Wednesday, June 23, 2010

வாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்
வாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்
1.  உங்களின் வளங்களிலேயே மகத்தான நேர வளம் தான். நீங்கள் செய்ய நினைத்த செய்ய வேண்டிய செயலுக்காக ஒதுக்கிய ஒவ்வொரு வினாடியையும் வீணாக்காமல் பயன்படுத்துங்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் விழிப்புடன் இருங்கள்.

2.  தவறு செய்யும் சூழலிலும் தடுமாறாமல் இருப்பது தான் மன உறுதிக்கு அடையாளம். தவறான வாய்ப்பு கிடைக்கும் போதுகூட வழிமாறாமல் இருப்பது தான் உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் இருப்பதன் அறிகுறி. ஸோ, கண்ட்ரோலுடன் இருங்கள். உங்களின் தன்னம்பிக்கை லெவல் சர்ர்ரென்று அதிகரிக்கும்.

3. ஒன்றில் ஈடுபடுகிறபோது கையில் மற்றொரு வேலையையும் வைத்திருங்கள். உங்கள் பொறுப்புணர்வையும் நேரத்துக்குச் செய்து முடிக்கும் உந்துதலையும் அது ஏற்படுத்தும். அதுமட்டுமில்லை, இந்த "கோல் ஸெட்டிங்" விஷயங்கள் தான் உங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

4. உங்கள் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் எந்த எல்லையும் வைத்துக் கொள்ளாதீர்கள். "இவ்வளவு தான் உங்களால் முடியும்" என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

5. ஒரு மாத கால கடின உழைப்புக்கு இணையானது, ஒரு மணி நேர சிந்தனையில் உதிக்கும் புதுமையான யோசனை. வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதை வாழ்க்கை முறையாகவே வகுத்துக் கொள்ளுங்கள். ஆனால் "தொட்டதற்கெல்லாம் வித்தியாசம்" என்கிற குணம் உங்களை மன நோயாளியாக்கி விடும் ஜாக்கிரதை.!
6. நீங்கள் தரும் வாக்குறுதிகள் எவ்வளவு சிறியதென்றாலும் சரி, எவ்வளவு பெரியதென்றாலும் சரி, நன்கு யோசித்த பிறகே அவற்றை வழங்குகள். உறவினர் வீட்டிற்கு வருவதாகச் சொல்வதிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் பணம் தருவது வரை, எதுவாக இருந்தாலும், சொல்லிவிட்டால் பிறகு பின்வாங்காதீர்கள்.

7. எதைச் செய்தாலும் தனி முத்திரையோடு செய்யுங்கள். உங்களிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாகச் செய்யுங்கள். அரைமனதோடு எதைச் செய்தாலும் அதன் விளைவுகளும் அறைகுறையாகத்தான் இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

8. நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். எவருக்கும் எதற்கும் நன்றியை வெளிப்படுத்துங்கள்.

9. உண்மையற்றவர்கள், எதிர்மறைச் சிந்தனை உள்ளவர்கள், சோம்பல் மிக்கவர்கள் ஆகியோரோடு உறவிருந்தால் உடனே...உடனே...துண்டியுங்கள்.

10. அனுபவம் மிக்கவர்களிடமும், சாதித்தவர்களிடமும் கற்றுக் கொள்ளுங்கள்.

11. மற்றவர்களின் கோணத்திலிருந்தும் விஷயத்தைப் பாருங்கள். எல்லோருக்கும் எது நல்லதோ அதைச் செய்யுங்கள். இது சில உடனடி இழப்புகளை ஏற்படுத்தினாலும் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன் கொடுக்கும்.

12. முழுமையாக ஆராய்ச்சி செய்து, நன்மை தீமைகளைப் பட்டியல் போட்டு, ஒவ்வொன்றையும் எழுதி வைத்துக் கொண்ட பின்னரே புதிய தொழிலில் இறங்குங்கள். திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முழு முனைப்போடும் உறுதியோடும் இருங்கள்.

13. ஆழ்ந்த கவனமும், தீவிர மன உறுதியும் உள்ளவர்களுக்கே வெற்றிகள் சாத்தியம். மற்றவர்கள் உங்களைப் பார்த்து கேள்விகள் கேட்பதற்கு முன்னால் உங்களை நீங்களே கேள்விகள் கேளுங்கள்.

14. உங்கள் தொழிலின் மிக முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களை உருவாக்குவதும், தக்கவைத்துக் கொள்வதும் தான். அதற்கு வாய்ப்பாக, தொழிலில் புதுமைகளைப் புகுத்திக் கொண்டே இருங்கள்.

15. எந்த விஷயத்தையும் இலவசமாகப் பெறாதீர்கள். விலை கொடுக்கும்போது தான் உங்களுக்குத் தேவையான தரத்தை நீங்கள் நிர்ணயிக்கிறீர்கள்.

16. வாழ்வில் எல்லா அம்சங்களுமே உங்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடாது. போராடவும், புதிய வழிகளை உருவாக்கவும் எப்போதும் தயாராக இருங்கள்.

17. புதிய யோசனைகளை உருவாக்குங்கள். அவற்றை உங்களுடன் இருப்பவர்களுக்கும் புரிகிற விதமாக எடுத்துச் சொல்லுங்கள். ஆதாயம் என்பது பணம், மனிதர்கள், புதிய உத்திகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது என்பதை மறவாதீர்கள்.

18. காரணங்கள் சொல்லிப் பழகிவிட்டால் உங்கள் எல்லாத் தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்கத் தொடங்குவீர்கள். இது தர்க்கரீதியாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வது தான். தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளுங்கள்.

19. உங்கள் லட்சியங்களை உயிராக மதியுங்கள். அவற்றை எட்டுவதற்கான எல்லாப் போராட்டங்களையும் உற்சாகமாக எதிர்கொள்ளுங்கள். சோம்பலாலோ, சலிப்பாலோ, அவ நம்பிக்கையாலோ சற்றும் பின்வாங்காதீர்கள்.

20. உங்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள், உங்களையும் அறியாமல் உங்கள் குணாதிசயங்களைப் பாதிக்கக்கூடும். எவரோடு பழகினாலும் எச்சரிக்கையோடு பழகுங்கள்.

21. உங்களின் பல குறைகளை மற்றவர்கள் மறக்கச் செய்வது, உங்கள் உற்சாகம் தான். எனவே உங்கள் உற்சாகம் ஒரு போதும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

22. ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, ஒய்வு இவை மூன்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கான அடித்தளங்கள். அதனால் சாப்பாடு விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

23. போதிய நிதி ஆதாரங்களோ, செயல்திறனோ, சந்தைப்படுத்தும் சக்தியோ இல்லாமல் எந்தப் பிஸினஸையும் புதிதாகத் தொடங்காதீர்கள்.

24. உங்கள் தொழிலின் ஏதாவது ஒரு அம்சத்திற்காக யாரையாவது சார்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏமாறத் தயாராகி விட்டதாக அர்த்தம். அதனால் எந்தத் துறையில் இருக்கிறீர்களோ, அதில் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

25. உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறதென்றால் சற்றும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அச்சமில்லாமல் வாதாடுங்கள். உங்கள் உரிமையை நிலை நாட்டப் போராடுங்கள். இந்தப் போராட்ட குணம் உங்களுடைய "will power" - ஐ அதிகரிக்கும்.

26. எதையும் நீண்ட காலக் கண்ணோட்டத்தோடு பாருங்கள். காலப்போக்கில் சில விஷயங்கள் ஒத்துவராது என்று தோன்றினால் ஆரம்பத்திலேயே அதனைத் தவிர்த்து விடுங்கள்.

27. நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டோ, சபலங்களுக்கு உட்பட்டோ முதலீடு செய்யாதீர்கள். முழுமையாக ஆராய்ந்த பிறகு எடுக்கும் முடிவுகள் தான் உங்களைக் காப்பாற்றும்.

28. உங்கள் போட்டியாளரால் நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளில் செயல்படுங்கள். போட்டி என்று வரும்போது போர்க்குணமும், விடாமுயற்சியும் வெளிப்படும் விதமாகக் கிளர்ந்தெழுங்கள்.

29. உங்களைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு ஏற்படாது. முதல் வாய்ப்பிலேயே முழு வீச்சில் இயங்குங்கள்.

30. தரமான மனிதர்களோடு, பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படும் போது நீண்ட கால வெற்றி நிச்சயமாக சாத்தியம்.

31. உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். "நடப்பதெல்லாம் நன்மைக்கே " என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

32. ஒன்றை நன்றாகப் புரிந்துக் கொண்டு பிறகு காரியத்தில் இறங்குங்கள். கண்மூடித்தனமான நம்பிக்கையோடு காலை வைக்காதீர்கள்.

33. தனிப்பட்ட ஆதாயம் ஒன்றைப் பெறுவதற்காக ஏமாற்ற முயலாதீர்கள். மற்றவர்களின் நலனைக் குலைப்பதின் மூலம் பெறுகிற ஆதாயமானது எந்தப் பயனும் இல்லாதது.

34. பலரிடமும் நல்ல பெயர் பெற வேண்டும் என்பதற்காக, தகுதியுள்ளவர்களையும், தகுதி இல்லாதவர்களையும் சமமாக நடத்தாதீர்கள். அத்தகைய சமரசங்கள் தாழ்ந்தவர்களைத் தலைதூக்க வைத்துவிடும்.

35. எல்லாவற்றைப் பற்றியும் அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதே நேரம் அந்த அபிப்ராயங்களை மாற்றிக் கொள்ள, போதிய காரணங்கள் இருந்தால் மாற்றிக் கொள்ளத் தயங்காதீர்கள்.

36. காலங்காலமாகச் செய்யப்பட்டு வந்தாலே ஒன்று சரியானதென்று பொருளல்ல. எதையும், 'ஏன்?' என்ற கேள்வியோடு அணுகுங்கள். ஏற்றுக்கொள்ளக் கூடியவை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள். எதற்கு வம்பு என்ற சமாதானத்தோடு, எல்லோரும் செய்வதை உடன்பாடில்லாமல் செய்யாதீர்கள்.

37. வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். சவால்கள் சுவாரஸ்யமானவை. உறவுகள் முக்கியமானவை. ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடத்தைக் கற்றுத் தருபவை. எனவே விழிப்புணர்வோடும், ரசிப்புணர்வோடும் ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ளுங்கள்.

38. கரையில் இருக்கும்வரை குளிர் பற்றிய கவலை, நதியில் இறங்கியபின் நடுக்கம் இருக்காது. தயங்கி நிற்கும்வரை தடுமாற்றம், தெளிவு வந்ததும் தொடங்கிவிடுவதே நல்லது.

39. உடல், உள்ளம், தொழில், உறவுகள், ஆன்மீகம் ஆகிய அத்தனை அம்சங்களுக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறீர்கள் என்றால் வாழ்வை முழுமையாக வாழ்கிறீர்கள் என்று பொருள்.

40. தெரியாத விஷயங்களைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். வெளிப்படையாகக் கேளுங்கள். கற்றுக் கொள்வதிலிருந்தே ஒரு நல்ல பண்பை பிறருக்குக் கற்றுக் கொடுத்தவர் ஆகிறீர்கள்.

41. அன்றாட வேலையிலும் சரி, ஒய்விலும் சரி, நீங்கள் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறதா என்று பாருங்கள். மற்றவை தாமாகவே வரும்.

42. ஒன்றைக் கற்றுக் கொள்ளும் போது நீங்கள் மெளனமாயிருக்க வேண்டும். நீங்கள் கற்றுக் கொடுக்கும் போது மற்றவர்கள் மெளனமாயிருக்க வேண்டும். கேள்வி கேட்கும் போது பதில் தான் முக்கியமே தவிர, கேட்பவர் அல்லது சொல்பவர்களின் அலங்காரம்  முக்கியமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.

43. நிரந்தரமான மகிழ்ச்சி என்பது உங்களுக்கு வெளியில் இருந்து வரவே முடியாது. மகிழ்ச்சியாக இருப்பதென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் வெளிச்சூழலில் நிகழ்கிற எந்த மாற்றமும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

44. நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் சரி. அதனை அடுத்தவர்கள் அறிந்து கொண்டால் "நீங்கள் தர்மசங்கடமாக உணர்வீர்களா" என்று சிந்தியுங்கள். அப்படி சங்கடம் தரக்கூடிய அம்சங்களை உங்கள் வாழ்விலிருந்து தவிர்த்து விடுங்கள்.

45. ஒருவர் தமது நேர்மை குறித்து வெகுவாக அலட்டிக் கொண்டார் என்றால், அவரது நேர்மை சந்தேகத்துக்குரியது என்று பொருள்.  தங்கள் நேர்மை பற்றி பேசுவதற்குக் கூச்சப்படுவது தான் நேர்மையின் நிஜமான அம்சம்.

46. ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளுவதற்கு ஆகிற நேரம், நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கலாம். ஆனால் கற்றுக் கொண்டதால் ஏற்படுகிற நன்மைகளின் அளவே நீங்கள் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருக்கலாம். எனவே பொறுமையோடு எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள்.

47. அறிவார்ந்த மனிதர் தம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார். பேரறிவாளர்களோ அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். தனக்கு வந்தால் தான் திருந்துவேன் என்று நினைப்பவரோ தோல்விகளையும் வீழ்ச்சிகளையும் தேடிப் போகிறார்.

48. பலவீனங்களைச் சரி செய்வதும், பலங்களைப் பலப்படுத்துவதும், உறவுகளை மேம்படுத்துவதும், உணர்வுகளைச் சீர்படுத்துவதும், ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தால், உங்கள் வெற்றியை நீங்கள் நினைத்தால் கூடத் தடுக்க முடியாது.

49. உங்கள் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் சிலர் உறுதுணை புரியலாமே தவிர அதற்கான அடிப்படைக் காரணம் நீங்கள் தான். எனவே வளரவோ, வளம் பெறவோ உங்களையே சார்ந்திருங்கள். "அடுத்தவர் கை தூக்கி விட்டால் தான் உயருவேன்" என்று பிடிவாதம் பிடிப்பதை விட்டு விடுங்கள்.

50. முயன்று பெற்ற ஒன்று தான் முழுமையான மகிழ்ச்சியைத் தருவது. உழைத்துப் பெறுகிற ஒன்று தான் உங்களால் உரிமை கொண்டாடக்கூடியது. அதனால் 100% உழைப்பு தான் உங்களை நம்பர் ஒன் ஆக்கிடும். 
Source: Snehithi Magazine

No comments:

Post a Comment