Friday, January 24, 2014

Ekadashi Vrat Katha – Shat Tila Ekadashi - சட்-திலா ஏகாதசி விரத கதை

 
 ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரேஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே
சட்-திலா ஏகாதசி
(மாசி மாதம் - கிருஷ்ண பட்ச ஏகாதசி)
ஜனவரி மாதம், 27ம் தேதி, திங்கட்கிழமை, மாசி மாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை சட்-திலா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். சட்-திலா ஏகாதசி விரத  மகிமையை நாம் காண்போம்.

மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாயிலாக கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி, " மதுசூதனா,  தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகள் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே, ஜகதீஸ்வரா, மற்ற ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகளையும் கேட்டு மகிழ என் மனம் விழைகிறது. தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான். 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீகிருஷ்ணர், "பார்த்தா ! இப்பொழுது, மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்" என்று கூறலுற்றார். 

ஒரு சமயம், தாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் ," முனிசிரேஷ்டரே!, பூமியில் மனிதர்கள், மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை, குரோதம், பொறாமை, உணர்ச்சியின் உத்வேகம் மற்றும் அறிவின்மையின் வசப்பட்டு செய்கின்றனர். பின்னர் "ஐயோ! நான் எத்தகைய மாபாதகத்தை செய்து விட்டேன்" என மனம் வருந்துகின்றனர். 

"முனிசிரேஷ்டரே, அத்தகைய மனம் வருந்தும் மனிதர்கள் நரகம் செல்லுவதிலிருந்து விடுபட ஏதேனும் உபாயம் உள்ளதா? . தான, தர்மம் மோட்சப்பிராப்தியை அளிக்கும் என்றால் எவ்வித தானத்தின் புண்ணிய பிரபாவத்தால் அவர்கள் நரகம் அடைவதிலிருந்து விடுபட முடியும்.? தயவு கூர்ந்து, நல்வழியைத் தாங்கள் தான், அவர்களுக்கு கூறி அருள வேண்டும்." என்றார்.

புலஸ்த்ய ரிஷி, "மஹாபாகா ! இவ்வுலக வாழ் மக்கள் அனைவருக்கும் பயனை அளிக்கும் முக்கியமான, அர்த்தமுள்ள, கம்பீரமான கேள்வியை கேட்டுள்ளாய். உன் கேள்விக்கு பதிலாக, இந்திரன் முதலான தேவர்களும் கூட இதுவரை அறிந்திராத ரகசியத்தை அவசியம் கூற வேண்டி உள்ளது. கவனத்துடன் கேள். மாசி மாதம் அதிகாலையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்து சுத்தமாக இருப்பதுடன், இந்திரியங்களை உள்ளடக்கி, காமம், குரோதம், லோபம், மோகம், பொறாமை, அகங்காரம் இவற்றை விட்டொழித்து, பகவான் ஸ்ரீவிஷ்ணுவை த்யானம் செய்ய வேண்டும். பூச நட்சத்திர தினத்தன்று பசுவின் சாணம் பூமியில் விழும் முன்பே சேமித்து, அதனுடன் பஞ்சு மற்றும் எள் சேர்த்து 108 பந்து உருண்டைகளாக செய்து வைத்தல் வேண்டும். மூல நட்சத்திரமும், ஏகாதசி திதியும் சேர்ந்து வரும் நன்நாளில் புண்ணியம் அளிக்கும் நற்கருமங்களை செய்ய வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாவிஷ்ணுவிற்கு விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்து, நாள் முழுதும் கீர்த்தனை, நாமஸ்மரணம் என்று ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்து முன்பு செய்து வைத்திருக்கும் 108 பந்து உருண்டைகளை கொண்டு யாகம் செய்ய வேண்டும்.. மறுநாள் தூப, தீபம், நைவேத்யத்துடன் பகவான் விஷ்ணுவின் பூஜை செய்து கிச்சடியை நைவேத்யமாக அர்ப்பணிக்க வேண்டும். அன்று மஹாவிஷ்ணுவிற்கு பால்பேடா, தேங்காய், சீதாப்பழம், கொய்யாப்பழம், பூசணி, (இவை கிடைக்காதபட்சத்தில் பாக்கு) இவற்றை கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன் அர்க்யம் கொடுத்தல் வேண்டும்.  

அர்க்ய பிரார்த்தனை:
"ஹே பகவான், தாங்கள்  திக்கற்றவர்களுக்கு புகலிடம் அளிப்பவர். இவ்வுலக மாயையில் மூழ்கி இருப்பவர்களை மீட்பவர். ஹே! புண்டரீகாக்ஷா,  தாமரை மலரை ஒத்த கண்களை கொண்டவரே!, விஸ்வவிதாதா (உலகைப்  படைத்தவரே!, சுப்ரமண்யா!! ) நீங்கள் தேவி லக்ஷ்மீ சகிதம் அடியேன் அளிக்கும் சிறிய அர்க்யத்தை ஏற்க வேண்டும்." 

அதற்குப் பிறகு பிராம்மணருக்கு ஜலம் நிரம்பிய கும்ப கலசம், குடை, காலணி, அங்கவஸ்திரத்துடன் உடை, எள் இவற்றை தானம் அளிக்க வேண்டும். முடிந்தால் பிராம்மணருக்கு பசுவுடன் எள் தானம் அளிப்பதும் மிகுந்த புண்ணியத்தை நல்கும்.

இப்படி எள் தானம் செய்ததின் அளவிற்கு ஏற்ப அத்தனை ஆயிரம் வருட காலம் ஸ்வர்க்கத்தில் வசிக்கும் பிராப்தியை பெறுவர். 

1. எள் நிரம்பிய நீர் ஸ்நானம்  
2. எள்ளினை உடம்பெங்கும் பூசிக் கொள்தல்
3. எள் ஹோமம் (தில ஹோமம்)  
4. எள்ளை உட்கொள்ளுதல்
5. எள்ளை தானமாக பெறுதல் மற்றும்
6. எள்ளை தானமாக அளித்தல் 

இப்படி 6 வகையான எள் பயன்பாடு சட்திலா (ஆறு வகையான எள்) என அழைக்கப்படுகிறது. இவ்வகை பயன்பாட்டால், அநேக பாபங்கள் விலகுகின்றன." என்று கூறிய புலஸ்திய ரிஷி," இப்பொழுது ஏகாதசி விரத கதையை கூறுகிறேன், கேள்." என்றார். 

ஒரு நாள் நாரத முனி பகவான் விஷ்ணுவிடம் சட்திலா ஏகாதசியை பற்றி வினவினார், "ஹே பகவான்! தங்களுக்கு என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். சட்திலா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியம் என்ன? அதன் மஹிமை என்ன? தயவு செய்து கூறுங்கள்." என்றார்.

நாரத ரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு, "ஹே நாரதா!, உண்மையில் நடந்த ஒரு சத்ய நிகழ்ச்சியை விவரிக்கிறேன். கவனத்துடன் கேள்." என்றார். பண்டைய காலத்தில் பூமியில் ஒரு பிராமண ஸ்திரீ வாழ்ந்து வந்தாள். அவள் எப்பொழுதும் விரதங்களை நியமத்துடனும், பக்தியுடனும் கடைபிடித்து வந்தாள். ஒரு சமயம் விரதத்தை ஒரு மாதம் வரை கடைபிடித்ததால், சரீரம் மிகவும் பலவீனமாயிற்று. அவள் பக்தியில் சிறந்து விளங்கினாள். பிராமணர்களுக்கும், கன்யைக‌ளுக்கும் தானங்களை, அவர்கள் மனமகிழ்ச்சி அடையும் அளவுக்குச் செய்தாள்.  சிறந்த புத்திமானாகவும் விளங்கினாள். 

தானம் பெற தகுதி வாய்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் வேண்டிய அளவு தானம் செய்தாலும், அவள் பக்தியின் ஒரு அம்சம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது என்னவென்றால், தர்மங்களில் தலைசிறந்த அன்னதானத்தை பிராமணர்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ, அவள் ஒருபொழுதும் செய்ததில்லை. என் எண்ணமெல்லாம், பிராமண ஸ்திரீ சிரத்தையுடன் அனுஷ்டித்த விரதங்களின் பலனால் தன் சரீரத்தை பரிசுத்தமாக்கிக் கொண்டதால், அவளுக்கு விஷ்ணுலோகம் நிச்சயம் கிட்டும். ஆனால் அன்னதானத்தின் பலன் இல்லாமல் ஜீவிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அன்னதானம் ஆத்மாவிற்கு சாந்தியை அளிக்கக்கூடியது. ஆகவே அவள் வைகுண்ட வாழ்க்கையை எளிதாக்க இக்குறையை நீக்க எண்ணினேன். இந்த எண்ணத்துடன் பூலோகம் சென்று பிராமண ஸ்திரீயிடம் அன்னப்பிட்க்ஷை வேண்டி நின்றேன். 

பிராமண ஸ்திரீ," ஹே மஹாராஜரே!, நீங்கள் எதற்காக வந்துள்ளீர்?" என்றாள். நானும்," பிட்க்ஷை வேண்டி வந்துள்ளேன்" என்றேன். அதைக் கேட்டு அவள் மணலால் ஆன ஒரு பிண்டத்தை தானமாக அளித்தாள். அதை வாங்கிக் கொண்டு நான் ஸ்வர்க்கத்திற்கு திரும்பி வந்து அவள் அளித்த மண்பிண்டத்தை வைத்து ஒரு அழகான வீடு அவளுக்காக அமைத்தேன். வீடு அழகாக அமைந்தது. ஆனால் வீட்டில் தான்யங்கள், இருக்கைகள், மற்ற எதுவும் இல்லாமல் அவள் அளித்த மண்னைப் போல் அமைந்து இருந்தது. சில காலம் கழித்து, அந்தப் பிராமண ஸ்திரீ மரணத்திற்குப் பிறகு ஸ்வர்க்கத்திற்கு வந்தாள். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவளுக்கு கிடைத்த இடத்தில் மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் அவ்வீட்டில் வேறு எதுவும் இல்லாமல் சூன்யத்துடன் இருந்தது. அதைக் கண்டு அவள் பயத்துடனும், கோபத்துடனும் என்னிடம் வந்து," ஹே பகவான், அநேக விரதங்களை கடைப்பிடித்து உங்களுக்கு பூஜை செய்தேன். ஆனால் என் வீட்டில் வேறு எந்த வஸ்துக்களும் இல்லை. இதற்கு என்ன காரணம்.?" என்றாள்.

அதற்கு நான்," நீ உன் இல்லத்திற்குச்  செல்வாயாக‌. அங்கு உன்னைக் காண தேவ ஸ்திரீகள் வருவர். அவர்கள் வரும் பொழுது, அவர்களிடம் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியம் மற்றும் பூஜை விதியைப் பற்றி கேட்கவும். அவர்கள் சொல்லும் வரை வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம்." என்றேன்.

பகவானின் வார்த்தைகளைக் கேட்டு அவள் வீட்டிற்கு திரும்பினாள். தேவ ஸ்திரீகள் அவளைக் காண வந்து வீட்டின் கதவுகளை திறக்க முற்பட்ட பொழுது பிராமண ஸ்திரீ அவர்களிடம், "நீங்கள் என்னைக் காண வேண்டும் என்றால், முதலில் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை கூறவும்." என்றாள்.

அவர்களில் ஒரு தேவ ஸ்திரீ," இது தான் உன் விருப்பம் என்றால், நான் உனக்கு சட்திலா ஏகாதசி விரதம் மற்றும் அதன் மஹாத்மியம், பூஜை விதி ஆகியவற்றைப் பற்றி சொல்கிறேன், கவனத்துடன் கேள்" என்றாள். அவள் சட்திலா ஏகாதசி மஹாத்மியத்தை கேட்டு முடித்தவுடன், பிராமண ஸ்திரீ வீட்டின் கதவுகளை திறந்தாள்.

தேவ ஸ்திரீகள் தாங்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாது ஒரு பிராமண ஸ்திரீயை கண்டு மிகவும் வியந்தனர். அவளை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவளாகவும் வித்தியாசமானவளாகவும் கண்டு வியந்து சென்றனர். பிராமண ஸ்திரீயும் அந்த தேவஸ்திரீ கூறியபடி சட்திலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் புண்ணிய பலனால் அவள் வீடு தனம், தான்யங்களால் நிரம்பி வழிந்தது.

"ஹே அர்ஜூனா, மனிதர்கள் அறியாமையை விட்டொழித்து சட்திலா ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் மனிதர்களின் நிரந்தர ஆரோக்கியத்தை பெறுவர். இதனால் அனைத்து பாபங்களும் அழியும்" என்று கூறி முடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கதாசாரம்
இந்த விரதத்தினால் நமக்கு சரீர சுத்தி, ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அன்னம், எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம், தான்ய விருத்தியும் கிட்டுகிறது. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ, அவை யாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும் பொழுது, கூடவே தானங்களையும் அவசியம் செய்ய வேண்டும். தான, தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  புத்ரதா  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சஃபால  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்குசொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment