பக்த்யா ச நித்யம்‌ | 
பவாம்போனிதிம் தே விதீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் ஸா²ஸ்²வதம் ப்ராப்னுவந்தி ||

யார் ஒருவர் இந்த பாண்டுரங்காஷ்டத்தை தினமும் பக்தியுடனும், நிஷ்டையுடனும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்களுக்கு சம்சார‌ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கை எளிதாவதோடு, இவ்வுல வாழ்விற்குப் பின் விஷ்ணு லோக பிராப்தியும் கிட்டும்.

|| இதி ஸ்ரீமத் பரமஹம்ʼஸ பரிவ்ராஜகாசார்யஸ்ய ஸ்ரீ கோ³விந்த³ பக³வத் பூஜ்யபாத³ ஸி²ஷ்யஸ்ய ஸ்ரீமச்ச²ங்கரபக³வத: க்ருதௌ பாண்டு³ரங்கா³ஷ்டகம் ஸம்பூர்ணம்  ||

No comments:

Post a Comment