Thursday, May 19, 2011

அன்னபூரணி விரதம்


அன்னபூரணி விரதம்
விரதங்களுள் மிக முக்கியமானது அன்னபூரணி விரதம். மகத்துவமான சக்தி பொருந்தியது. சிவபெருமானே ஞானத்துக்காக அன்னபூரணியிடம் வேண்டி நின்றிருக்கிறார். இதன் மகத்துவத்தை அதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அன்னபூரணி விரதம் முக்கியமாக தீபாவளி சமயம் வரும் மூன்று தினங்களிலும், ஒவ்வொரு மாதத்திலும் வரும் மூல நட்சத்திரத்திலும் மேற்கொள்ளலாம். ஆவணி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் (4), மகா சிவராத்திரிக்கு மறு நாள், ஸ்ரீ ராம நவமிக்கு முதல் நாள் வரும் அஷ்டமி தினம் போன்ற நாட்களில் விரதமிருந்து அன்னபூரணியை பூஜிப்பது நல்லது.  இது தவிர குடும்பத்தில் மேன்மேலும் கஷ்டங்கள் வந்து கொண்டிருந்தால் குடும்பத்தினர் 48 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும். குரு முகமாக அன்னபூரணி மந்திரத்தை உபதேசம் பெற்று பூஜித்தால் இன்னும் சிறப்பானது.

அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். காலையிலிருந்து மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பசி தாங்காதவர்கள், நோயாளிகள் மட்டும் சிறிது பால் அருந்தலாம். மாலை ஆறு மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

இப்பூஜையில் அன்னபூரணி விக்கிரகம் வைப்பது முக்கியமானது. காசி சென்று வந்தவர்கள் அன்னபூரணி விக்கிரகம் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம். ஆதலால் பெரும்பான்மை இல்லங்களில் இருக்கும்.

பூஜை செய்யும் இடத்தை தூய்மைப்படுத்தி, அங்கு பச்சரிசியினால் மாக்கோலமிடவும். பூஜை செய்பவர்கள் வெண்பட்டு அல்லது கோதுமை நிற நூல்புடவை தரித்துக் கொண்டு செய்ய வேண்டும். மணைப் பலகையைக் கிழக்கு நோக்கி வைத்து மாக்கோலமிட்டு, அதன் மேல் பித்தளைப்படியை வைத்து, அதில் பச்சரிசியை நிரப்பி, சிறிது துவரம் பருப்பு சேர்த்து, அதன் மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும். வட இந்தியர்கள் அரிசி மீது கோதுமை வைத்துச் செய்வர். அன்னபூரணி விக்கிரகத்துக்கு அழகிய பாவாடை உடுத்தி, கருக மணியை மஞ்சள் சரடில்  கோத்து அணிவிக்கவும். முத்துமாலை இருந்தால் அதையும் அணிவிக்கலாம். ஐந்து வண்ணப் புஷ்பங்களால் மாலை கட்டி அணிவிக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் வடக்கு பார்த்து மணைப் பலகையில் அமர்ந்து செய்யவும். பச்சரிசி மாவினால் 16 விளக்குகள் செய்து சுற்றிலும் வைத்து தீபமேற்றவும்.

முதலில் அன்னபூரணியை ஆவாஹனம் செய்யவும். அட்சதை, புஷ்பங்களைக் கையில் எடுத்து மனமுருகப் பிரார்த்தித்து சங்கல்பம் செய்து கொள்ளவும். பிறகு 16 வகை (ஷோடச) உபசாரம் செய்து, புஷ்பம், அட்சதை கொண்டு "அன்னபூரணி அஷ்டோத்திரம்"  (108 நாமாவளி) கூறி வழிபடவும். இறுதியில் தசாங்க தூபம் காட்டி பஞ்சதீபம் காட்டவும்.

நைவேத்தியம்: அன்னபூரணிக்கு உகந்தது பாயசம். எந்தவிதமான பாயசமாகவும் இருக்கலாம். உலர் பழ வகைகள் (dry fruits), வாழை மற்றும் கற்கண்டு வைக்கவும். தாம்பூலத்தின் மீது அதிக விருப்பமுடையவள். சாதாரணமாகத் தயாரிக்கும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் உரித்த ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஜாதிப் பத்ரி சேர்த்து மடித்து, அதன் மேல் லவங்கத்தை வைத்துச் செருகி விசேஷமாகத் தாம்பூலம் தயாரிக்க வேண்டும்.

மூன்று காலங்களுக்கும் அப்பாற்பட்டவள் அம்பிகை. இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தியானவள். மூன்று விதமான தாபங்களையும் போக்குபவள்; மூன்று விதமான பாவங்களையும் அழித்து ரட்சிப்பவள்.அவளிடம் நம்முடைய சரீரத்தில் உள்ள முக்குணங்களின் தோஷங்களையும் நீக்க வேண்டி மூன்று தீபம் ஏற்றி அன்னபூரணியை வழிபட வேண்டும். கை நிறைய புஷ்பங்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதக்கமலங்களில் சமர்ப்பித்து நான்கு முறை நமஸ்கரிக்க வேண்டும்.

அன்னபூர்ணாஷ்டகம், அன்னபூர்ணாபஞ்சரத்னம் போன்ற சுலோகங்களைத் தெரிந்தவர்கள் கூறி வழிபடலாம். பிறகு கண்களை மூடியபடி, உளமுருகப் பிரார்த்திக்கவும். முடிவில் அன்னபூரணியின் பாதங்கமலங்களில் பூஜையைச் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாம் பூர்த்தியான பிறகு உணவு உட்கொள்ள வேண்டும்.

2 comments:

agarai said...

Thanks for the publish. Iam going to start the virutham

kshetrayatraa said...

Hi Agarai,

Thanks for your visit and comment. Nice to know you intent to start the Vrat . Please do the Annapoorni Vrat...Devi Maa will bestow her abundance on you.

Post a Comment