இன்பம் விளைவிக்கும் சேனானி
முருகனின் அருட்கோலங்களில் ஒன்று சேனாதிபதி என்று சொல்லப்படும். இவரை சேனானி என்றும் சொல்வதுண்டு. தேவர்களுக்கு சூரபத்மனால் இன்னல்கள் வந்த நேரத்தில் அவற்றை களைவதற்காக சேனாதிபதியாய் அணிவகுத்து படை நடத்தி சூரனை அழித்தமையால் சுப்பிரமணியசுவாமிக்கு சேனானி என்ற பெயர்.
இவர் பன்னிரெண்டு கைகளும் ஆறு முகங்களும் கொண்டவர். வலது திருக்கரங்களில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் வழங்கும் அபய ஹஸ்தம், மற்ற ஐந்து கரங்களில் முறையே முசலம், வாள், சூலம், வேல், அங்குசம் ஆகியவை இருக்கும். இடது கைகளில் ஒன்று வரதகரமாக இருக்கும். மற்ற கைகளில் குலிசம், வில், தாமரை, தண்டம், பாசம், அம்பு ஆகியவை இருக்கும். இந்த வர்ணனை குமார தாந்திரத்திலும், ஸ்ரீ தத்துவ நிதியிலும் சொல்லப்பட்டுள்ள வர்ணனையாகும். திருத்தணிகைப் புராணத்தில்
அபயம், முசலம், வாள், சூலம்,
அயில், வேல், தோட்டி, வலம், வரதம்,
தபுசீர், குலிசம், சிலை, பதுமம்,
தண்டம், கதை, மற்று இடமாக
உமய இராறு கரதலமும்
ஒளிர்வித்து ஆறுமுகம் தோற்றி
சுப நன்கு அருளி இடர் துமிக்கும்
சேனாபதி சீர் தொகப் போகும்.
(உபயம் - இரண்டு; இடர் துமிக்கும் - துன்பம் போக்கும்) என்று சொல்லப்பட்டுள்ளது.
உலக வாழ்க்கை துன்பமயமானது. வாழும் அனைவரும் இன்பத்தை தேடுகிறார்கள். சங்க காலத்தில் வாழ்ந்த புலவன் ஒருவன், உலகம் துன்பமயமானது. அதனுடைய இயல்பை உணர்ந்தவர்கள் இனிமையை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே என்று பாடியிருக்கிறார். ஆண்டவனிடம் சுகமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லாரும் வேண்டுகிறார்கள்.
சேனானி என்று சொல்லப்படும் சுப்பிரமணிய கடவுள், சூரனை மட்டுமல்ல, பக்தர்களுக்கு வரும் எல்லாவகையான துன்பங்களையும் அழிப்பவர். இன்பங்களை அள்ளித்தருபவர். இவரை வழிபட்டால் அல்லல்கள் அகலும். இன்பமே விளையும். இவை திருத்தணிகைப் புராணம் சுபம் நன்கு அருளி, இடர் துமிக்கும் சேனாபதி என்ற தொடரால் குறிப்பிட்டிருக்கிறது.
சேனானியை வணங்கினால் பகைமை அழியும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். வழிபடுவோர் மனத்தில் இருக்கும் பொறாமை உணர்வு நீங்கும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த சேனானியை திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, போளூர்க்கு அருகில் உள்ள தேவிகாபுரம் சிவன் கோயிலில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வெப்லிங்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment