ஹனுமான் சாலீஸா தொடரின் நிறைவாக தமிழ் விளக்கவுரை வருகிறது. ஹனுமான் சாலீஸாவின் பதிவு 1 முன்னுரை படிக்க இங்கு சொடுக்கவும். இரண்டாவது பகுதி ஸ்தோத்ரம் தேவநாகரியிலும் மற்றும் தமிழிலும் படிக்க இங்கு சொடுக்கவும். தொடர்ச்சியாக சங்கட மோசன ஹனுமான் அஷ்டகம் மற்றும் ஹனுமான் ஆரத்தி பின்வரும் பதிவுகளில் வரும். ஹனுமான் சாலீஸாவை ஹிந்தி மூலத்தில் உள்ளபடி இரண்டு வரி தோஹாக்களாக தமிழில் பாடல்களாக படிக்க இங்கு சொடுக்கவும்.
ஸ்ரீ அனுமன் நாற்பது
கோஸ்வாமி துளசிதாசர்
அருளிய
ஸ்ரீ ஹனுமான் சாலீஸா -
மொழிபெயர்ப்பு
[ஸ்ரீ ஹனுமான் சாலீஸாவை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவருக்கு ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த பலனும், 40 நாட்கள் காலையில் பாராயணம் செய்தால் துயரம் விலகுவதும், 108 முறை பாராயணம் செய்தால் தடங்கலான காரியம் கை கூடுவதும், தினமும் மும்முறை பாராயணம் செய்தால் வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவர் என்பதும் ஆன்றோர் கூற்று.]
தோஹா 1
ஸ்ரீ குருவின் பாதத்
தாமரைகளின் மகரந்த பொடிகளால் எனது மனம் என்னும் கண்ணாடியைத் தூய்மைப்படுத்தி, தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோட்சம் (வீடு) என்னும்
நான்குவிதமான புருஷார்த்தங்களையும் கொடுக்கும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின்
நிர்மலமான புகழை வர்ணிக்கின்றேன்.
தோஹா 2
ஹே வாயுகுமாரனே ! நான்
தங்களைத் தியானம் செய்கின்றேன். என்னுடைய உடலும், அறிவும் பலம் குறைந்தவை என்பதைத் தாங்கள்
அறிவீர்கள். எனக்கு உடலுக்கு ஆற்றலையும், நல்ல புத்தியையும் அறிவையும் கொடுங்கள். என்னுடைய அனைத்து
கிலேசங்களையும் விகாரங்களையும் அழித்துவிடுங்கள்.
(கிலேசம் = அஞ்ஞானம் அதாவது அவித்யா, அஸ்மிதா, ராகம், துவேஷம், அபிநிவேசம்.
விகாரம் = பிறப்பு -
இறப்பு என்கின்ற சம்சாரமாகிய கடலின் துன்பச்சுழற்சியில் இருந்து விடுபடுதல்.)
சௌபாயீ
1. ஸ்ரீ ஹனுமானே ! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். தங்களுடைய
ஞானமும், குணமும் ஆழம் காண
முடியாதவை. வானரத்தலைவனே ! வாழ்க ! வாழ்க ! மூன்று உலகங்களிலும் உமது புகழ்
பிரகாசிக்கின்றது.
2. இராமதூதனே ! தாங்கள் ஈடு இணையற்ற பலம் உடையவர். அஞ்சனை
புத்திரன் என்றும், வாயு குமாரன்
என்றும் போற்றப்படுபவர்.
3. தாங்கள் மகாவீரர் ; அளவற்ற பராக்கிரமம்
உடையவர் ; வஜ்ரம் போன்ற அவயவங்களைக் கொண்டவர். தீய புத்தியை நீக்கி, நல்ல புத்தியைக் கொடுத்து
அன்பர்களுக்கு உதவி செய்பவர்.
4. பொன்னிற வண்ணத்திருமேனி, காதுகளில் குண்டலம், சுருண்ட செந்நிறமான கேசம் - இத்தகைய உருவத்துடன் தாங்கள்
மிக அழகாக விளங்குகிறீர்கள்.
5. தங்கள் திருக்கரங்களில் வஜ்ராயுதமும் கொடியும் காட்சி
அளிக்கின்றன. தங்கள் தோளில் தர்ப்பத்தால் ஆன பூணூல் அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.
6. தாங்கள் உண்மையில் சிவபெருமானின்
அவதாரமே! (சுவனமே!) மிகவும் பரிசுத்தமான, அழகான, ஏகாந்தமான கைலாச
பர்வதத்தின் சிகரத்தில் தாங்கள் நிரந்தரமாக இராமநாம ஜபம் செய்கின்றீர்கள். தங்கள்
இருதயமாகிய வனத்தில் பகவான் ஸ்ரீராமன் எப்பொழுதும் உலவிக் கொண்டிருக்கிறார்.
சாட்சாத் ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதை அறிந்து, பரமேசுவரனாகிய தாங்களே, ஸ்ரீராமனின்
கைங்கரியத்திற்காக கேசரி என்னும் வானர ராஜனின் மைந்தனாக அவதாரம் செய்தீர்கள்.
கேசரியின் மைந்தரே ! தாங்கள் தேஜஸினாலும் பராக்கிரமத்தினாலும் மிகவும் உயர்ந்தவர்.
உலகங்கள் அனைத்திலும் தாங்கள் வணங்கப்படுகின்றீர்கள்.
7. தாங்கள் ஆழம் காண முடியாத
கல்விக்கடல்; நற்குணங்கள் நிரம்பியவர்; செயலாற்றுவதில் மிகுந்த
திறமை உடையவர். ஸ்ரீராமனுக்குப் பணிபுரிவதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவர்.
8. தாங்கள், ஸ்ரீராமனுடைய
திருக்கல்யாண குணங்களைக் கேட்பதில் மகிழ்ந்திருக்கிறீர்கள். ஸ்ரீராமன், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் தங்கள்
இதயத்தில் குடி கொண்டுள்ளார்கள். அவர்களின் இதயங்களில் தாங்கள் குடி
கொண்டுள்ளீர்கள்.
9. தாங்கள் மிக நுட்பமான, சிறிய உருவம் எடுத்து
சீதையின் முன் வெளிப்பட்டீர்கள். மிகப்
பயங்கரமான உருவம் எடுத்து இலங்கையைக் கொளுத்தினீர்கள்.
10. தாங்கள் மிகவும்
பயங்கரமான, பெரிய உருவம்
எடுத்து அரக்கர்களை அழித்தீர்கள். இவ்விதமாக, ஸ்ரீராமபிரானின்
காரியங்களை நிறைவேற்றினீர்கள்.
11. தாங்கள், சஞ்ஜீவினி மலையைக் கொண்டு
வந்து லட்சுமணனின் உயிரைக் காத்தீர்கள். இதனால் ஸ்ரீரகுவீரன் மகிழ்ச்சி அடைந்து, தங்களை மார்போடு
அணைத்துக் கொண்டார்.
12. ஸ்ரீராமபிரான்,
"நீ, எனக்குப் பரதனைப் போல மிக்க
அன்புடைய சகோதரன்" என்று திருவாய்மலர்ந்தருளி, தங்களை மிகவும் புகழ்ந்து
கொண்டாடினார்.
13. 'உன்னுடைய புகழை ஆயிரம் நா
படைத்த ஆதிசேஷனானவர் பாடிக் கொண்டு இருக்கட்டும்' என்று கூறி, சீதாபதியாகிய ஸ்ரீராமச்சந்திரன்
மிக மிக அன்போடு தங்களை மார்புறத் தழுவிக் கொண்டார்.
14. சனகாதி முனிவர்கள், பிரம்மா முதலிய தேவர்கள், நாரதர், சரஸ்வதி தேவி மற்றும்
ஆதிசேஷன்,
15. மேலும் யமராஜன், குபேரன் முதலிய எல்லா
திக்பாலகர்கள், கவிஞர்கள், வித்துவான்கள், பண்டிதர்கள் ஆகியோர்
எவ்வளவுதான் புகழ்ந்தாலும், உமது பெருமைக்கு எல்லை எது?
16. தாங்கள், சுக்ரீவனுக்கு எவ்வளவு
பெரிய உபகாரம் செய்து இருக்கிறீர்கள் ! அவரை, ஸ்ரீராமனோடு இணைத்து
வைத்தீர்கள். அதனால் அவருக்கு அரச பதவி கிடைக்கச் செய்தீர்கள்.
17. தங்களுடைய ஆலோசனையை
விபீஷணர் ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் இலங்கையின் அரசர் ஆனார். இவையனைத்தும்
எல்லா உலகங்களும் அறியும்.
18. ஈராயிரம் யோஜனை
தூரத்திற்கு அப்பால் இருந்த சூரியனைத் தாங்கள் ஓர் இனிய பழம் என்று கருதி, அதனிடம் நெருங்கிச்
சென்றுவிட்டீர்கள்.
19. தாங்கள், பிரபு இராமச்சந்திரனின்
கணையாழியைத் திருவாயில் வைத்துக் கொண்டு, சமுத்திரத்தை அனாயாசமாகத்
தாண்டினீர்கள். (தங்களின் அளப்பரிய ஆற்றலை அறிந்தவர்களுக்கு),இதில் எவ்வித ஆச்சரியமும்
இல்லை.
20. உலகத்தில் எவ்வளவு
கடினமான காரியங்கள் இருந்தாலும், தங்கள் அருள் இருப்பின், அவை எளிதாகவே
நடந்துவிடுகின்றன.
21. தாங்கள், ஸ்ரீராமச்சந்திரனுடைய
வாயிற்காப்பாளர். தங்கள் கருணையில்லாமல் யாரும் அவரை அணுக முடியாது. (ஸ்ரீராமனுடைய
அருளைப் பெறுவதற்கு முதலில் தங்களின் அருளைப் பெற வேண்டும்.)
22. உமது திருவடிகளை யார்
வந்து அடைந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது. தாங்கள்
பாதுகாவலராக இருக்கும்போது, நாங்கள் எதைக் கண்டு பயப்பட வேண்டும் ?
23. தங்களிடம் உள்ள மிகுதியான
தேஜஸை, ஆற்றலைக் கட்டுக்குள் வைக்க உம்மால் மட்டுமே முடியும்.
"ஹூம்" என்ற உமது கர்ஜனையால் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
24. மகாவீரனே ! உமது
திருநாமத்தை யார் பக்தியுடன் உச்சரித்தாலும், அவரருகில், பூத பிசாசுகள்
நெருங்குவதில்லை. உமது திருநாமத்தின் சப்தம் கேட்ட மாத்திரத்தில் அவை விலகிச்
சென்று விடுகின்றன.
25. வீர ஆஞ்சநேயனே ! உமது
பெயரை இடைவிடாது ஜபம் செய்வதினால் எல்லாத் துன்பங்களும், கிலேசங்களும் அகன்று
விடுகின்றன.
26. ஹே ஹனுமானே ! மனதாலும்
செயலாலும் சொல்லாலும் எவர் தங்களிடமே ஈடுபட்டு இருக்கிறார்களோ, அவர்களுடைய எல்லாத்
துன்பங்களிலிருந்தும், தாங்கள் அவர்களை விடுவிக்கிறீர்கள்.
27. எல்லாவற்றிற்கும்
மேம்பட்ட பரம்பொருளாகவும், தவம் செய்பவர்களில் சிறந்தவராகவும் விளங்குகின்ற
ஸ்ரீராமபிரானின் சகல காரியங்களையும் தாங்கள் செவ்வனே நிறைவேற்றியுள்ளீர்கள்.
28. மேலும், தங்களை
வழிபடுகின்றவர்களுடைய எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன. வாழ்க்கையில்
மதிப்பிட முடியாத நற்பலன்களும் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
29. தங்களுடைய பிரதாபம்
சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு
யுகங்களிலும் போற்றப்படுகிறது. உலகத்தில் உமது புகழ் எல்லா இடங்களிலும் ஒளிவீசித்
திகழ்கிறது.
30. ஸ்ரீராமனுடைய
பேரன்பிற்குப் பாத்திரமானவரே ! தாங்கள் சாது - மகாத்மாக்களைக் காப்பாற்றுகிறீர்கள்; அசுரர்களை (தீய சக்திகளை)
அழிக்கிறீர்கள்.
31. தாங்கள் அஷ்டமா
சித்திகளையும் நவநிதியங்களையும் அனைவருக்கும் அளிக்கக் கூடியவர். இந்த வரத்தைத்
தங்களுக்கு சீதாபிராட்டியார் அருளியிருக்கிறார்.
32. ஸ்ரீராமபிரானுடைய பெயர்
என்னும் ரசாயனம் (ஆனந்தக்கடல்) எப்பொழுதும் தங்களுடைய இதயத்தில் அலைபாய்ந்து
கொண்டிருக்கிறது. மேலும், தாங்கள் எப்பொழுதும் அவருடைய திருவடிகளைத் தாங்கிக் கொண்டு, அவரது தாசனாக
இருக்கின்றீர்கள்.
33. யார் தங்களை
வழிபடுகின்றனரோ, அவர்கள் ஸ்ரீராமனை அடைகின்றனர். அவர்களுடைய பல பிறவிகளில்
ஏற்பட்ட துக்கங்கள் அனைத்தும் விலகிப் போகின்றன.
34. அவர்கள் தமது உலக
வாழ்வின் முடிவில், ஸ்ரீரகுவீரனுடைய பரமபதத்தை அடைகின்றார்கள். அவர்கள் இந்தப்
பிறவியில் "ஹரிபக்தன்" என்று போற்றப்படுகிறார்கள்.
35. ஸ்ரீஹனுமானைத் தவிர வேறு
எந்த தெய்வத்திடமும் மனதைச் செலுத்தாமல் அவர் ஒருவரையே வழிபடுவதினால், எல்லா வகையான சுகங்களும்
கிடைக்கின்றன.
36. வீரம் மிகுந்த மாருதியை
நினைக்கின்றவர்களுடைய எல்லாத் துன்பங்களும் அழிந்து போகின்றன; எல்லாக் கஷ்டங்களும் முடிவு பெற்றுவிடுகின்றன.
37. கருணைக்கடலாகிய இராமதூதனே
! போற்றி ! போற்றி ! போற்றி ! தாங்கள் கருணை மிகுந்த குருதேவரைப் போல எமக்கு
அருள்புரியுங்கள்.
38. எவரொருவர் இந்த ஹனுமான்
சாலீஸாவை நூறு முறை படிக்கின்றாரோ, அவர் எல்லா
பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறார். அவருக்குப் பரமானந்தம் கிடைக்கும்.
39. "இந்த ஹனுமான் சாலீஸாவைப்
படிப்பவருக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்" என்பதற்கு கௌரீசங்கரரான
ஸ்ரீபரமேசுவரன் சாட்சியாக இருக்கிறார்.
40. ஸ்ரீதுளசிதாசர்
சொல்கிறார் - ஹே ஹனுமானே ! ஸ்ரீ சீதா - ராம - லட்சுமணர்களுடன் தாங்கள், ஸ்ரீராமனை அடைக்கலமாகக்
கொண்டுள்ள என்னுடைய இதயத்தை என்றும் உமது இருப்பிடமாகக் கொள்வீராக!
தோஹா 3
தேவர்களுக்குத் தலைவரே !
வாயுகுமாரரே ! சங்கடங்களைத் தீர்ப்பவரே ! மங்கள வடிவினரே ! தாங்கள் ஸ்ரீசீதா - ராம
- லட்சுமணர்களுடன் என்னுடைய இதயத்தில் வசிப்பீராக !
கோஸ்வாமி துளசிதாசர்
அருளிய "ஸ்ரீ ஹனுமான் சாலீஸா" (ஸ்ரீ ஹனுமான் நாற்பது) முற்றிற்று.
நன்றி: கீதா பிரஸ், கோரக்பூர்.
No comments:
Post a Comment