Tuesday, November 6, 2012

Sri Amruthavalli Thayaar Stotram - ஸ்ரீ அம்ருதவல்லித் தாயார் ஸ்தோத்ரம்

Image Courtesy - Google Images
கருணையே வடிவெடுத்த அம்ருதவல்லி பிராட்டியின் அருளைப் பெற்றால் எம்பெருமானுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி எல்லோரும்  நன்மை பெறுவர் என்பது பூர்வாசாரியர்கள் கொள்கை. ஹிரண்யகசிபுவை ஸம்ஹரிப்பதற்கு அவதரித்த நரசிம்மரைக் கண்டு நடுக்கமுற்ற பிரமன் முதலிய தேவர்கள் பிராட்டியைத் துதித்து அவள் மூலமாக எம்பெருமானை வணங்கினர் என்பது புராணம். அம்ருதவல்லியாகிய பிராட்டியைத் துதித்தால் சீற்றமுள்ள நரசிங்கனும் மிக்க அருள் புரிவான். எனவே அம்ருதவல்லித் தாயாரின் ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்து எல்லோரும் வேண்டிய பயனைப் பெறுவார்களாக.

அம்ருதவல்லி ஸ்தோத்ரத்தை நாற்பது நாள் தினமும் பாராயணம் செய்து பூஜை செய்தால் தாயாரின் அருளினால் கோரிக்கை நிறைவேறும். நாற்பது நாள்களுக்கிடையே ஐந்து வெள்ளிக்கிழமை பூஜைகளும் தடையின்றி நடைபெற்றால் மனத்தில் நினைத்த விருப்பம் விரைவாகக் கை கூடுகிறது என்பது அனுபவம்


ஸ்ரீ அம்ருதவல்லித் தாயார் ஸ்தோத்ரம்

பாற்கடல் வாசினி பத்மதளாயினி பங்கஜ ரூபிணி சக்திமயே
பரமக்ருபாகரி பாபவிமோசினி தாப நிவாரணி தாரணியே
சகலகலாவதி சாந்த ஸ்வரூபிணி ஸர்வ அலங்க்ருத பூஷிதயே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

தேவி மனோஹரி தான விலாஸினி ஞான சிகாமணி காமினியே
வானவர் துதி செய்யும் வனித சஞ்சீவி ஞானியர் வணங்கிடும் நாயகியே
பக்தர்கள் வாசினி பரமதயாபரி முக்தி கொடுத்திடும் மோஹினியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

அகில ஜகன்னாதன் அன்புள்ள நாயகி ஆனந்த சாகரி அம்பிகையே
ஆதித்த ரூபிணி அனந்த குணசாலினி வேதியர் வணங்கிடும் ஆரமுதே
ஜோதி ப்ரஹாசினி சுந்தரி சவுந்தரி மஞ்சுள பாஷிணி காந்தினியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

பக்தர் விமோசினி சத்ரு விநாசினி நித்ய கல்யாணி நிர்மலதே
உத்தமியே உன் மலரடியை நான் நித்தம் துதி செய்ய அருள்வாய்
பரிமள வாசினி சுகந்தினி சுந்த்ரிணி குங்கும வர்ணனி கோமளியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

அம்ருத தளாயினி அம்புஜநாயகி ஸ்வர்ண ஸ்வரூபிணி சுலோசனியே
அபயகராயினி சமய சஞ்சீவினி விமல வினோதினி வேதருதே
மங்கள நாயகி மரகதவல்லியே எங்கும் நிறைந்திடும் பரம்பொருளே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

தனத்தில் உயர்ந்திடும் தான்ய மிகுந்திடும் குணத்தில் சிறந்திடும் குந்தனியே
தைரியம் தந்திடும் தர்மம் ஓங்கிடும் தரித்திரத்தைப் போக்கிடும் தயாநிதியே
வனஜ குமாரி வைதிகரூபிணி விஷ்ணு மனப்ரிய வாசினியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

தேனினும் இனியவள் பாலினில் பிறந்தவள் பாரினில் உயர்ந்தவள் பாவையவள்
நெஞ்சில் நிறைந்தவள் நாவில் உறைபவள் நற்கதி தந்திடும் நாயகியே
சூர்யப்ரஹாசினி சுகுண விலாசினி சண்முக நாயகி காமினியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

கருணாகரியே கமலலோசனியே கடைக்கண் பார்த்தென்னை ஆதரி
வாரணம் ஜோதி நாரணன் தேவியே பூர்ண சந்த்ர முகத்தவளே
அமுதைப் பொழிந்திடும் அருங்குண ஜோதியே குமுதத்தில் வீற்றிடும் கோமதியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

புண்யஸ்வரூபிணி புஷ்ப விலாசினி புவனத்தைத் தாங்கிடும் புனிதவதி
பொற்கொடியே உந்தன் பொன்மலர்ப் பாதத்தை போற்றிப் பணிந்திட அருள்புரிவாய்
நீரஜ தளனியே நளின சிங்காரியே நாராயணியே நற்கனியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

கடிகாசலினி கற்பக நாயகி அற்புதமானதோர் வடிவழகி
கடிய வினைகளுக்கும் அருமருந்தே உன்னைக் காணக் கண்கோடிகள் வேண்டும் அம்மா
நரசிம்மன் தேவியே நான்முகன் பூஜிக்கும் நவரத்னமணியே நல்மணியே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

துஷ்ட சம்ஹாரிணி கஷ்ட நிவாரணி இஷ்ட வரம் தரும் ரமாமணியே
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அளித்திடவே நீ ப்ரத்யக்ஷமாகி கடாக்ஷித்தருள்வாய்
நாராயணனின் திருமார்பினிலே வீற்றிருக்கும் ஸ்ரீ வரலக்ஷ்மி
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

சதுர்முகன் வணங்கிடும் சதுர்புஜ நாயகி சர்வ கலைகளுக்கு அதிபதியே
சமுத்ர ராஜனின் செல்வகுமாரி சகல காரிய சித்தி நீயே
செந்தாமரை தனில் வீற்றிடும் தேவியே சமரச ஞானமும் நிறைந்தவளே
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

தூண்டாமணியே சூடாமணியே சிந்தாமணியே ருக்மணியே
சீதாமணியே ஸ்ரீமணியே என் சிந்தையில் வாழும் நற்பவழமணி
கோலக்ஷ்மி பூலக்ஷ்மி ஜகலக்ஷ்மி கெஜலக்ஷ்மி 
க்ரஹலக்ஷ்மி ஜயலக்ஷ்மி வரலக்ஷ்மி
ஜய ஜய ஸ்ரீ திருமாலின் தேவியே பாதகமலங்களே சரணமம்மா.

ஜய வரலக்ஷ்மி சுப வரலக்ஷ்மி 
அமிர்த பலனைத் தரும் ஆதிலக்ஷ்மி
சரணம் சரணம் என்று உன் சந்நிதி அடைந்தேன் 
சர்வமும் உனக்கே சரணம் அம்மா
அம்ருத வல்லி உன் பெருமையைச் சொல்லிட
ஆயிரம் நாவுகள் வேண்டும் அம்மா
அறியாப் பேதை அடியாள் உன்னை
அன்புடன் பாடுவேன் கேள் அம்மா !

தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை
தயவுடன் பொறுத்தென்னைக் காவாய் அம்மா
தாயே உந்தன் தாளடி தன்னில்
தஞ்சம் அடைந்தேன் பாரம்மா

அம்ருத வல்லி உன் ஸ்தோத்திரத்தை
தினம் அன்புடனே படித்திடும் பக்தரெல்லாம்
அறியாப் புகழை அடைந்தே அவனியில்
ஆனந்தமாகவே வாழ்ந்திடுவார்
ஆண்டவன் திருவடி சேர்ந்திடுவார்

No comments:

Post a Comment