Tuesday, March 26, 2013

Hanuman Chalisa Part 1 - ஹனுமான் சாலீஸா முன்னுரை

Courtesy - Google Images
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ॥

ஸ்ரீராமபக்தர்களில் தலைசிறந்தவரான ஸ்ரீஹனுமானின் மகிமை சொல்லற்கரியது. அஞ்சனையின் மைந்தனாக அவதரித்தருளியதால், ஸ்ரீ ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் பெற்ற வாயுமைந்தனின் பிரபாவம், சொல்வோரையும் கேட்போரையும் பேரின்பக் கடலில் ஆழ்த்தும் மகிமை வாய்ந்தது. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற, ஸ்ரீ ஆஞ்சநேய உபாசனையே தலையாய மார்க்கமாகும்.

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் சிரஞ்சீவியானவர். அவரை வழிபடாதோரே இல்லை என்று சொல்லலாம்.  குழந்தைகளுக்கு பிள்ளையார் முதலில் பிடித்தமானவர். அடுத்து மிகவும் பிடித்தமானவர் ஹனுமான்.  சூரியனை விழுங்கிய பாலஹனுமானின் லீலையை வியப்புடன் கேட்டு தானும் அம்மாதிரி புஜ பல பராக்கிரமசாலியாக வேண்டும் என்று வேண்டாத பாலகர்கள் இல்லை எனலாம்.

சனிக்கிழமை அன்று அனுமனை வழிபட்டால் சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. எப்போதும், 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்என்று ஸ்ரீராமனின் திருநாமாவை ஜபிக்கும் இடத்தில் ஜபிப்பவருக்கு உற்ற‌ துணையாக க்ஷண நேரத்தில் அங்கு இருப்பார். எங்கெங்கு ஸ்ரீரகுராமனின் புகழ் பேசப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் ஓடோடி வந்து அமர்ந்து, சிரம் மேல் கரம் குவித்து, கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய, கேட்ட வண்ணம் இருப்பார். இதன் காரணமாகவே, இராமாயணம் பாராயணம் செய்யும் இடங்களில், ஓர் பலகையில் கோலமிட்டு, பூ, அக்ஷதை முதலியவை இட்டு வைப்பார்கள். அதில் ஸ்ரீ ஹனுமான் வந்து அமர்ந்து கேட்பதாக ஐதீகம்.

நடக்க முடியாது என நாம் எண்ணும் காரியங்களை ஸாதிக்கக் கூடிய சக்தி பெற்றவர் ஸ்ரீராமதூத ஹனுமான். அவரின் கருணை முடியாததை முடித்துக் காட்டும்.

அஸாத்யஸ் ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவகிம் வத
ராமதூத கிருபா ஸிந்தோ மத்கார்யம் சாதய ப்ரபோ

என, சாத்தியமில்லாதவற்றைக் கூட சாதித்துக் காட்டும் ஸ்ரீஅனுமனிடம், நமது காரியங்களை நிறைவேற்றக் கேட்டு, கோரிக்கை வைத்துப் பிரார்த்திப்பது வழக்கம்.

ஸ்ரீராமனின் மீது ஈடு இணையற்ற, ஒப்புமையில்லாத பக்தி கொண்டவர். 'சொல்லின் செல்வன்' என ஸ்ரீராமபிரானே தம் திருவாய்மலர்ந்து பாராட்டிய பெருமை உள்ளவர்.

இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே" என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?-
வில் ஆர் தோள் இளைய வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ?
(கம்ப இராமாயணம், அனுமப்படலம்).

ஸ்ரீராமகாதையின் சிகரமான சுந்தரகாண்டம், ஸ்ரீஅனுமனின் பிரபாவங்களையே பெரிதும் பேசுகிறது. கடலைக் கடந்தது, காற்றும் புக முடியாத அசோகவனத்தில் நுழைந்து அன்னை சீதாபிராட்டி துக்கத்திலும், துயரத்திலும் மனம் விரக்தியடைந்து தற்கொலை எண்ணம் கொண்ட நேரத்தில் சமய சஞ்சீவினியாக ராம நாமத்தை ஜபித்துக்கொண்டு அங்கு தோன்றி, அண்ணலின் கணையாழியை அளித்து, நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியது, ஸ்ரீராமரின் புகழை இராவணனுக்கு விளங்க உரைத்தது, தன் வாலில் வைத்த நெருப்பைக்கொண்டு, இலங்கை நகரை எரித்தது, அன்னை சீதாவின் சூடாமணியை ஸ்ரீராமரிடம் சேர்ப்பித்து, ஸ்ரீராமரை மகிழச் செய்தது என அனுமனின் புகழைப் போற்றுகிறது சுந்தரகாண்டம்.

யுத்தகாண்டத்திலும், ஸ்ரீஹனுமானின் ஈடிணையற்ற ஸ்ரீராமசேவையைக் காணலாம். ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் லக்ஷ்மணன் மூர்ச்சையடைய, சஞ்சீவினி மலையை பெயர்த்து கொணர்ந்து சகலருக்கும் மறுவாழ்வு அளித்தவர் ஸ்ரீ ஹனுமான். அனுமனின் தன்னலமற்ற சேவையை பாராட்டி ஸ்ரீராமபிரான் எங்கெல்லாம் என் நாமம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் உன் புகழும் பாடப்படும் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்" 
என கம்பர் பெருமான், காப்புச் செய்யுளிலே, அனுமனைத் துதிக்கிறார்.

ஸ்ரீஹனுமானின் புகழ் பாடும் 40 ஸ்லோகங்கள் கொண்ட துதியே ஸ்ரீ ஹனுமான் சாலீஸா. இதை இயற்றியவர், ஸ்ரீ துளசி தாசர். இவர், இராமாயணத்தை, இந்தி மொழியில் 'ஸ்ரீ ராம சரித மானஸ்' என்ற பெயரில் எழுதிய பெரும் மகான். வால்மீகி முனிவரின் அவதாரமாகவே கருதப்படும் ஸ்ரீ துளசி தாசர், ஸ்ரீஹனுமானின் அருள் பெற்றே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெற்றார்.

ஹனுமான் சாலீஸா பற்றி ஒரு கதை வழக்கத்தில் உள்ளது. இதை இயற்றிய துளசிதாசர், ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரத் தலமான கோகுலத்தில் இருப்பதைக் கண்டார். அதன் பின் ஒரு நாள் மகாராஜா ஒளரங்கசீப் அவர்களை சந்தித்து தன் கண்ட காட்சியைப் பற்றி விவரித்தார். மகாராஜா துளசிதாசரிடம்தனக்கும் ஸ்ரீராமனை காண்பிக்குமாறு சொல்ல, அதற்கு கோஸ்வாமி துளசிதாஸ் உண்மையான பக்தி இல்லாமல் ராமனை காண்பது இயலாது என்று பதிலளித்தார். கோபம் அடைந்த மகாராஜா துளசிதாஸரை சிறையிலடைத்தாகவும், அப்பொழுது அனுமனை வேண்டி பிரார்த்தித்து துளசி தாசர், ஹனுமான் சாலீஸாவை இயற்றியதாகவும் கூறப்படுகிறது.

ஹனுமான் சாலீஸாவை இயற்றி முடித்ததும், முகலாயர்களின் தலைநகரமாக விளங்கிய டெல்லி நகரமே அணி அணியாக படையாக திரண்ட குரங்குகளின் அட்டகாசத்தால் திக்கித் தவித்தது. தடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின. கடைசியால் இது ஹனுமானின் கோபத்தால் உண்டான விளைவு என்று உணர்ந்து சிறையில் இருந்த துளசிதாசரை விடுவித்து அனுமானின் கோபத்திலிருந்து காத்தருளுமாறு வேண்டிக்கொண்டார். துளசிதாசர் விடுதலை ஆனதும் குரங்குகள் அனைத்தும் மாயமாக மறைந்தன.

பூரண பக்தியுடன் சாலீசாவை பாராயணம் செய்பவர், அனுமானின் அருளை நிச்சயம் பெறுவர் என்று துளசிதாசர் கூறுகிறார்.

தீர்க்கமுடியாத கோரமான பிரச்னைகள், பில்லி, சூனியம், துர் ஆவி பிடித்தல் போன்ற வாழ்வின் கடினமான கால கட்டங்களில் ஹ‌னுமான் சாலீஸா பாராயணம் அவரின் அருளை பெறுவதற்கு ஒரு முக்கிய வழியாக வட இந்தியாவில் நம்பப்படுகிறது.

எப்படி ஸ்ரீராமனின் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளை எல்லாம் அகற்றி ஸ்ரீ ராம ஜெயத்திற்கு துணை புரிந்தாரோ அதே போல் தன் மீது நம்பிக்கையுடன் பிரார்த்திப்பவருக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கி வாழ்வில் ஜயத்தை அருள்கிறார் ஸ்ரீஹனுமான்.

ஹனுமான் சாலீஸா பாராயணம் என்பது சாலீஸாவில் தொடங்கி, சங்கட மோசன அஷ்டகம், ஹனுமான் ஆரத்தியுடன் முடிவடைகிறது. நம்பிக்கையுடன் ராம நாம ஜபம் செய்து ஹனுமான் சாலீஸாவை பாராயணம் செய்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

No comments:

Post a Comment