Thursday, February 10, 2011

பொன் பொழிகள் 50 - Part 2


பொன் பொழிகள் 50 - Part 2
11.  வாழ்க்கையில் மூன்று உண்மைகள்:
     ஒன்று - நம்மில் ஒவ்வொருவரிடமும் குறைவாகவோ அதிகமாகவோ, பிறரை மகிழ
     வைக்கும் அல்லது வருந்த வைக்கும் சக்தி இருக்கிறது.
    இரண்டு - பிறரைக் களிப்படையச் செய்வது, அவர்களைக் கஷ்டப்பட வைப்பதைக்     காட்டிலும் லாபகரமானது,
மூன்று - பிறரை மகிழ்விக்கும்போது நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

12. பயனில்லாமல் எதேச்சையாக மனம் செல்வதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒருவர், "நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே "இதை நினைத்தேன். இது என் மனத்திலுள்ள எண்ணம்." என்று எளிதில் சொல்லக் கூடியவாறு மனத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

13. நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம். எப்போதாவது அது கிடைக்கும் போது, எதிர்பாராத பரிசாக அது இன்பம் தரும்.

14. தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக் கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னை நேசிக்கட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்பேனாக.

15. சில மனிதர்கள் புரிந்து கொண்டு பெருவெற்றி அடையும் வண்ணம் பயன்படுத்தும் ஒரு சக்தி தான் நம்பிக்கை. நீங்கள் விரும்பும் பொருளை அல்லது சாதனையைத் தெள்ளத் தெளிவாக மனத்தில் ஒரு படமாக வரைந்து கொண்டு அதைச் செயலாக்க உங்கள் முழுச்சக்தியையும் பயன்படுத்துவீர்களேயானால், செயற்கரியவற்றைச் செய்துவிடலாம்.

16. வீரனாக இரு. எப்போதும் "அச்சமில்லை! அச்சமில்லை! " என்று சொல்லிக் கொள். அச்சம் மரணம், அச்சம் பாவம், தீயொழுக்கம். உலகத்திலுள்ள தவறான எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்து தான் பிறந்திருக்கின்றன.

17. இன்று, ஒரு கோபத்தை மறந்து சமரசம் செய்து கொள்ளுங்கள். அல்லது மறக்கப்பட்ட ஒரு நண்பரைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அல்லது ஏதேனும் ஓர் அரிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். அல்லது ஒரு தவறுக்காக மன்னிப்புக் கோருங்கள். அல்லது ஒரு குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்.

18. உன்னை அடுத்தவர்கள் நேசிக்கிறார்களா என்பது பற்றிக் கவலையில்லை. அடுத்தவர்களை நீ நேசித்தபடி இருக்க வேண்டும்.

19. உங்கள் கஷ்டங்களைக் கடவுளிடம் சொல்லுங்கள். அமைதியான பிரார்த்தனையாகச் சொல்லுங்கள். அவர் கேட்பார். தீர்வும் சொல்வார். மனிதர்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் தீர்வு சொல்ல மாட்டார்கள். சந்தோஷப்படுவார்கள்.

20. அறியாதவர்களுக்கு பாலில் மறைந்த நெய் போல் இருக்கிறான் ஆண்டவன். அறிந்தவர்களுக்கு தயிரின் மேலுள்ள வெண்ணெய் போல இருக்கிறான்.

No comments:

Post a Comment